சாக்லேட் சாக்லேட்

சாக்லேட் சாக்லேட்
எனக்கு இப்பொழுது வயது நாற்பது.ஒரு தனியார் அலுவலகத்தில் தலைமை அதிகாரி. காலை
சென்றால் மாலை வீடு வருவது அந்திம நேரம் அல்லது இருட்டிய பின்பு தான்.என் மனைவிக்கு
இந்த வாழ்க்கை பழகி விட்டதால் ஒன்றும் பேசாமல் எப்பொழுது நான் வந்தாலும்
இன்முகத்துடன் என்னை வரவேற்ப்பாள்.திருமணமாகி எட்டு வருடங்களுக்கு பின் ஒரு பெண்
குழந்தை எங்களுக்கு பிறந்தது.அந்த மாணிக்கத்தை நாங்கள் அனபையே ஊட்டி வளர்த்தோம்
என்றால் அது மிகையாகாது. அந்த நேசிப்பில் என்னுடையது ஒரு கண்மூடித்தனமானது குழந்தை
என்ன கேட்டாலும் நான் அதை வாங்கி வருவேன் அவள் கண்கலங்குவதை காண சகிக்க
முடியாது.என் மனைவி நேசிப்பாள் அத்துடன் கண்டிப்பும் சேர்த்து குழந்தைக்கு வேண்டியதை
மட்டும் கொடுத்து அதன் ஆரோக்கியத்தை காத்து அன்புக்கு ஒரு வரைகோடு வைத்து அதன்
உள்ளே அந்த குழந்தைக்கு புரியும் வகையில் வைத்திருப்பாள்.ஆகவே குழந்தை என்னிடம் தனக்கு
வேண்டியதை பெற சிறிது கலங்கிய கண்களை காட்டி தனக்கு வேண்டியதை பெற்று சிரிப்போடு
அம்மாவிடம் செல்லும். சில நேரம் குழந்தைக்கு கிடைக்கவேண்டிய சொற்கள் என் மீது வீசப்படும்.
எனக்கு மாலையில் கிடைக்கும் சில மணிநேரங்களில் குழந்தைக்கு பள்ளி பாடம்,பள்ளியில்
சொல்லும் ஆங்கில துவக்க பாடல்கள் ஆகியவற்றை சொல்லிக்கொடுக்கும் பொறுப்பு.குழந்தை
அதை நன்றாக கூறி முடித்ததும் அதற்க்கு ஒரு சாக்லேட் பரிசு என வழக்க படுத்தியதால் அது
என்னிடம் மகிழ்வுடன் பயில வரும்.

அன்று என்னமோ தெரியவில்லை குழந்தை கதறி அழ ஆரம்பித்தது குழந்தையை எப்படி
சமாதானப் படுத்துவது என்றே தெரியவில்லை. சிரிக்கும் போது தேவகானமாக காதில் விழும்
குழந்தையின் சிரிப்பு அழும் போது துன்பமாக ஆகி விடுகிறது என்னமோ தெரியவில்லை.

அழுதால் கேட்டது கிடைத்து விடும் என்பதுதான் ஒரு குழந்தையின் முதல் பாடம். என் குழந்தை
அழக்கூட வேண்டாம் கண்களில் சோகத்தை காட்டினாலே அது கேட்டது கிடைத்துவிடும்.ஒரே
குழந்தை வருடங்களுக்கு பின் தவம் செய்து பெற்றது. பெண்களின் ஆயுதம் கண்ணீர் என்பார்கள்
பலர் . இதுவும் பெண்குழந்தை வேறு. சாமான்யத்தில் மசிந்து விடுமா? என்ன சமாதானப்படுத்தியும்
அழுகை ஓயவில்லை. மாறாக இன்னும் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்து விட்டது.
விஷயம் இதுதான்.கே.ஜி படிக்கும் அவளுக்கு ரைம்ஸ் சொல்லிக் கொடுப்பது தகப்பனாகிய எனது
தினசரி கடமையாக ஆகிவிட்டது. அவள் வெற்றிகரமாக ரைம்ஸ் சொல்லி முடிக்கும் போதெல்லாம்

இரவு அலுவலகம் திரும்பும் போதோ அல்லது உடனேயோ அவளுக்கு பிடித்த ஒரு சாக்லேட்டை
வாங்கிக் கொடுப்பது வழக்கம்.
உளவியல் படிக்கும் போது பாவ்லோவியன் மணியோசை, நாயின் உமிழ்நீர் என்று
படித்ததையெல்லாம் இவ்வாறாக செயல்முறையில் பரிசோதிக்க துணிந்து இப்படி மாட்டிக்
கொள்வேன் என்று நினைக்கவில்லை.
வழக்கம் போல் இப்போதும் ஒரு நர்சரி பாடலை வெற்றிகரமாக முழுமையாக சொல்லி முடித்தவுடன்
சாக்லேட்டு கேட்டது குழந்தை. வாங்கிக் கொடுக்க முடியாதபடி ஒரு சிக்கல்.
சமீபத்தில்தான் அவளுக்கு கடுஞ்சுரம் வந்து சளி அதிகமாகி, மூச்சு விட அவதிப்பட்டு, நாங்கள் பயந்து
போய் மருத்துவரிடம் தூக்கிக் கொண்டு ஓடினோம். அவரோ குழந்தைக்கு குளிரான மற்றும்
இனிப்பான பொருட்களை கொடுக்காதீர்கள் என்றும் அரிசி கஞ்சி மட்டும் கொடுக்குமாறு
அறிவுறுத்தினார். இன்னும் கூட அவளுக்கு முழுமையாக குணமாகததால் எந்த இனிப்பு பொருளையும்
வாங்கித்தர நான் துணியவில்லை. இந்த நிலையில்தான் இந்த பெருங்குரலெடுத்த அழுகை.
எப்படியாவது இப்போதைய அழுகையை நிறுத்தி விடலாம் என்று மெதுவாக கண்ணா
"சாயந்தரம் பீச்சுக்குப் போகலாம் என நான் சொல்ல "
"எனக்கு ஒன்னும் வேணாம்" என்றாள் கொஞ்சம் அழுகையை நிறுத்தியபடி.
"உனக்கு பிடிச்ச டாம் அண்டு ஜெர்ரி சி.டி. வேணும்னா போடட்டுமா?"
"ஹீம்...ஹீம்.வேண்டாம் போ ..." என்றாள் பிடிவாதமாக.
பின்பு நான் அவளுக்கு பிடித்ததையெல்லாம் பட்டியலிட்டு காட்டியும், அவளை வழக்கமாக சிரிக்க
வைக்கும் யுக்தியான குரங்கு சேஷ்டையெல்லாம் செய்து காட்டின செயல்கள் எல்லாம் நம்
அரசியல்வாதிகள் காவிரி தண்ணீருக்காக நடத்திய சம்பிரதாய பேச்சு வார்த்தைகள் போல்
தோல்வியில் முடிந்தன. நான் கொஞ்சம் பொறுமையை இழந்து
"அப்ப சாக்லேட்டுதான் வேணுமா என கோபத்தோடு அவளை பார்த்து கடும் சொற்களையும்
உதிர்த்தேன் ... "

அவள் அதிர்ந்து போய் தன் அழுகை சத்தத்தை இன்னும் கூட்டி வைக்க, வேறு வழியின்றி அவளிடம்
சரணாகதியடைந்தேன். மிகவும் மெல்லிய குரலில் ரகசியமாய்,
"இன்னிக்கு சாயங்காலம் வாங்கிட்டு வரேன். அம்மாவுக்குத் தெரிய வேணாம், என்ன? "
குழந்தை சட்டென்று சுவிட்சை அணைத்தாற் போன்று தன் அழுகையை நிறுத்தி, போனசாக ஒரு
புன்னகையும் பூத்தது.
இவ்வளவு களேபரத்திற்கும் சமையல் அறையை விட்டு வெளியே வராத என் மனைவி, நான் மெல்லிய
குரலில் சொன்னதை சரியாக மோப்பம் பிடித்து விட்டு"உங்களுக்குப் பட்டதெல்லாம் போதாதா.
இப்பத்தானே அவள் கொஞ்சம் கொஞ்சமா குணமாகிகிண்டு வரா. டாக்டர் சொன்னதையெல்லாம்
மறந்துட்டீங்களா. உங்களாள தான் அவ கெட்டுப் போறதே. கேக்கறதையெல்லாம் வாங்கிக் கொடுத்து
கெடுத்து வெச்சிருக்கீங்க. அதே மாதிரி என்கிட்டயும் எதிர்பாக்கறா. எல்லாத்துக்கும் அழுது புடிவாதம்
புடிக்கிறா. உங்களுக்கென்ன, மகராசனா ஆபிஸ் போயிடுவீங்க. இங்க நான் இல்ல அவளை
வெச்சுக்கிட்டு அவஸ்தை படணும்.

போன முறை உடம்பு சரியில்லாமப் போயி, நீங்களும் இல்லாம ஆஸ்பத்திரிக்கு கொண்டு
போறதுக்குள்ள எவ்வளவு அவஸ்தைப்பட்டேன். இப்ப போயி அவளுக்கு சாக்லேட் வாங்கிக்
கொடுக்கறேன்னு சொல்றீங்களே, ஏதாவது இருக்கா உங்களுக்கு...."
என்று அவள் தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குபவர்கள் போல் மூச்சு விடாமல் பேசிக் கொண்டே
போக எனக்கு என் மேனேஜர் ஞாபகம் வந்து, அலுவலகத்திற்கு நேரம் ஆனதை உணர்ந்து
பரபரப்பானேன். இந்த உரையாடல்களால் தன்னுடைய சாக்லேட்டை இழந்து விடுவோமோ என்று
நம்பிக்கையை இழந்து மீண்டும் அழ ஆரம்பித்த குழந்தையை, என் மனைவிக்கு தெரியாமல் தனியாக
அழைத்துப் போய் 'அப்பா சொன்னா கண்டிப்பா வாங்கித்தருவேன்.என்ன' என்று சமாதானப்
படுத்தினேன்.

அலுவலக பணிகளுக்கிடையிலும் சாக்லேட் கேட்டு அழுத குழந்தையின் முகமே நினைவில் நின்று
கொண்டிருந்தது. மெதுவாக வீட்டுக்கு போன் செய்து 'குழந்தைக்கு உடம்பு எப்படியிருக்கிறது' என்று
மனைவியிடம் விசாரித்தேன். பக்கத்து பிளாட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறாள் என்ற செய்தி
கிடைத்தவுடன் மனம் நிம்மதி அடைந்தது. அலுவலகம் முடிந்தவுடன் குழந்தைக்குப் பிடித்த
சாக்லேட்டை வாங்கி பத்திரப்படுத்தினேன்.
வீடு திரும்பியவுடன் வழக்கத்திற்கு மாறாக வீடு அமைதியாக இருந்தது. மனைவி வழக்கம் போல்
தொலைக்காட்சியில் பல சானல்களில் நியூஸ் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்க, ஒரு கரடி
பொம்மையோடு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை ரகசியமாக பால்கனிக்கு அழைத்துச்
சென்று ட்ட்டடாங் என்று ம்யூசிக் எல்லாம் கொடுத்து சாக்லேட்டை எடுத்து நாடகப் பாணியில் உயரே
தூக்கிக் காட்டினேன். குழந்தையின் கண்களில் சட்டென்று சுவிட்ச் போட்டாற் போல் பல்ப் எரிய,
கண்களில் குறும்போடு கை சாக்லேட்டை நெருங்கியது.
"அம்மாக்குத் தெரியாம இங்கேயே சாப்பிட்டுடு, என்ன?"
குழந்தையும் ஒரு ரகசிய விளையாட்டை விளையாடும் உற்சாகத்தோடு ஒப்புக் கொண்டது. என்
மனைவி கவனம் கலையாமல் இன்னும் தொலைக்காட்சிதான் பார்த்துக் கொண்டிருக்கிறாள்
என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டேன். ஒரு கொலைகாரனின் உஷார்த்தனத்தோடு சாக்லேட்
உறையையும் கீழே போட்டு விடாமல் பத்திரப் படுத்தினேன். குழந்தையின் பார்வையில்
இப்போதுதான் 'எங்க அப்பா' என்கிற உணர்வு தெரிய சமயத்தை வீணாக்காமல் ஒரு முத்தத்தையும்
அவளிடமிருந்து பெற்றுக் கொண்டேன்.
கட்டிலில் குழந்தை உறங்கி விட்டிருக்க, என் மனைவி என்னிடம் அக்கம் பக்கத்து இராமாயணத்தை
எல்லாம் ஒப்பித்தபின், குழந்தையை பார்த்தபடி சொன்னாள்.
"போன வாரமெல்லாம் மூச்சு விடும் போது 'கர்கர்' னு சத்தம் வரும். இப்பத்தான் கொஞ்சம் இல்லாமல்
இருக்குது. மூன்று பாட்டில் மருந்து கொடுத்தப்புறம் இப்பத்தான் பரவாயில்லாம இருக்கா. இதுல
நீங்க வேற சாக்லேட் வாங்கிக் கொடுக்கறேன்னு சொன்னப்புறம் எனக்கு ரொம்பம் கோபம்
வந்துடுச்சு. அதான் காலையிலே அப்படி பேசிட்டேன். சாரி என்றாள் "

அவள் பேசிக் கொண்டே போக, எனக்கு குற்ற உணர்வு அதிகமாகிக்கொண்டே போனது. நமக்குதான்
குழந்தையின் மீது சரியானபடி அக்கறையில்லையோ, உடம்பு சரியில்லை என்று தெரிந்தும் எப்படி
சாக்லேட் வாங்கிக் கொடுத்தேன். ஏதாவது ஆகிவிட்டதென்றால் என்ன செய்வது ... என்றெல்லாம்
குழம்பிப் போனேன்.
பிறகு ஒருவழியாக மனதை தேற்றிக்கொண்டு சாக்லேட் வாங்கிக்கொடுத்த விஷயத்தை
சொல்லிவிடலாம் என்று மன்னிப்பு கேட்கும் குரலில் ஆரம்பித்தேன்.
"....அது வந்து குழந்தை காலைல ரொம்ப அழுதாளா?...."

.ம்...
"சாக்லேட் வாங்கித்தரலேன்னா அழுவதை நிறுத்த மாட்டாள் போல இருந்தது. அதான்
சாயந்திரம் வாங்கித் தரேன்னு பொய் சொன்னேன். ஆனா... யோசிச்சு பார்த்ததில,
சாயந்திரமும் நான் சாக்லேட் வாங்கிட்டு வரலைன்னா.. ரொம்ப ஏமாந்து
போயிடுவாளேன்னு நெனச்சு....."
".. நெனச்சு..."
"இப்ப வாங்கிட்டு வந்தேன். பால்கனியிலே வெச்சு சாப்புட்டா. இப்பத்திக்கு உனக்குத்
தெரிய வேணாமேன்னு நெனச்சேன். அப்புறமா சொல்லிக்கலாம்னு... ஸாரி....
நான் என் வாக்கியத்தை முடிக்குமுன்னரே, அவள் என்னை மெலிதாக திடுக்கிட வைத்த
அந்த கேள்வியை கேட்டாள்.
"அப்படின்னா, நீங்களும் சாக்லேட் வாங்கிக் கொடுத்தீங்களா?..."
ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்து கொள்ள குழந்தை தூக்கத்தில் ஒரு புன்சிரிப்பை முகத்தில்
காட்டியது போல தோன்றியது.
“ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
இருவருரின் துடிப்பினிலே விளைவது மழலையடா “
என்ற வரிகளை நான் மனதினில் நினைத்து பார்த்தேன் என் வாய் என்னை அறியாமல்
அதை வெளியே பாட வைத்தது.

எழுதியவர் : கே என் ராம் (30-Mar-24, 3:40 pm)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : saklet saklet
பார்வை : 48

மேலே