தியானம் தியானம்- ஒரு “பத்தி” பாரா கதை

தியானம் தியானம்- ஒரு “பத்தி” (பாரா) கதை

ஐயோ இன்னைக்கு மழை வரும்னு சொல்லியிருந்தானே?

இந்த வருசமாவது ‘இன்கிரிமெண்டு’ ஜாஸ்தி கொடுப்பாங்களா? அன்னைக்கு பார்க்கறப்ப கூட மானேஜர் “நல்லா வேலை செய்யறீங்க” அப்படீன்னு பாராட்டியிருக்காரு பார்க்கலாம், கிடைக்கும்.
இந்த இளங்கோ வாய் கொடுக்காம இருந்திருந்தா அந்த பார்ட்டியோட “பைல்” எங்கிட்ட வந்திருக்கும். கெடுத்துட்டான்.
தினேஷ் புது வண்டி வாங்கி கொடுன்னு ஒத்தை கால்ல நிக்கறான், இப்ப பயம்மா இருக்கும் பசங்களுக்கு வண்டி வாங்கி கொடுக்கறதை நினைச்சா..
மகிழோட ஜாதகம் கொடுத்து இதுவரைக்கும் பதிலை காணோம், கொடுத்த மரியாதைக்காவது பொருத்தம் இருக்கு, இல்லை அப்படீன்னு சொல்றதுக்கு கூட அவங்களுக்கு முடை
நம்ம தொகுதியில யார் ஜெயிச்சா நல்லா இருக்கும்? அன்னைக்கு ஜெயக்குமார் நமக்கு ஹெல்ப் பண்ணியிருக்காரு, அவருக்கு ஓட்டை போட்டுடலாம், ஆனா பக்கத்து வீட்டுக்காரனாச்சே பாலு, அவனை விட்டுட்டு எப்படி ஜெயக்குமாருக்கு ஓட்டு போடறது/
விலைவாசி ஏன் இப்படி ஜிவுன்னு ஏறிகிட்டு போகுதுன்னு தெரியலை? வாங்கற சம்பளம் மளிகைக்கே சரியா போகுது
இன்னைக்கு என்னமோ அந்த விமலா ட்ரஸ் பிரமாதாமா இருந்துச்சு, நமக்கு ஏன் அவளை மாதிரி ட்ரஸ் பண்ணா நல்லா இருக்கறதில்லை…?
இதுவேற எப்ப முடியப்போகுதுன்னு தெரியலை, வீட்டுக்கு போற நேரமாச்சு, இழுக்கறாங்க….!
இதுவரை நம் அலுவலக பணியாளர்கள் அனைவரும் ஒன்று கூடி இந்த மண்டபத்தில் தியானம் செய்து இருக்கிறோம். இதில் கிடைத்த அனுபவத்தை பற்றி ஓரிருவர் முன் வந்து பேசுமாறு கேட்டு கொள்கிறோம். முதலாவதாக நமது அக்கவுண்டண்ட் சோமையாவிய அழைக்கிறேன்.
இன்று தியானத்தின் மூலம கிடைத்த அனுபவம் சொல்லி மாளாது, உள்ளத்தில் அமைதி அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி….
மேற்கண்டதை போல பலரும் தங்களுடைய இந்த தியானத்தால் கிடைத்த ஆத்மீக அனுபவங்களை அந்த கூட்டத்தில் சொல்லி கொண்டு போனார்கள். “வாட்சையும்”, “செல் போனையும்” பார்த்தபடி பலர் அதை காதில் வாங்கி கொண்டிருந்தார்கள்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (1-Jul-24, 1:58 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 7

மேலே