சுதந்திர பொம்மை

*********************
பலூனுக்குள் அடைபட்டக் காற்று
பலூனையே உடைத்து தன்
சுதந்திர வெளியில்
ஐக்கியமாகி விடுகிறது
*
எரிவாயு குற்றிக்குள்
அடைபட்டக் காற்று
ஒரு சிறு துவாரத்தின் வழியே
வெளிவந்து தீயாய்
தன் எதிர்ப்பைக் காட்டி
விடுதலை அடைகிறது
*
பந்துக்குள் அடைபட்டக் காற்று
பந்தை நாலுபேர்
இம்சிக்க வைத்தேனும்
வெளியேறிக் கொள்கிறது
*
நம்முள்ளும் கூட
சுவாசமாய்ச் சுதந்திரமாய்
போய்வரும் காற்று
நாம் அடக்கி வைக்க முற்பட்டால்
நம்மை அடக்கமாக்கிவிட்டுச்
சுதந்திரமாகிறது
*
தென்றலோ புயலோ
என் வழி தனி வழி
என்று உலவும் வளி
என்றும் கொள்வதில்லை வலி
*
சுதந்திரமாய் பிறந்து
கைதியைப்போல் அடிமைப்பட்டுக்
கிடக்காத காற்றைப்போல்
நமக்கும் இருக்க வேண்டும்
சுதந்திரம்
*
சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும்
நமக்கான அடிமைத்துவத்தை
யார் கொடுத்து?
*
அடிமைப் படுத்தப்பட்டவர்களிடம்
இருந்த சுதந்திரத்தை வாங்கி
விலங்கிட்டவர்கள்
தங்கள் சுயநல சிறையில்
அடைத்துக் கொண்டு
கொடியேற்றம் நடத்துகிறார்கள்
*
ஏற்றும்வரைக் கொடியும்கூட
அவர்களின் கயிற்றுச சிறைக்
கைதியாக இருக்கும் கலிகாலத்தில்
சுதந்திரம் ஒரு சிறைக்கூடத்தின்
விளையாட்டுப் பொம்மையே!
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (15-Aug-24, 1:53 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : suthanthira pommai
பார்வை : 55

மேலே