சின்ன சின்ன ஆசைகள்
அன்றுவந்த வெண்ணிலா தந்துபோன கனவு
வென்றுவிட்ட என்மனதில் வெந்துவிடும் நினைவு
ஒன்றுபட்டு ஒத்தறியா விந்தையான உறவு
என்றுவரும் என்கிறேங்கி இறங்கவில்லை உணவு
பால்நிலா தினமும்வந்து பருவராகம் பாடும்
வேல்விழி யில்விண்மீன் கள்ஓடிவிளை யாடும்
நூலிடை யில்நூறுமுறை நூலவிழ்த்து நாளும்
காலயர்ந்து கையயர்ந்து கன்னிமடி வீழும்
கோவைப்பழக் கோதையிதழ் போதைக்கொள்ளச் செய்யும்
பாவைமடி மீதுதினம் பருவமழை பெய்யும்
தேவையவள் சேவையென்று தேன்கவிதை நெய்யும்
பூவைசுகம் கண்டுவிட்டால் சாவுமென்ன செய்யும்
மஞ்சள்மலர் மேனியிலே மாங்கனிக ளாடும்
மஞ்சம் வர வேற்றகுயில் மோகனமும் பாடும்
பஞ்சணையில் படர்ந்திருக்கும் பவளமல்லிக் காடும்
வஞ்சியினை அணைத்தமனம் வாழ்விலெதை நாடும்
அந்திநேர மானவுடன் அந்தசுகம் வேண்டும்
பந்திபரி மாறிடவே பத்தினியும் வேண்டும்
சிந்திவிழும் தேன்மலர்கள் சிரித்துவர வேண்டும்
அந்தசுகம் இல்லையெனில் சாகும்வரம் வேண்டும்
முன்னழகுப் பின்னழகு முத்தழகுக் கண்டு
முன்னாடி வந்ததம்மா முகிலழகும் இன்று
உன்னழகு எல்லாமே என்னுடைய தென்று
இந்நாளில் எழுதிவிட்டேன் இன்கவிதை யொன்று
-- வெ.பசுபதி ரங்கன்