மாதர் தம்மை இழுவு செய்யும் மடமை
கண்ணாகும் பெண்ணவளை கடைச்சரக்காய் ஆக்கும்
கேடிகளின் கொட்டமதை ஒழித்திடவே வாரீர் !
புண்ணாக்கி போதைதரும் பொருளாக்கும் நோக்கம்
பாழ்குழியில் வீழ்ந்திடவே படைதிரட்டி வாரீர் !
எண்ணிடவே இன்பந்தரும் இனியவளாம் பெண்ணை
ஏற்றமுடன் வைத்திடவே எல்லோரும் வாரீர் !
பண்ணாகி பாசத்தின் வேராகும் பெண்ணை
பார்போற்ற வைத்திடவே முயன்றிடுவீர் இங்கே !
மனைவியாகி மகிச்சியினைப் பெருக்கிடுவாள் என்றும்
மக்களினை ஈன்றெடுத்து மனையறத்தைப் பேணி
கனவுதனை நனவாக்கி பார்போற்ற வைக்கும்
காரிகையின் தியாகமதை தினமெண்ணிப் பார்பீர் !
பணத்துக்காய் பாசமதை காட்டாது நல்ல
பண்போடு என்றென்றும் யாவரையும் காக்கும்
குணவதியாம் பெண்ணவளை குலமகளாய் கொண்டு
குறைகளைந்து நிறைகண்டு சிறந்திடலாம் என்றும் !
பெண்ணவளைப் பாழாக்கும் காமுகர்கள் கூட்டம்
பாரினிலே ஒழிந்திடவே நன்றுபல செய்வீர்!
கண்ணிரண்டில் ஒன்றென்றே எண்ணிடலும் வேண்டும்
காலமெல்லாம் அன்னவளைக் காத்திடவும் வேண்டும்.
மண்ணதிலே நெல்விளையும் மங்கையர்தம் நெஞ்சில்
மானிடமே தேடுகின்ற அன்பதுவும் தோன்றும்.
விண்மேகம் போலென்றும் பாசமழை தூவ
வஞ்சியரை வைத்திடவே முயற்சிதனைச் செய்வீர் !