பொய் சொன்னாலும்

பொய் சொன்னாலும்
(கதையின் கரு “பூர்ணம் விசுவநாதன்” அவர்களின் புத்தகமாக வந்த ஒரு நாடகத்தில் இருந்து எடுத்தது)

செங்காளியப்பன் புத்திசாலிதான், ஆனாலும் என்ன செய்வது ஆண்களுக்கே உரிய பல்வீனம், பொய் சொல்ல வேண்டியதாகி விட்டது. அதுவும் யாரிடம்? நேற்றுத்தான் கல்யாணம் முடித்து வீட்டுக்கு கூட்டி வந்த இளம் மனைவி மாரியம்மாவிடம் சொல்லி விட்டான்.
அவனை குறை சொல்லாதீர்கள், நாமாக இருந்தாலும் அந்த இடத்தில் பொய் சொல்லித்தான் இருப்போம், இவனுக்கு வயது இருபத்தி ஐந்துதான் ஆகிறது, சின்ன வயது, கல்யாணம் முடித்த மாரியம்மாளுக்கு பத்தொன்பது முடிந்து இருபது அப்பொழுதுதான் ஆரம்பம்.
கருத்த நிறம் அவளது முக எடுப்பிறகு அவ்வளவு மங்களகரமாக இருந்தது. அவளது கண்களின் படபடப்பும், வாய் துடுக்கும் இவனை அப்படி ஒரு மயக்கத்திற்கு கொண்டு போய் விட்டது முதல் இரவில்.
மாமாவோவ் என்ன வேலை செஞ்சுகிட்டிருக்கீங்க? கேட்ட நேரத்தில் அவனின் தோளில் தொங்கியபடி அவன் முகத்தோடு நெருங்கியபடி இருந்த நேரம். யோசித்து பாருங்கள் யார்தான் தடுமாறாமல் இருக்க முடியும்?
“நெல்லையண்ணன் ஏஜன்சீஸ்” கடையில நான்தான் சூப்பர்வைசர், சட்டென வாயில் வந்து விட்டது. சூப்பர்வைசர் சகாயத்தின் முகம் சட்டென முன் வந்து “ஏண்டா எருமை அந்த சிமிண்ட் லோடு பார்ட்டிக்கு அப்பவே அனுப்ப சொன்னேனே, இப்ப பாரு போன்ல கண்டபடி பேசறான்” போன வாரம் கோபமாய் இவனை திட்டி கொண்டிருந்த முகம் ஞாபகம் வந்தது.
ஆனால் அதுவெல்லாம் ஒரு நொடிதான், மாரியம்மாளின் முகம் ‘அப்படியே விரிய” நிசமாவா மாமா, எத்தனை வருசமா அங்க வேலை செய்யறே? அடுத்த கேள்விக்கு போய் விட்டாள். கவனிக்க, இந்த கேள்வியை கேட்கும் போது அவனின் கைகள் இரண்டையும் அவள் கைகளில் ஏந்தியபடி கேட்டாள்.
செங்காளியப்பன் கிளு கிளுவென தன்னை உணர்ந்தபடியே அது புள்ளை மனக்கணக்கு போடுவது போல தலையை மேலே பார்த்து அங்கும் இங்கும் திரும்பி ‘ஏழெட்டு வருசம்’ இருக்கும், மூன்று வருடங்களாகத்தான் அவன் அப்பா ‘மிரட்டி’ இங்கு சேர்த்து விட்டிருந்தார். பையன் ஊரை சுத்திகிட்டே இருக்கான், ஒரு இடத்துல வேலைக்கு சேர்ந்தாதான் உருப்படுவான், இப்படி சொல்லி தெரிந்தவர் மூலமாக அந்த கடையில் சேர்த்து விட்டிருந்தார்.
கடை என்னவோ பெரிய கடைதான். அந்த நகரின் பரபரப்பான சாலையிலேயே இருந்தது, கிட்டத்தட்ட பத்து பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். பிரபலமான சிமிண்ட், இரும்பு, மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை தயாரிக்கும் பிரபல கம்பெனிகளின் ஏஜன்சீஸ் எடுத்து நடத்தி கொண்டிருக்கிறது, கடையின் பெரிய காம்பவுண்டுக்குள்ளேயே சற்று தள்ளி அலுவலகமும் இருந்தது. அதில் மேனேஜர், இரண்டு பெண் அலுவலகர்களும் இருந்தனர்.
இவர்களது கடைதான் அந்த நகரில் பிரதானா கட்டுமான பொருட்கள் விற்பனை செய்வதும், பெரிய நிறுவனங்களுக்கு முகவர்களாகவும் இருந்தன. அதனால் எப்பொழுதும் பரபரப்பாய் இருக்கும் இடமாகவும் தொழிலாளர் களுக்கு ‘ஈஎஸ்ஐ’ வருங்கால வைப்பு போன்றவைகள் எல்லாம் பிடிக்கப்பட்டு நன்றாக நடந்து கொண்டிருந்தது.
எல்லாமே நன்றாகத்தான் இருந்தாலும் செங்காளியப்பன் அன்று இரவு சொல்லியிருந்த பொய் இரண்டாவது வாரத்தில் மாரியம்மாளின் வாய் வழியாகவே அன்று வெளிப்பட்டது. அதாவது ‘மாமாவ்’ நான் ஒரு நாளைக்கு உன் கடைக்கு வந்து பார்க்கணும்.
அவ்வளவுதான் செங்காளியப்பனுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நீங்களே எண்ணிக்கொள்ளுங்கள். அந்த நேரத்தில் மாரியம்மா ‘ஸ்பெசலாய்’ இவனுக்கு தட்டில் இரண்டு மீன் வறுவல்களை வறுத்து எடுத்து அவன் முன்னால் வைத்திருந்தாள்.அந்த மணமும், முறுகலும் மனதை மயக்குவதற்கு முன் அவள் ‘கேட்ட கோரிக்கை’ அவனை இந்த இன்பத்தை அனுபவிக்க முடியாமல் செய்து விட்டது.
ம்..ம்.. பார்க்கலாம் கூடுமானவரை அவள் கண்களை பார்க்காமலே நான் சொல்றேன், ‘மீனை ருசிப்பதில்’ ஈடுபாடு காட்டுவது போல காண்பித்தான்.
அங்க “நீ எப்படி ஆளுங்களை வேலை வாங்கறேன்னு பாக்கணும்” துணுக்காக இந்த கோரிக்கையும் வைத்து விட்டாள்.
அன்று கடையில் சோகமாய் வேலை செய்தபடி இருந்த கன்னியப்பன் இவனுடைய சோக்காளி, கவனித்து விட்டு “என்னடா புது மாப்பிள்ளை கல்யாணம் ஆகி இரண்டாவது வாரமே இப்படி டல்லா இருக்கே?
என்ன சொல்வது? தயங்கியவன் வேறு வழியில்லாமல் இந்த விசயத்தை யாரிடமாவது சொல்லித்தானே ஆக வேண்டும், அதனால் “மள மளவென” தான் சொன்ன பொய் முதல் கொண்டு அவள் வைத்த கோரிக்கைகளையும் சொல்லி விட்டான்.
அதானே பார்த்தேன், சிரித்தான் கன்னியப்பன், அவன் அனுபவசாலி, கல்யாணமாகி மூன்று வருடங்கள் ஆகியிருந்தது, கவலைய விடுடா நான் ஒரு நாள் சொல்றேன், அன்னைக்கு உன் பொண்டாட்டிய கூட்டிட்டு வா என்று தைரியம் கொடுத்தான்.
இந்த வார்த்தையே இவனுக்கு யானை பலம் கொடுக்க, அது எப்படி என்பது போல அவன் முகத்தை பார்த்தான்.
அடுத்த வாரம் நம்ம மேனேஜரும், சூப்பர்வைசரும் பழனிக்கு போறாங்க, முதலாளியும் வெளி நாட்டுல இருக்கறாரு, அவரும் வர்றதுக்கு வாய்ப்பு இல்லை, அன்னைக்கு நாங்க எல்லாம் உனக்கு கீழே வேலை செய்யறதா நடிக்கிறோம், ‘நீ ஜமாய்’ என்றான்.
இதுவெல்லாம் நடக்குமா? வியப்புடன் கேட்டான். நீ கவலைய விடு, நான் நம்ம ஆளுங்க கிட்ட எல்லாம் சொல்லி வச்சிடறேன், ஒரு மணி நேரத்துக்குள்ள கூட்டிட்டு வந்து அனுப்பி வச்சிடு சரியா?
செங்காளியப்பனுக்கு நிம்மதி வந்தது.
அன்று மிரள மிரள பார்த்தபடி உள்ளே மாரியம்மா வந்த போது செங்காளியப்பன் (ஏற்பாட்டின்படி) கடை ஆட்களிடம் காரசாரமாய் கத்தி கொண்டிருந்தான். என்ன நினைச்சுகிட்டிருக்கீங்க எல்லாரும்? இன்னும் சிமிண்டும், கம்பியும் அனுப்பி வைக்கலேன்னு கூப்பாடு போட்டுட்டு இருக்காங்க, ‘மீனா கன்ஸ்ட்ரக்சனல’. சீக்கிரம் அனுப்பி வையுங்க.
தன் கணவனின் சீறலையும் அதை கண்டு அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மிரண்டு போய் ஓடி ஓடி வேலை செய்வதையும் அகல கண் கொண்டு பார்த்தவாறு இருந்தாள் மாரியம்மா.
மாரியம்மாளை பார்த்து பெருமையாக, இங்க பாரு நான் இல்லாட்டி இங்க எந்த வேலையும் நடக்கிறதில்லை, அவளை தள்ளியபடியே நகர்த்தி வந்து பெருமையாக சொன்னான்.
அவர்கள் இருவரும் நகர்ந்தபடியே செல்ல, கூட இருந்தவர்கள் சிரித்தபடியே வெளியே தெரியாமல் தலையை குனிந்து கொண்டனர்.
இவர்களின் நடவடிக்கைகள் இப்படி இருக்கும்போது சாகாவசகமாக ஒருவர் உள்ளே வந்து “எங்கப்பா உங்க சூப்பர்வைசர்? அவர்கள் கண்டும் காணாமல் அவரை அந்த பக்கமாக நகர்த்த முயற்சிக்க, அவரோ என்னப்பா எங்க போனாரு உங்க சூப்பர்வைசர்? கொஞ்சம் சத்தமாக கேட்டார்.
வாசல் வரை நகர்த்தியபடியே கூட்டி கொண்டு போன செங்காளி -யப்பனுக்கும் இது நன்றாக கேட்டது. இதற்கும் அவர் இவர்கள் இரண்டு பேரையும் பார்த்தபடியேதான் தாண்டி சென்றார்.
எப்படியோ உள்ளிருந்தவர்கள் வந்தவரை சமாதானப்படுத்தி உள்ளே உட்கார்த்தி வைக்க வெளியே வந்தவுடன் சிரி சிரியென சிரித்தாள் மாரியம்மா.
எதற்கு இப்படி சிரிக்கிறாள்? திகைப்பாய் நின்றான் செங்காளியப்பன் அவன் முகத்தை பார்த்து “மாமோவ் நீயும் உன் கூட்டாளிகளும்” நல்லாதா “ஆக்ட்” கொடுக்கறீங்க, மீண்டும் சிரித்தாள்.
இவளுக்கு விசயம் தெரியுமா? திகைப்புடன் அவளை பார்த்தபடியே நின்றான் செங்காளியப்பன். அதுவரை உள்ளே பதுங்கியிருந்த கூட்டாளிகளும் அவன் பின்னால் வந்து நின்றபடி சிரித்தனர்.
எங்கப்பா உங்களை கட்டிக்கறதுக்கு முன்னாடி உங்க கூட்டாளிக கிட்டவெல்லாம் விசாரிச்சு “பையன் நல்ல பையன்னு” சொன்ன பின்னாடிதான் எங்கப்பா உனக்கு கட்டி கொடுக்கறதுக்கு ஒத்துகிட்டாரு.
“அடப்பாவிகளா கூட இருந்தே குழி பறிச்சிருக்கானுங்க”

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (6-Jul-24, 2:26 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : poy SONNALUM
பார்வை : 81

மேலே