ஆட்டம்
********
அடங்காம லாடும் அதிகார மோர்நாள்
மடங்குவ துண்டு மலிந்து
*
ஆணவத்தி லாடும் அறமிலா ராட்டமது
காணாம லாகும் கரைந்து
*
வாலிபத் தாடும் வசீகர ஆட்டத்தை
வேலியிடும் கல்யாண வேம்பு
*
தப்பாட்ட மாடும் தலைமைத் துவங்களால்
குப்பையென வாகும் குடி
*
உட்கார்ந்தே ஆடும் உதவாக் கரைகளெலாம்
முட்டாள்க ளாக்கும் முனைந்து
*
அரங்கத்தி லாடாதே அந்தரங்கத் தாடும்
குரங்குகளுக் குத்தேள் குணம்
*
ஆடாமல் ஆடி அசையா திருப்பாரை
நாடாமல் போமோ நரகு
*
ஊராரை ஆட்டி உயிர்வாழும் பேர்க்குள்ளே
தீராம லாடும் திமிர்
*
ஆட்டுவா ராட்டிடு மாட்டத்திற் காடாதார்
காட்டுத்தீக் கொப்பெனக் காண்.
*
மேல்வர்க்க மென்றே மிடுக்குட னாடிட
வால்பிடிப்பா ராட்டம் வலிப்பு
*
குரங்காட்ட மாடக் குதிக்குமிசை செய்தாலே
எத்தனைநாள் நீடிக்கும் இங்கு
*
குடித்தாடும் ஆட்டம் குடும்பத்தை ஆட்டும்
படித்தும் திருந்தாரே பார்
*
மேளத்திற் காடி முடிச்சிட்டுப் பெண்டாட்டித்
தாளத்திற் காடல் தவிர்
*
வாலாட்டி யாடும் வளர்ப்புநாய் நன்றிக்குத்
தாலாட்டி னாலும் தகும்
*
சேலாடும் கண்ணால் சிறைபிடிக்கத் தூண்டுவது
போலாகும் வஞ்சியர் போக்கு
*
பாலாடும் மார்பில் பசியாற்றும் தாய்மைக்கு
மேலான தொன்றுமிலை யே
*