சுந்தரப் புன்னகை

மல்லிகைப் பூவாய் புன்னகையை –உன்
முகத்தில் என்றும் தவழவிடு
எல்லைகள் அதற்கு இல்லையன்றோ –அது
என்றும் மகிழ்வைத் தந்துவிடும்.

மின்னல் வானின் பன்னகையாம் –அது
மண்ணில் மழையாய் பொழியவிடும்
இன்னல் வருந்தான் வருந்தாதே – அதன்
இடுப்பை ஒடிக்கத் தயங்காதே..

மழலையின் புன்னகை மயக்கிவிடும் –அது
மனதினை மகிழ்வில் ஆழ்த்திவிடும்
இளமையின் புன்னகை இனிமைதரும் –அது
இதயம் இயங்கிட உதவிவிடும்.

அன்னையின் புன்னகை அன்பாகும் –அது
இயற்கையின் இனிய பண்பாகும்
உண்மை என்றும் புன்னகைக்கும் –அது
உறங்கிக் கிடப்பதும் ஒளிகொடுக்கும்.

மாந்தளிர் மங்கையின் புன்னகையோ –ஒரு
மந்திரம் கொண்டு ஆடவிடும்
பூந்தளிர் பூத்துக் குலுங்கிவிடும் –அதன்
புதுமையில் மனதை மயக்கவிடும்.

புன்னகை மௌனப் பேச்சாகும் –அதில்
புதுப்புது அர்த்தம் உண்டாகும்
எண்ணப் பிழைகள் அகன்றுவிடும்-பின்
இதயம் இலேசாய் மாறிவிடும்.

பொன்நகை சிந்திடும் புன்னகையும் –புதுப்
பெண்ணின் கழுத்தில் பள்பளக்கும்
மென்நகை இதழில் நடனமிடும் –ஆண்
மனதினில் அதிர்வனைக் கொடுத்துவிடும்.

புன்னகை என்பதே சுந்தரமே –அதில்
போதை இருப்பதும் சத்தியமே
நன்மைகள் நாளும் பொங்கிடுமே –வரும்
நோயதும் பயந்து ஓடிடுமே !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (8-Apr-24, 6:16 pm)
பார்வை : 100

மேலே