உங்களுக்காக ஒரு கடிதம் - 41

உங்களுக்காக ஒரு கடிதம் - 41
30 / 03 / 2024
அன்பு வாக்காளர்களே....வணக்கம். நம்ம தொகுதியில்.... நமது அண்ணன் செருப்பு சின்னத்தில் நிற்கிறார். உங்களுக்கு செருப்பாய் தேய்ந்து தொண்டாற்ற வருகிறார்.அவரை வரவேற்று ...உங்கள் வீட்டு பிள்ளை அண்ணனை செருப்பு சின்னத்தில் மறக்காமல் வாக்களித்து பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய உங்கள் பாதம் தொட்டு வேண்டுகிறோம். ஓ...சாரி சாரி...தேர்தல் வந்து விட்டதல்லவா..எங்கப் பார்த்தாலும் எந்தப் பக்கம் திரும்பினாலும் கூழை கும்பிடும்...கூத்தும் கும்மாளமும் என்னை எங்கோ இழுத்துப் போய்விட்டது.
அன்பு இளம் வாக்காளர்களே...உங்களுக்காகத்தான் எழுத தொடங்கினேன்.ஆனால் கூட்டம் கூட்டமாய்...முப்பத்து இரண்டு பற்களும் முழுதும் தெரியும்படி சிரித்து கொண்டு "தோழா.. நண்பா.."என்று தோள்மீது கைபோட்டு, அணைத்து தொகுதியில் சுற்றி கொண்டிருக்கும் வேடந்தாங்கல் பறவைகளை பார்க்கும்போதும்...அவர் வாக்குகளை கேட்கும்போதும்... கொஞ்சம் பாதை மாறிப்போய்விட்டேன். எனக்குத் தெரிந்ததை...என் அனுபவங்களை உங்களோடு பகிர்வதில் மகிழ்வடைகிறேன். ஆனால் எத்தனை தூரம் உங்களுக்கு பயனளிக்கும் என்று என்னால் யூகிக்க முடியவில்லை. சொல்வது என் கடமை. அதில் சரியெனப்பட்டதை நினைத்து ...உங்களுக்குள் அலசி ஆராய்ந்து...சுயமாக சிந்தித்து செயல் படுங்கள் என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
முதல் முறை ஓட்டுபோடப்போகும் கன்னி வாக்காளர்களே... உங்களுக்காக ப்ரத்யேகமாய் எழுத முயற்சிக்கிறேன். முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் உங்கள் உரிமையாய் நிலைநாட்டப்போகிறீர்கள். அது மட்டுமல்ல இந்த சுதந்திர நாட்டின் உரிமையுள்ள பிரஜை என்று அங்கீகாரம் கிடைக்கப் போகிறது. இனி நீங்கள் விளையாட்டு பிள்ளைகள் இல்லை. உங்களுக்கும் பொறுப்பு வந்து விட்டது. அதாவது உங்களை ஆள்வதற்கு பொறுப்பான...பாதுகாப்பான ....வலுவான... நேர்மையான ஒரு தலைமையை தேர்ந்தெடுக்கும் பொறுப்பும் உரிமையும் உங்களுக்கு வந்து விட்டது. ஒரு புது அனுபவம். வாழ்வில் ஒரு படி முன்னேறியிருக்கிறீர்கள். நன்றாக யோசித்து ...ஆராய்ந்து முடிவெடுத்து ஒட்டு போடுங்கள். உங்கள் கையில் அதிகாரமும் சக்தியும் இருக்கிறது. உங்கள் கையில் இருக்கும்வரை அதற்கு சக்தி அதிகம். கையை விட்டு போய்விட்டால் அவ்வளவுதான். அதன் பிறகு நீங்கள் வருந்தியோ... யோசித்தோ பிரயோஜனம் இல்லை. யோசி...யோசி...நன்றாய் யோசி.
"அரசியல் ஒரு சாக்கடை" என்றொரு வதந்தி ஏற்கனவே உலகெங்கும் இருக்கிறது. ஒரு விதத்தில் உண்மைதான். ஆனால் அந்த சாக்கடையை சுத்தம் செய்யும் பொறுப்பு உங்களுடையது. இளம் வாக்காளர்களே. ஏனெனில் எதிர்காலம் உங்களுடையது. உங்கள் வாழ்வை.. உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிப்பது உங்கள் கையில். " பாத்திரம் அறிந்து பிச்சை இடு ". இது ஒரு வேத வாக்கு. பிச்சை என்பதை பிச்சை என்றும் எடுத்து கொள்ளலாம். தர்மம் என்றும் எடுத்து கொள்ளலாம். உங்களை ஆளுவதற்கு ஒரு தலைவனை தேர்ந்தெடுத்து... அங்கீகரிப்பது உங்களின் தருமமாகும். உங்களின் தலையாய கடமையாகும். அரக்கனைத் தேர்ந்தெடுக்காமல் நல்ல மனிதனை, நல்ல மனித நேயம் உள்ள தலைவனை..அரசனை தேர்ந்தெடுங்கள். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று லேசாக...சாதாரணமாக...எடுத்துக்கொள்ளாதீர்கள். ஸ்திரமாக... உறுதியாக முடி விடுங்கள். வல்லரசாக மாற்றி காட்டுவோம் என்று வாய் சவடால் பேசியது போதும். வல்லரசாக மாற்ற நல்ல திட்டங்கள் வேண்டும். நல்ல திட்டங்கள் தீட்ட முற்போக்கு சிந்தனையும் நாட்டுப் பற்றும் நிறைந்த ஒரு உறுதியான தலைமை வேண்டும். என்னதான் தலைமையும், அரசும்... அரசியலும் ஒழுங்காக இருந்தாலும், இளைய சமுதாயமே உனக்குள் இருக்கும் சக்தியையும், ஒற்றுமையையும்...நாட்டுப் பற்றையும் அணையாது...ஓங்கி வளர்த்திட வேண்டும். மனதில் ஆழ பதித்து..அதற்காய் உண்மையுடன் உறுதியுடன் அயராது உழைத்திடல் வேண்டும். எதையும் எதிர் பார்க்காமல்...மன நிறைவோடு, நம் தாய்நாடு, நம் சகோதரர்கள்...நம் வீடு என்கின்ற எண்ணத்தோடு உங்கள் எதிர்காலத்தை நீங்கள் தீர்மானித்து...மக்களாட்சி மலர்ந்திட ... ஊழலற்ற ... உன்னதமான ...
ஒளிவுமறைவு இல்லா நேர்மையான மக்களின் தோழமையான, இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கும் இளைய சிந்தனைகளும்...புதிய வழிமுறைகளும் ...புதிய அரசியலுக்கு புது ரத்தம் பாய்ச்சவும், ஆதரிக்கவும் நல்ல திடமான தலைமையை தேர்ந்தெடுக்க உங்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு அரிய வாய்ப்பு இந்த தேர்தல். சாக்கடை என்று ஒதுக்கி விடாதீர்கள். இறங்கி தூர் வாருங்கள். நாற்றம் நாறும்தான். என்ன செய்ய? கூவத்தில் படகை ஓட்டத்தானே வேண்டும்.
தகுதி உள்ளவர்கள் தயங்காமல்...தைரியமாய் முதல் ஓட்டை போடுங்கள். வயதானவர்கள் பணத்துக்காய் அல்லாமல் குணத்துக்காய் நற்பண்புக்காய், நிதானமாய் யோசித்து ஓட்டை பதிவிடுங்கள். இளைய சமுதாயத்திற்கு முன்னோடியாய்...முன் உதாரணமாய் வாழ்ந்து காட்டுவது உங்களின் கடமை...உங்களின் பொறுப்பு. பொறுப்பாய் செய்யுங்கள். "நெஞ்சில் உரமும் இன்றி..நேர்மை திறனும் இன்றி...வஞ்சனை சொல்வாரடி கிளியே .வாய் சொல்லில் வீரரடி கிளியே " பாரதியார் அன்றே பாடி வைத்துவிட்டார். இன்றும் அது பொருந்தி வருகிறது. அனுபவம் உள்ளவர்களின் வழிகாட்டுதலும் இளைஞர்களுடைய இள வேகமும் ஒன்றாய் இணைந்தால் நம் நாடு வல்லரசாக மட்டும் அல்லாமல் நல்லரசாகவும் மக்கள் அரசாகவும் ஓங்கி உயர்ந்து நிற்கும். இளைய சமுதாயமே வா... வஞ்சனையில் வீழ்ந்து விடாதே..நேர்மையும், உண்மையும், திண்மையும்... கொண்டு இவ்வுலகை ஆள வா... முதல் அடியை உறுதியாய் எடுத்து வை. ஓட்டை மறவாமல் பதிவிடவும். தவறாமல் பதிவிடவும். வாழ்த்துகள்..

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (30-Mar-24, 10:18 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 35

மேலே