யானையும் மூப்பனும்

யானையும் மூப்பனும்-
ராணி வார இதழ் பத்தாயிரம் பரிசு கொடுத்தது

மலையை ஒட்டி சமவெளியான மாந்தோப்புக்குள் குடிசைக்குள் நல்ல உறக்கத்தில் இருந்தாலும் மூப்பனின் காதுக்குள், வெளியே “ஹோவென” இரைச்சலிட்ட வண்ணம் பெய்து கொண்டிருந்த மழையிலும் தட்..தட்..எனும் சத்தம் தெளிவாக கேட்டது. சட்டென உறக்கம் போன இடம் தெரியாமல் போய் கண்ணை விழித்தார். முப்பது வருடங்களுக்கு மேல் சுவாசம் உணரும் யானையின் வாசம்.
வயதின் தளர்ச்சியால் உடனடியாக எழ முடியவில்லை. அப்படியே மல்லாந்த வாக்கில் கட்டிலின் மேல் படுத்து கிடந்தார். ஏதோ பாரமான பொருள் ஒன்று அவர் தலைக்கு மேலும் , அதன் பின் அருகருகே நகர்வதை படுத்தாறே உணர முடிந்தது. ஒரு சமயம் அவர் மேல் தொட்டாற்போல நகர்ந்து போனதும் தெரிந்தது. யானையின் தும்பிக்கை அதுவென்று மனம் முழுக்க அறிந்தாலும், சத்தம் போடாமல் மூச்சை பிடித்து அப்படியே கிடந்தார். என்ன நடந்தாலும் சரி. இனி என்ன வாழ்க்கையில்? எல்லாம் முடிந்து போன பின்னால்.! இப்படித்தான் அவரது எண்ணம் அப்பொழுது மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
அதற்குப்பின் குடிசைக்குள் தெரிந்த அசைவுகள் நின்று போயின. என்றாலும் வெளிப்புறமாய் மரக்கிளைகள் ஒடிவதும், பெரு மூச்சு விடும் சத்தமும் சில நேரங்களில் பிளிறல்களும் கேட்டு கொண்டுதான் இருந்தது. அனேகமாக இரண்டு மூன்று ஆனைகள் வந்திருக்கவேண்டும் என்று மனதுக்குள் நினைத்து கொண்டிருக்கும்போதே இவர் எப்பொழுது தூங்கினார் என்று தெரியவில்லை.
காலை ஐந்து மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது. ஐந்து மணி என்பதை கூட இவர் அலாரமோ, செல்பேசி அழைப்பை கொண்டு தெரிந்து கொள்வதில்லை. அந்த நேரத்தில் குடிசையின் மேல் உட்கார்ந்து இவரை எழுப்பி விடும் மலைக்குருவியின் சத்தம் கேட்டே நேரம் அறிந்து கொள்கிறார்.
கையை படுத்த வாக்கிலேயே கட்டிலின் கீழ் கொண்டு சென்று தடவி பார்க்க அவரது கைதடி கிடந்தது, அதை பற்றியதும், அப்படியே எழுப்பி தரையில் ஊன்றியபடி இவரும் கட்டிலிருந்து தன்னுடைய உடலை எழுப்பி உட்காருகிறார். ஐந்து நிமிடம் உட்கார்ந்தவர் தடியை பலமாக ஊன்றி மெல்ல எழும்புகிறார். அப்பாடி, கொஞ்சம் மன நிம்மதியானது போல் இருந்தது. சில நாட்களாகத்தான் கட்டிலிலிருந்து எழுவதற்கு மிகுந்த சிரமமாக இருக்கிறது, அதனாலேயே கைத்தடி ஒன்றை கட்டிலின் அருகிலேயே வைத்துத்தான் தூங்குகிறார்.
இனி கைத்தடி அவசியமாகப்படவில்லை, என்றாலும் ஒரு வாகுக்காக தரையில் ஊன்றியபடி குடிசை கதவை நோக்கி வருகிறார். கதவு அம்போவென திறந்தேதான் கிடந்தது. நேற்று அவர் அதை இறுக சாத்தி வைத்தது ஞாபகம் இருக்கிறது. நேற்று வந்த ஜீவன் அந்த கதவை உஸ் என்னும் பெருமூச்சிலேயே கீழே விழ வைத்து விட்டு குடிசைக்குள் தன் தும்பிக்கையை விட்டு துழாவி இருக்கிறது.
இது அடிக்கடி நடக்கிறது, ஒவ்வொரு முறையும் எனக்கு உயிர் பயம் இல்லை என்றாலும் மனதுக்குள் ஒரு பரபரப்பு வரத்தான் செய்கிறது.
குடிசைக்கு வெளியே வந்து பார்த்தவருக்கு மழையினால் அந்த இடம் முழுக்க சேறும்,சகதியுமாக இருப்பதையும், மரக்கிளைகள் ஒடிக்கப்பட்டு கிடப்பதையும் பார்த்தார்.
கோபம் வரத்தான் செய்தது, “இதுக வந்தா” இப்படி கலவரம் மாதிரி பண்ணிட்டு போகலையின்னா அடங்காதுங்க, காலை அந்த சேற்றுக்குள் அழுத்தி வைத்து நடந்து தனது காலை கடனை முடிக்க, சற்று தள்ளி சென்று ஒதுக்கமாய் மேற்கூரை சிமிண்ட் சீட் போடப்பட்டு கட்டியிருந்த கழிப்பறையில் அமர்ந்தார்.
முதலில் காட்டு புறமாய்த்தான் சென்று கொண்டிருந்தார். இவரை பார்க்க வந்த பேரன், தாத்தா “ஓண்ணுக்கும் இரண்டுக்கும்” இனி காட்டுப்பக்கம் போக வேண்டாம், இதா இங்கனயே போட்டு கொடுக்கறேன், என்று போட்டு கொடுத்திருக்கிறான். ஒரு விதத்தில் அவருக்கு உபயோகமாகத்தான் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் பக்கத்திலேயே மோட்டார் பம்ப் ஓடும்போது தண்ணீர் வந்து இங்கிருக்கும் தொட்டியிலும் நிரம்பி, அதனை அடைத்து நிறுத்தி கொள்ளவும் ஏற்பாடு செய்து கொடுத்து போயிருந்தான்.
அப்பாடி தனது கோமணத்தை இறுக்கி கட்டியபடி வெளியே வந்தவர், மீண்டும் மரக்கிளைகளை இப்படி ஒடித்து போட்டு விட்டு போயிருந்தவைகளை, பார்த்தபடியே யானைகளை திட்டிக்கொண்டே மீண்டும் குடிசைக்குள் நுழைந்தார்.
“குடிசைக்காலை ஒட்டியபடி ஒரு திண்டு போல கட்டியிருந்த சிமிண்ட் தளத்தில் கொஞ்சம் பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. நல்ல வேளை நேற்று தும்பிக்கையால் துழாவிய நேரத்தில் இதன் மேல் பட்டிருந்தால் இந்நேரம் உடைந்து சாமான்களும் கீழே விழுந்திருக்கும். அதன் மேல் வைத்திருந்த ஸ்டவ் ஒன்றும் கீழே விழுந்திருக்கும். பெரிய ஆச்சர்யம் இப்படி அடிக்கடி கூட்டமாய் வரும் யானைகள் இத்தனை வருடங்களாக தும்பிக்கையில் குடிசைக்குள் துழாவினாலும் ஒரு முறை கூட தன் மீதோ இந்த திண்டின் மீதோ பட்டதே இல்லை.
‘ஸ்டவ்வில்’ கொஞ்சம் சுடு தண்ணீரை காய்ச்சி எடுத்து வெளியே வந்து ஓங்கரித்து வாயை கொப்பளித்து விட்டு, மிச்சம் இருந்த தண்ணீரை அப்படியே குடித்தார். இன்னும் பத்து பதினைந்து நிமிடத்தில் பேரனின் மகன் ‘சின்ன ராசு’ சைக்கிளில் தாத்தனுக்கு சாப்பாடும் , டீ தண்ணியும் கொண்டு வந்து விடுவான். அது வரை அங்கங்கு கிடந்த மரக்கிளைகளை ஒதுக்கி போடுவதில் ஈடுபட ஆரம்பித்தார்.
தாத்தோ தோப்பை தாண்டி ஒத்தயடி பாதையில் சைக்கிளை ஓட்டி வந்த சின்னராசு அங்கிருந்து கூவினான். “மெதுவாடா” இவர் குரல் கொடுக்க, கொடுக்க அவன் பக்கத்தில் சைக்கிளை கொண்டு வந்தவன், அவசரமாய் சாய்த்து நிறுத்தி விட்டு கொண்டு வந்த கூடையை உள்ளே கொண்டு போய் வைத்தான். அதன் பின் வெளியே வந்தவன் அங்கிருந்த அலங்கோலத்தை கண்டு “ஆனைக” நேத்தும் வந்துடுச்சா?
மாங்காயி காப்புக்கு நின்னா வராம என்ன பண்ணும்? வந்து தொலையுதுங்க, இந்த கிளைக, காடைகளை உடைச்சு, பூவெல்லாம் கூட உதிர்ந்து போக வச்சிடுதுங்க, வருத்தமாய் சொன்னார் மூப்பன்.
சரி ‘ஆயா’ சித்த நேரத்துல வந்துடும், நான் ஸ்கூலுக்கு போகணும், நீ உள்ளாற போய் டீயை குடிச்சிட்டு வந்துடு., நான் கிளம்பட்டா? பையன் பதிலை எதிர்பார்க்காமல் சைக்கிளை அழுத்தி அந்த தோப்பை தாண்டி அடுத்து வந்த, வயல், தென்னந்தோப்பு வழியாக சைக்கிளை மிதித்து செல்வதை பெருமையுடன் பார்த்தார். என்ன துடி, இந்த பைய, இவன் அப்பனும் சரி, அவனப்பனும் சரி இப்படித்தான் இருந்தார்கள், மகன் பேரனுக முகத்தை பார்த்துட்டு போய் சேர்ந்துருக்கலாம், அவன் மகனை கல்யாண கோலத்துல கூட பாக்காம போய் சேர்ந்துட்டான். அவனை பெத்த நான் இன்னும் இருக்கேன் இத்தனை வயசாயி.. அவருக்கு மகனை இழந்த துக்கம், மனசை அழுத்தியது.
தூரத்தில் வருவது யாரு? கண்னை சுருக்கி பார்க்க, மருமவள் வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
மருமவளுக்கும் வயசாவுது, என்ர பையனுக்கு இவளை பொண் எடுத்த போது பதினெட்டு இருக்குமா? அதுக்கப்புறம் அவன் கூட இருபது வருசம் குடித்தனம் பண்ணியிருப்பாளா? என் பையன் காளைய புடிச்சு கட்டறேன்னு போயி. அது என்ன கோவத்துல இருந்ததோ அவனை முட்டி கீழே தள்ளி.. அநியாமா புருசனை பறி கொடுத்தா..! எப்படியோ பேரனை வழியாக்கி, அவனுக்கும் ஒரு கல்யாணத்தை முடிச்சு இரண்டு பசங்களை எடுக்க வச்சுட்டா, என் குலத்தை செழிக்க வச்சுட்டா..! மனதுக்குள் மருமகளை பாராட்டி கொண்டார்.
தோப்புக்குள் நுழைந்த மருமகள் கிளைகள் ஒடிக்கப்பட்டு கிடந்ததையும், மாம்பிஞ்சுகளும், பூக்களும் சிதறி இருப்பதை பார்த்தவுடன் இராத்திரி “ஆனைக” வந்துடுச்சா, இப்படி அநியாயத்துக்கு பிச்சு எறிஞ்சுட்டு போயிருக்குதுங்களே..! இருக்கட்டும், இருக்கட்டும் மவன் ஏதாவது வழி பண்ணறேன்னு சொல்லியிருக்கான்.
மூப்பன் திடுக்கிட்டார், மருமவளை அது வரை மனதுக்குள் பாராட்டி கொண்டிருந்தவர், ஐயோ’ ஏதாவது பண்ணி தொலைஞ்சுடுவானே பேரன், இவளும் சொன்னா கேக்க மாட்டாளே, மனதுக்குள் அரற்றியபடி விழுந்து கிளைகளை ஒதுக்கி போட்டபடி இருந்தார்.
நீ எதுக்கு மாமோவ் வயசான காலத்துல இதுகளை இழுத்து கிடக்கே, உள்ள போயி சாப்பிடு, மருமகள் கீழே விழுந்து கிடந்த பிஞ்சுகளையும், பூக்களையும் விளக்கு மாற்றால் மேலோட்டமாய் வார ஆரம்பித்தாள்.
இதற்கு மேல் நின்றால் மருமகள் வைவாள், நிதானமாய் உள்ளே போனவர், பேரன் கொண்டு வந்திருந்த தூக்கு போசியை திறந்தார். கம்பங்களி, உள்ளுக்குள் கருவாட்டு குழம்புக்குள் மிதந்தபடி கிடந்தது. காலைக்கும், மதியத்துக்கு இரண்டு உருண்டை. அதன் மணம் குடிசை முழுவதும் வீசியது. மெல்ல விண்டு எடுத்து வாயில் போட்டவர் சப்புக்கொட்டினார். மவன் போயிட்டாலும், மருமவ நம்ம வயித்துக்கு வஞ்சணை யில்லாம ஆக்கி கொடுத்துடறா, பெருமையில் மனசு மிதந்தது.
வயிற்றில் இறங்கிய கம்பங்களி அப்படியே இவருக்கு கண் அயர்வை தர, நேற்று இரவு யானைகளின் சத்தத்திலும், குடிசைக்குள் தும்பிக்கையில் துழாவியதாலும், தூக்கம் போயிருந்தவருக்கு இப்பொழுது கண்ணை சொருகியது. அதற்கு தோதாக மருமவள் சர்க் சரக் என கூட்டி பெருக்கி தள்ளிக்கொண்டிருந்த சத்தம் தாலாட்டாய் கேட்க கொஞ்சம் கொஞ்சமாக கட்டிலில் படுத்தவர் சிறிது நேரத்தில் தன்னை மறந்தார்.
நான்கைந்து பேர் உரக்க பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டே கண் விழித்த மூப்பன், என்ன சத்தம்? மெல்ல எழுந்து உட்கார்ந்து வாசல் வழியாக பார்த்தார். நல்ல சூரிய வெளிச்சத்தில் வேட்டி கட்டுன கால்கள் மட்டும் தெரிய, யாராய் இருக்கும்? கைத்தடியை எடுத்து ஊன்றியபடி வெளியே நடந்து வந்தார்.
பேசிக்கொண்டிருந்த நால்வரில் ஒருவன் இவர் வரும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவன் என்ன மூப்பு, இராத்திரி ஒரே கரச்சலா? ஊருக்குள்ளயும் கேட்டுட்டுத்தான் இருந்துச்சு, நீ மட்டும் அசராம தோப்புக்குள்ள இருக்கற,
என்னை என்ன பண்ணபோவுது, நாம் அதை சீண்டுனாத்தான் நம்ம மேல கைய வைக்கும், மூப்பு அவனிடம் சொல்ல, நால்வரில் ஒருவனாய் நின்றிருந்த பேரன், அதான் தாத்தாவ் நம்ம தோப்பை சுத்தி கரண்டு கம்பி வேலி போட்டுடலாமுன்னு முடிவு பண்ணியிருக்கோம்.
கரண்டு கம்பியா? மனம் திக்கென்றது, வேணாம்டா சின்னா, நாம மலை அடிவாரத்துல தோப்பை வச்சுட்டு அது வருதுன்னு சொல்றம், அதுக வந்து எத்தனை நட்டமடா நமக்கு கொடுத்துருக்கு, பாவம் பொயிட்டு போவட்டுண்டா.
தாத்தாவ் நீ சொல்லிபுட்டே, ஊருக்காரனுங்க, நம்மளை வையறானுங்க, உன்ற மாங்கா தோப்புக்கு வர்றதுனால வழியில இருக்கற எங்க வயலை எல்லாம் மிதிச்சு நாசமாக்கிடுதுன்னு சண்டைக்கு வரானுங்க, பேச்சியண்ணன் தென்னந்தோப்புல நாலு மரத்தை புடுங்கி எறிஞ்சிருக்கு, இப்பத்தான் காப்புக்கு வர்ற வயசு, மருதண்ணன் கூட கரண்டு வேலை சுத்தி போட்டுட்டாரு, நீங்க ஏன் போடாம இருக்கறீங்க, உங்க மா தோப்புத்தான் யானைக வர்றதுக்கு காரணமயிருக்குண்ணு எல்லாரும் சண்டைக்கு நிக்கறாங்க.
காலையில் மணந்த கம்பங்களி மதியம் வயிற்றுக்குள் இறங்க மறுத்தது. “அய்யோ
கரண்டு வேலி போட்டுட்டாங்கன்னா ‘ஆனைக’ பாவமில்லை, கரண்ட் அடிச்சு ஏதாவது ஒண்ணு ஆயிடுச்சுன்னா? கவருமெண்டு நம்மளை சும்மா விடாதே, மனம் அவரை குழப்ப, ஒன்றும் பேசாமல் அந்த கம்பங்களியை கொண்டு போய் ஓரமாய் கொட்டினார்.
தொட்டி தண்ணீரில அலசி அங்கேயே குப்புறவைத்தவர், குடிசைக்குள் போனால் மனசு ஆராட்டமாய் இருக்கும் என்று நினைத்து, தோப்புக்குள் நடக்க ஆரம்பித்தார்.
கிட்டத்தட்ட ஐம்பது மரங்கள் இருக்கும். அஞ்சு ஏக்கரா, அப்ப எல்லாம் ஏக்கரா இல்லை, அப்பனுடன் மூப்பனும் செட்டியாரிடம் பேசி வாங்கியது ஞாபகம் வந்தது. ரொம்ப நாள் ‘கனவுடே’ அப்பன் இவரிடம் சொல்லியது கூட ஞாபகம் இருக்கிறது.
மலை அடிவாரமாய் இருந்ததாலும் வெறும் கரட்டு மண்தான் அந்த பூமி.
இந்த மண்ணில் பூ பொட்டு கூட விளைவிக்க முடியாமல் கிடந்தது. ஆனால் அதை தாண்டி இருந்த மண் கரிசல் கலந்த விளைச்சல் மண்ணாய் இருந்தததால் சுற்றிலும் பச்சை பசேல் என்று என்று இருக்க இந்த மட்டும் சொட்டையாய் வெறும் கரட்டு மேடாய் இருக்கும்.
மூப்பனுக்கு அப்பொழுது பதினெட்டு பத்தொன்பது வயசு இருக்கும், அதுவரை அவர்களுக்கு இருந்த ஒட்டு இடத்தில் போட்டிருந்த குடிசையை அப்படியே கொண்டு வந்து அந்த கரட்டு மேட்டில் போட்டவுடன் ஊருக்காரனுங்க சிரிச்சானுங்க,
மூப்பா உங்கப்பனுக்கு என்ன மறை கழண்டு போச்சா? இவன் வயசு இளந்தாரிகள் நையாண்டி செய்தனர். மூப்பன் அவர்களுக்கு பதில் சொல்லவில்லை, அப்பனுடன் இரவும் பகலும் மண்ணை கொத்தி புரட்டி போடுவதிலேயே இருந்தான். குடிசை பக்கத்திலேயே இருந்ததால் நல்ல வெயிலில் வேலை செய்ய மாட்டார்கள், விடியக்காலையில விளக்கை பற்றவைத்து காட்டு வரப்புல வச்சுட்டு அப்பனும் மகனும் மாறி மாறி மண்ணை குத்தி கிளறி புரட்டி போட்டு கொண்டிருப்பார்கள். அம்மாக்காரி தினமும் மோர், தண்ணின்னு எதையாவது செய்து கொண்டு வந்து கொடுத்து கொண்டே இருந்தாள். அவர்களுக்கு ஒரு மாடு கன்னு இருந்ததால் அதுவும் சாத்தியமாயிற்று.
ஆனால்…! இரண்டு வருடங்கள் கரட்டு மண் இவர்களுக்கு கருணை காட்டவே இல்லை. அதற்கு பின் இவர்களுக்கு செலவு செய்ய வசதியும் இல்லை, தெம்பும் இல்லை. மூப்பனின் அப்பன் சோர்ந்து விட்டான். இனி அவ்வளவுதான், மனம் வெறுத்து மீண்டும் கூலி வேலைக்கு மூவரும் செல்ல திட்டமிட்டார்கள்.
உறவு முறைக்காரன் மூப்பன் வீட்டுக்கு வந்தவன், மூப்பனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்கலாம், யோசனை சொன்னான். மூப்பனின் அப்பனுக்கு கோபம் வந்து அவனை வைய ஆரம்பித்தான். அவன் நமக்கு தெரிஞ்ச குடும்பமப்பா, பொண்ணுக்கு பதி மூணு பதினாலு இருக்கும், இந்த கல்யாணத்த வச்சு ஏதாவது வந்துச்சுன்னு நீ மேக்கொண்டு மாடு கன்னு வாங்கி புழைச்சுக்கலமுன்னுதான் சொல்றேன்.
இது கூட நல்ல யோசனையா படுதே..! மூப்பனுக்கு கல்யாணம் ஆகி, நான்கைந்து மாதங்கள் ஓடியிருந்தது. மூப்பனின் மாமனார் ஒரு நாள் வீட்டுக்கு வந்தவன் மூப்பனின் அப்பனிடம் ஏன் மச்சா, பூமிய இப்படி கொத்தி கிளறி பூரா பண்ணையம் பண்ணறதுக்கு தோப்பு பண்ணி விட்டுடுங்க, அதுவும் நான் எங்க ஊர்ல இருந்து நல்ல மாங்கண்ணு களை கொண்டு வந்து தாறேன், எப்படி பண்ணையம் பண்ணோனும்னு சொல்றேன், நம்ம வீட்டுல நாலு மரம் இருக்கு, அதனால என் பொண்ணுக்கு இது வளர்ப்பு நல்லாவே தெரியும், என்ன சொல்றீங்க?
இதுவும் சரியான யோசனையாய் பட, மறு வாரமே சம்பந்தி நல்ல மாங்கண்ணுகளை கொண்டு வந்து கொடுத்தார். நல்ல இடை வெளி விட்டு மாங்கன்னுகள் நடப்பட்டன. ஒவ்வொரு கன்னையும் சொந்த பிள்ளையாய் பார்த்து பார்த்து வளர்த்தனர், நால்வரும். விடியலில் மூப்பனின் அப்பனும் அம்மாளும் தொலை தூரம் சென்று தண்ணீர் கொண்டு வந்து ஊற்றினார்கள். மூப்பனும், அவன் மனைவியும் அக்கம் பக்கம் தோட்டத்துக்கு கூலி வேலைக்கு போய் விட்டு வந்து, இரவுக்குள் எல்லா கன்னுகளுக்கும் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி விட்டுத்தான் உறங்கவே செல்வார்கள்.
நட்டு வைத்த மாங்கன்னுகள் சோடை போகாமல் இளம் பச்சை துளிர்கள் விட்ட போது இவர்கள் குடும்பமே சந்தோசத்தில் மிதந்தது.
ம்..ம்.. வருடங்கள் ஓடிப்போச்சு, மூப்பனின் வீட்டிலும் மரணம் என்னும் நிகழ்வு வரிசையாய் அப்பனையும், அம்மாளையும் அழைக்க,ஒவ்வொருவரையும் இந்த நிலத்து ஓரத்துகளிலே அடக்கம் செய்து விட்டான் மூப்பன்.. மூப்பனுடைய பையன் வளர்ந்து வாலிபமாகி நின்றான்.
பையனுக்கும் ஊருக்குள்ளே பொண்ணு பார்த்து கல்யாணம் முடித்து, இந்த குடிசையில் இரண்டு மூணு மாசம் இருந்து பார்த்தான், அப்புறமா என்ன நினைச்சானோ, ஊருக்குள் குடியிருக்கிறேன் என்று சொல்லி விட்டான். சங்கடப்படாத மூப்பனும், அவன் பொஞ்சாதியும் மகனை ஊருக்குள்ளயே குடி வைத்து விட்டு தோப்புக்குள்ளேயே வசித்தார்கள். அதுக்குள்ள தோப்பு முழுக்க மாங்கண்ணுகள் நல்லா வளர்ந்து காய்ப்புக்கு தயாராக ஆரம்பிச்சிருந்தது.
மூப்பனொட கிரகாசாரமோ என்னமோ ஊருக்குள்ள குடியிருந்த மகனை மாடு முட்டி விழுந்துட்டான்னு அடிச்சு பிடிச்சு ஆஸ்பத்திரிக்கு போறதுக்குள்ள போய் சேர்ந்துட்டான்னு, கூட போனவங்களை பார்த்து டாகடருங்க சொல்லிட்டாங்க. “அயோ மகனே” போயிட்டியான்னு அழுது புடிச்சு என்ன செய்ய? அவனையும் கொண்டு வந்து இந்த தோப்புக்குள்தான் அடக்கம் செஞ்சது.
மகனை புதைச்ச இடத்தையே தினம் தினம் பார்த்து பார்த்த மூப்பனின் பொஞ்சாதி மகன் ஏக்கத்திலேயே போய் சேர்ந்துட்டாள்.
ஏகாந்தமான வாழ்க்கை, மூப்பனை கிழடு தட்டவைத்து தோப்புக்குள் குடிசைக்குள்ளே முடக்கி வைத்து விட்டது. ஆனால் இவனுடைய மாந்தோப்பு மரங்கள் பூ பூத்து காய்த்து பழுத்து நல்ல விலையையும், சந்தைக்குள் இவனுக்கு வருடா வருடம் கொடுத்து கொண்டே இருந்துச்சு.
மகன் போய் சேர்ந்துட்டாலும் அவன் குடும்பத்திற்கு நல்ல வருமானத்தை இந்த தோப்பு கொடுத்துட்டுதான் இருக்குது. மூப்பன் அந்த கணக்கு வழக்கு எதுவும் பார்க்கறதில்லை, எல்லாம் மருமவதான். அவளுக்கு துணையாய் அவளோட மூத்த மருமகளும் வந்து விட்டாள்.
வருசா வருசம் தோப்புல காய்ச்சு தொங்கற மாங்காய்கள் பழுக்க ஆரம்பிச்சிருச் சுன்னா. அதோட மணமும் சுவையும் மலை மேல் இருந்த யானை கூட்டங்களை இங்க தேடி வர வைச்சிருச்சு.
யானை கூட்டங்கள் முதல் முதல்ல காய்ப்பின் போது இந்த தோப்புக்குள் புகுந்தது, இதை பார்த்த மூப்பன் என்ன செய்வது என்று திகைத்து நின்றான். இப்பொழுதுதான் முதலாய் காய்ப்பையே பார்க்கிறான், அதற்குள் யானை அட்டகாசம் செய்யுதேன்னு அழுதிருக்கிறான். ஆனால் தெய்வாதீனமாக பெரிய அளவு நட்டம் இவனுக்கு தரவில்லை. ஒரு முறையோ இரண்டு முறையோதான் அதுக தோப்புக்குள்ள வந்துச்சு. “யானை ருசித்த பழம்” பேர் வாங்கி இன்னும் கிராக்கி அதிகமாகியிடுச்சு. இதனால் யானை வரவை இவன் அதிகமாக கண்டு கொள்ளாமல்தான் இருந்தான். ஆனா இன்னைக்கு அதுவே பெரிய சிக்கலாய் நிக்குதே..?
இரண்டு நாட்களாக தோப்புக்குள் யார் யாரோ வரவும் போகவும் இருப்பதை குடிசை வாசலில் உட்கார்ந்தவாறே பார்த்து கொண்டிருக்கிறான் மூப்பன். நாளையோ மறுநாளோ கரண்டு கொடுத்துவிடலாம் என்பதையும் கேட்டு கொண்டிருந்தான். இரவு தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவனுக்கு “தட் தட்” என்னும் நில அதிர்வு சத்தம் கேட்டவுடன் நிமிர்ந்து உட்கார்ந்தான்.
நல்ல இருள்.. காலடியோசை திம்..திம்.. கூர்ந்து கேட்கிறான் மூப்பன், ஒன்று..இரண்டு..மூன்று.. நான்கு.. அடேயப்பா நிறைய வந்திருக்கும் போல..திடீரென்று ஒரு பிளிறல். இத்தனை வருடங்களாக தோப்புக்குள் நுழையும்போது அது தரும் பிளிறல்களை கேட்டிருக்கிறான். ஆனால் “இந்த பிளிறல் சத்தம் மூப்பனை உறைய செய்தது. நிச்சயம் கோபமான பிளிறல்தான், முடிவு செய்தவன் இனி அவ்வளவுதானோ..! அப்படியே கட்டிலில் படுத்து கொண்டவர் நல்லபடியாக கொண்டு போய் சேர்த்து விடு..வேண்டியபடி அப்படியே கிடந்தான்.
மரக்கிளைகள் சட சடவென உடையும் சத்தம், பெருமூச்சு, நகரும் ஓசை , திடீரென மூடி வைத்த கதவு தடக்கென கீழே விழுந்த சத்தம். யானை தும்பிக்கையை நீட்டி விட்டது. “கடவுளே” நான் மனதார உனக்கு ஆபத்தை கொடுக்க நினைக்கவில்லை, வேண்டியபடியே கிடந்தான். உஸ்..உஸ்..தும்பிக்கை அவர் தலைக்கு மேல் அங்கும் இங்கும் அலைவதை அவனால் உணர முடிந்தது.
கிட்டத்தட்ட பல வருடங்களாக இந்த அனுபவம் இவனுக்கு கிடைத்திருக்கிறது, ஆனால் இன்று என்னவோ? தெரியவில்லை, அதனுடைய சத்தம் வித்தியாசமாய் இருப்பதாக பட்டது.
கடவுளே “கரண்டு வேலி” போட வேண்டாமென்னும் புத்தியை பேரனுக்கும், மருமவளுக்கு கொடுங்கள். இது நானும், என் அப்பனும் உருவாக்கிய தோப்பு, இதற்கு நான்தான் உரிமையாளன், நானே சொல்கிறேன், இதோ ‘ஆனைகளே’ நீங்களே சாப்பிடுங்கள், உங்களுக்கு போக மீதியைத்தான் இத்தனை நாளாக அனுபவித்தேன், என் சந்ததி இனியும் அனுபவிப்பார்கள், ஏதேதோ மனதுக்குள் பிதற்றியபடி படுத்து கிடந்தார். அவன் மீது திடீரென்று கிட்டதட்ட நூறு கிலோ எடையொன்று தொப்பென்று மார்பின் மீது விழ…. உடல் இரு குலுங்கு குலுங்கி..நின்று போனது.
மறு நாள்….ஊரே ஒரு கலவரமாக இருந்தது. யானை ஒன்று எங்கோ வைத்த மின்சாரவேலியில் மாட்டிக்கொண்டு மரணித்து கிடந்தது. சற்று தொலைவில் யானை கூட்டம் ஒன்று இறந்த யானையை சுற்றி நின்ற மனித கூட்டங்களை வன்மத்துடன் பார்த்து கொண்டிருந்தன.
அந்த தோட்டத்துகாரரை காவல்துறையும் வனத்துறையும் அழைத்து கேள்வி மேல் கேட்டு துன்பபடுத்தி கொண்டிருந்ததை பார்த்த மூப்பனின் மருமவள் வேணாமுடா சின்னா நமக்கெதுக்கு அந்த பாவம், நாம ஒண்ணும் கெட்டு போயிடலை, பேசாம இந்த வேலி போடற வேலை ஒண்ணும் வேணாம், பாரு சும்மா விட்டிருந்த மருதன்ணன் வேலி போட்டு, அவர் நேரம் யானை இங்க வந்து சாகோணும்னு, எழுதியிருக்கு. அவரு நல்ல மனுசன், ஆனா இப்ப… போலீசு, கேசு அது இதுன்னு..
ஆயா பேசுவதை கேட்டு கொண்டிருந்த பேரன் ராசுகுட்டி மூப்பைய தாத்தாகிட்ட இதை போய் சொல்லிட்டு வந்துடலாம் என்று சைக்கிளை எடுத்து வேகமாக விரைந்து வந்து கொண்டிருந்தான்.
அவனுக்கு தெரியாது, இரு பிராணிகளும் இந்த பூமியில் வாழ்க்கையை முடித்து கொண்டார்கள் என்று. குடிசையில் மனித பிராணியான மூப்பனும், மூப்பனை முடித்த விலங்கு பிராணியான யானை அந்த மின் வேலியிலும்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (18-Apr-24, 10:23 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 35

மேலே