தேசிய மருத்துவர் தின சிறப்பு கவிதை

#மருத்துவர்_தினம்
#சிறப்பு_கவிதை

ஆக்கம்; கவிதை ரசிகன்
குமரேசன்

எவன்
எவனோடு வேண்டுமானாலும்
போராடலாம்....
ஆனால்
' எமனோடே! ' போராடும் சக்தி
மருத்துவர்களுக்கு
மட்டுமே உண்டு......

ஜனனம் மரணம்
'விதியால் '
தீர்மானிக்கப்பட்டாலும்
பல சமயங்களில்
இவர்களுடைய
'மதி'யாலும்
தீர்மானிக்கப்படுகிறது .....

இவர்கள்
மனித உருவில் வந்த
'இறைவன்'
இல்லை என்றால்
'வெள்ளை ஆடை' எதற்கு ?

அத்தியாவசியமானது
உணவு
உடை
உறைவிடம் மட்டுமல்ல
'மருத்துவமும்' தான்....

இவர்கள்
இல்லையென்றால்....
கிழிந்த வயிற்றை
தைப்பது யார் ?
உடைந்த எலும்பை
ஒட்ட வைப்பது எவர் ?
குறுக்கே திரும்பியக் குழந்தையை
எடுப்பது எங்கே?
மரணத்தின் வாயில்
சிக்கியவர்களை
மீட்பதுதான் எப்படி ?

காய்ச்சலின் சூட்டிலேயே !
சுடுகாட்டு
சாம்பலாககயிருப்போமே !
தலைவலி
வயிற்று வலியே !
காணக்காட்டிற்கு
வழியனுப்பி வைத்திருக்குமே !

கசப்பான
மருந்து மாத்திரைகளையும்
இனிப்பான வார்த்தைகளில்
கலந்து கொடுத்தே!
சாப்பிட வைத்திடுவார்கள்...

'தன்கை' உடைந்து
படுக்கையில் கிடந்தாலும்
'தன்னம்பிக்கை' கொடுத்து
எழ வைத்து விடுவார்கள்....

கத்தினாலும்
கடமை தவறாதக் 'கதிரவன் ' கூட
வேலை நேரம் தவிர
வெளியே வரமாட்டான்....!
ஆனால்...இவர்களோ !
அவசரமென்று அழைத்தால்
அர்த்த ராத்திரியிலும் வருவார்கள்....

கொட்டும் ரத்தத்தை
கை கால் நடுங்காமல்
பஞ்சில் துடைத்து
பெஞ்சில் வைக்க
நெஞ்சில் துணிவு உண்டா
இங்கு யாருக்காவது ?

இமயத்தின் கனத்தை விட
மரணத்தின் போது
இதயத்திலிருந்து விழும்
"கடைசி சொட்டு
கண்ணீரின் கனத்தை"
சுமந்து கொண்டு வாழம்
இவர்களின் "வலிமையை "
என்ன சொல்லி போற்றுவது ?
என்ன கொடுத்து பாராட்டுவது ?

இவர்கள்
தெய்வத்தை விட ஒரு படி
மேலானவர்களோ? என்று
எண்ணத் தோன்றுகிறது....
ஆம்.....!!
தெய்வங்கள் கூட
'ஆக்கல் '
'அழித்தல் '
இரண்டையும் செய்கிறது
இவர்கள்
ஆக்கல் மட்டுமே செய்கிறார்கள்...!

கடவுளான இவர்களை
காலில் விழுந்து
வணங்காமல் போனாலும்
'கையெடுத்து' வணங்குவோம் !
இவர்களின்
'அறிவுரைக்கு' இணங்குவோம் !

♥ அனைவருக்கும் தேசிய மருத்துவர் தின நல்வாழ்த்துக்கள் ♥

கவிதை ரசிகன் குமரேசன்

எழுதியவர் : கவிதை ரசிகன் குமரேசன் (1-Jul-24, 3:40 pm)
பார்வை : 18

மேலே