மே -18

மே -18
கொத்தும் பாம்பாய் நின்றார்
கொடிய விடத்தால் கொன்றார்
கொத்துக் கொத்தாய் கொன்றார்
கொடுமை மறையுமே நெஞ்சில்
சித்தம் புரண்டு வாழ்ந்து
சிறுமை புத்தி கொண்டார்
எத்தர் கூட்டம் வீழும்
எழுச்சியும் ஒருநாள் பொங்கும்.

மனித மாண்பு அற்றார்
மிருக உணர்வு உற்றார்
இனிமை மறந்து ஆண்டார்
இன்னல் நாளும் செய்தார்
இனிவரும் காலமும் மாறும்
இடியென விழுந்து தாக்கும்
தனிமைப் பட்டுப் போவார்
தரத்தை இழந்து வீழ்வார் !

இனவெறி அரசியல் தோற்கும்
இனியவை நாட்டில் தோன்றும்
பணவெறிப் பாம்புகள் ஓடும்
பாசப் பிணைப்புகள் கூடும்
உணவு இன்றி வீழ்வார்
ஊரும் துரத்தக் காண்பார்
கனவுகள் எல்லாம் தேயும்
காட்டுத் தர்பார் ஓயும்.

முள்ளி வாய்க்கால் சோகம்
மனதில் என்றும் தொலையா
சொல்லிட சொல்லிட நெஞ்சம்
துடித்துக் கலங்கி வெடிக்கும்
பொல்லார் கூட்டம் ஓடும்
புதுமைகள் பொங்கி ஆடும்
நல்லார் தமிழர் ஆள்வார்
நாட்டை உயர்த்தி வைப்பார் .

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (8-Apr-24, 6:05 pm)
பார்வை : 28

சிறந்த கவிதைகள்

மேலே