யாதுமாகி நின்றிடுவாய்

எல்லாமும் தானாகி ஏற்றங்கள் கண்டபோதும்
ஏமாந்து சீரழிந்து அழிகின்ற மானுடமே !
பொல்லாங்கை தினம்விதைத்து பேரிடரை பரவிட்டு
பேதலித்துக் கிடந்துவிடின் பெருமையெல்லாம் நிலைத்திடுமா ?
கொல்லுகின்ற குண்டுகளை கூட்டாளி என்றாக்கி
கட்டிதினம் அணைப்பதெல்லாம் கயமைதரும் செயலன்றோ ?
வில்லலென நீஅலைந்து வீணாகிப் போவதெல்லாம்
வெந்தணலில் எரிகின்ற நிலைதனுக்கு ஒப்பன்றோ ?

போதைதரும் பொருளினையும் பொருள்சேர்க்க விற்பதனால்
பாலகரும் அதைவாங்கப் பைத்தியமாய் அலையுதன்றோ ?
வாதைகொண்டு பலஉயிர்கள் விண்ணுலகம் சென்றபோதும்
விட்டுவிட்டு வாழ்ந்திடவே விரும்பாது கிடக்குதன்றோ ?
பாதையெல்லாம் வேதனையின் பயங்கரத்தைப் போட்டுவிட்டு
பகலிரவு புரியாது பரிதவித்து கிடப்பதுவோ ?
கீதைதனைப் படித்துவிட்டு கீழ்த்தரமாய் நடக்கின்ற
கேடுகெட்ட மானுடமே கரைசேரும் நாள்வருமோ ?

ஆண்டவனைப் படைத்துவிட்டு அல்லலையும் படைக்கின்றார்
அன்றாடம் வணங்கிவிட்டு அநியாயம் புரிகின்றார்!
வேண்டாத மனிதரென்றால் வெட்டிநீயும் வீழ்த்துவிட்டு
வீறுநடை நீ போட்டு வீதியிலே நடக்கின்றார்.
தீண்டாத மானுடரை தெருவோரம் நிறுத்துவிட்டு
தேவைக்கு அன்னவரை துணையினுக்கு அழைக்கின்றார்
கூண்டோடு அவர்வீழ கொள்கையினை தீட்டிவிட்டு
கோபுரத்தில் அமர்ந்துகொண்டு கொண்டாட்டம் போடுகின்றார்

சாதியினை வளர்த்துவிட்டு சரித்திரத்தை மாற்றிவிட்டார்
சந்தடியில் புகுந்துகொண்டு சாதிக்க நினைக்கின்றார்
நீதியினை குழிதோண்டி நிலத்தடியில் புதைத்துவிட்டு
நாற்காலி மீதமர்ந்து நெடுங்கனவு காணுகின்றார்
மீதிவரும் காலமதில் மெத்தனமாய் இருக்காமல்
முந்தநீயும் முயன்றிடுவாய் ! முடிச்சுகளை அவிழ்த்திடுவாய் !
ஆதியிலே பெற்றிருந்த அதிகாரம் அடைந்திடவே
அயராமல் போராடி யாதுமாகி நின்றிடுவாய் !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (8-Apr-24, 6:14 pm)
பார்வை : 64

மேலே