தமிழுக்கு ஈடில்லை காண் - கவிஞர் இரா இரவி

தமிழுக்கு ஈடில்லை காண்!

- கவிஞர் இரா. இரவி

*****

தமிழ்மொழி போல் இனிதான மொழி இந்தத்
தரணியில் ஏதுமில்லை என்றார் மகாகவி பாரதியார்!

தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றார்
தன்னிகரில்லா புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார்!

தமிழ்மொழி பயின்று திருக்குறள் படிக்க
தமிழனாகப் பிறக்க ஆசைப்பட்டார் காந்தியடிகள் !

தமிழர்களின் வீரத்தைக் கண்டு வியந்து
தமிழனாகப் பிறக்க விரும்பினார் நேதாசி!

பல்லாயிரம் மொழிகள் உலகில் இருந்தாலும்
பண்டைத் தமிழுக்கு இணையானது ஏதுமில்லை !

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேல் அழியாமல்
பயன்பாட்டில் இருந்து வரும் சிறந்த மொழி தமிழ் !

என்ன வளம் இல்லை எம் தமிழ்மொழியில்
என்று கேட்குமளவிற்கு அனைத்து வளம் மிக்க மொழி !

எண்ணிலடங்கா இலக்கிய இலக்கணங்கள் உள்ளவை
எங்கும் உலகம் எங்கும் ஒலித்திடும் தமிழ் !

உலகப்பொதுமறையை உலகிற்கு வழங்கிய
ஒப்பற்ற உயர்தனிச் செம்மொழி தமிழ்மொழி !

ரசியாவின் டல்சன் இழைகள் அறையில் உள்ள
ரம்மியமான ஒரே இந்திய நூல் திருக்குறள் !

பல்லாயிரம் வயதாகியும் இளமையாக இருக்கும் மொழி
பன்னிசை முதலில் இசைத்த மொழியும் தமிழே!

தமிழுக்கு ஈடில்லை காண் புகழ்ச்சி அல்ல உண்மை
தமிழே உலகின் முதல்மொழி ஆய்வறிக்கை முடிவு!

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி. (28-Apr-24, 5:11 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 81

மேலே