தமிழே எங்கள் உயிர்

தமிழே எங்கள் உயிர் !
————
உயிரும் மெய்யும்
உயிர்மெய் யாவும் /
உயிர்கள் தோன்றா
உலகினில் தோன்றி /

காதலும் வீரமும்
கண்ணெனக் காத்து /
மோதலும் மானமும்
முதலாய்க் கொண்டவள்/

அன்பும் அறனும்
அடிப்படை என்று /
இன்பம் துன்பம்
இயல்பெனக் கண்டவள் /

இலக்கிய வானின்
எல்லையைத் தொட்டு /
துலக்கிடும் இலக்கணம்
தொகுத்தே அளித்தவள் /

எட்டுத் தொகையும்
பத்துப் பாட்டும் /
எட்டாப் புகழின்
கீழ்மேல் கணக்கும் /

வளரும் அறிவியல்
வாய்த்த கணினியை /
எளிதாய் ஏற்றாள்
இன்னொரு துறையாய் /

மாறிடும் கால
மாற்றம் கண்டு /
தேறினாள் புதிதாய்
தேன்சுவைக் கன்னி் /

அமிழ்தாய் இனிக்கும்
அருமை செம்மொழி /
தமிழே எங்கள்
உயிரே போற்றி !!

-யாதுமறியான்-

எழுதியவர் : யாதுமறியான். (26-Jan-24, 5:49 pm)
சேர்த்தது : யாதுமறியான்
Tanglish : thamizhe engal uyir
பார்வை : 71

மேலே