அன்னை தெரசா பிறந்த தினக் கவிதை

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*அன்னை தெரசா*
*பிறந்த நாள் கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

உன் நிஜப்பெயர்
ஆக்னஸ் கோன்ஜா....
அல்பேனியா மொழியில்
கோன்ஜா என்றால்
'ரோஜா அரும்பு' என்று
அர்த்தமாம்....

அல்பேனியாவில்
நீ பதியம் போட்டு
கொல்கத்தாவில்
வேர் விடுவாய் என்று
அன்று யாரும்
அறிந்தார் இல்லை .....!!

ஆனால்.....
காலம்
சரியாக அறிந்திருந்தது....
அதனால் தான்
ரோஜா அரும்பு என்று
உனக்கு
பெயர் சூட்டி இருக்கிறது....!!

எப்படி என்றால் ?
ரோஜாவின் இதழ் போல்
நீ மென்மையாக
இருந்தாலும்
முள் போல்
உன் வாழ்வில்
சில துன்பங்கள்
வரும் என்று
காலம் அறிந்திருக்கிறது....
அதற்கு சாட்சியாகவே
நீ நாட்குறிப்பில்
எழுதி இருக்கிறாய்
நான் யாசகம்
எடுத்தேன் என்று.....!!

எட்டு வயதில்
தந்தையை இழந்தாய்...
பன்னிரண்டு வயதில்
தாயை மறந்தாய்....
ஓ.....! உன்னை
சேவை
தத்தெடுத்துக் கொள்ளவோ?

கற்றுக்கொள்ள
கொல்கத்தா வந்த நீ !
கடைசியில்....
கொல்கத்தாவிற்கு
மட்டுமல்ல
இந்த உலகத்திற்கே !
நிறையக்
கற்றுக் கொடுத்தாய்....
ஆம் .....!
கற்றவருக்குத்தானே
தெரியும்
கற்றலின் அருமை ....!!

அறிவை புகட்டும்
ஆசிரியர் ஆகத்தான்
ஆசைப்பட்டாய்.....
ஆனால்....
வறுமையைக் கண்டு
உணவை ஊட்டும்
அன்னையாகி விட்டாய் ....
ஆம்.....!
அறியாமையை விட
வறுமை கொடியது
அல்லவா.....?

ஆரம்பத்தில்
குக்கி கிராமத்திற்குச் சென்று
சிறு குடிசையில்
இருந்து கொண்டு......
அந்தக் கிராமத்தை விட்டு
அசிங்கத்தையும்
அறியாமையையும்
வெளியேற்ற நினைத்தாய்...
ஆனால்...
அந்த மக்களோ
உன்னையே !
கிராமத்தை விட்டு
வெளியேற்ற நினைத்தார்கள்..!

வறுமையை
ஒழிக்கப் போன நீ !
வறுமையில் விழுந்ததும்..
கையேந்தலை
அழிக்கப்போன நீ !
கையேந்தி நின்றதும்...
கடவுள் உனக்கு வைத்த
பரிசோதனை தான்
ஏனென்றால் ?
விலைமதிப்பற்ற ஒன்றை
ஒருவருக்கு
கொடுக்கும் முன்
அதற்கு
தகுதியானவரா ?என்று
காலம் சோதிப்பது
இயல்பான ஒன்றுதானே ?

'பசிக்கு
உணவு வாங்கவும்
நோய்க்கு
மருந்து வாங்கவும்
ஏதாவது கொடுங்கள்' என்று
நீ கை நீட்டிய போது...
ஒருவன்
காரி துப்பினானாம்...
நீ மறுகையை நீட்டி
அது எனக்குக் கொடுத்தாய்
என் குழந்தைகளுக்கு
ஏதாவது கொடு என்று
கேட்டாயாம்......
அப்போதுதான்
இந்த சமுதாயம்
முதன் முதலாக
காறி காறி துப்பிக் கொண்டது
தன் முகத்திலேயே.....!!!

உன்
இரு கரங்களைக் கொண்டு
இயன்றவரை
உதவிகள் செய்தாய்.....

தொழு நோயாளிக்கு
மருந்தானாய்...
பசிக்கும் குழந்தைக்கு
பால் ஆனாய்....
எய்ட்ஸ் நோயாளிக்கு
ஆறுதலானாய்....
அனாதைகளுக்கு
உறவானாய்....
சோகங்கள் தீர்க்க
கண்ணீரானாய்....
கவலைகள் மறக்க
ஆனந்தம் ஆனாய்....
கல்வி தாகம் தீர்க்க
கல்லணை ஆனாய்....
நிர்வாணத்திற்கு
ஆடையானாய்....
அழுக்குகளுக்கு
சுத்தமானாய்......

இரு கரத்தினாலேயே !
இத்தனை செய்கிறாயே !
இன்னும்
கரம் இருந்தால்
எத்தனை செய்வாய் என்று
எண்ணிய போது தான்....
இவ்வுலகமே !
உனக்குக் கரம் கொடுக்க
முன்வந்தது.....
அன்பு தோற்றதாய்
சரித்திரம் உண்டா.....?

சாலைகளுக்கும்
கட்டிடங்களுக்கும்
உன் பெயரை
சூட்ட வைத்தது
பெரிதல்ல....!

உன் சேவையைப் பாராட்டி
பாரத ரத்னா விருது
வழங்க வைத்ததும்
பெரிதல்ல.....!

நீ நாணயமாக வாழ்ந்து
உன்னை
இந்தியா நாணயத்திலேயே !
வெளியிட வைத்ததும் கூட
பெரிதல்ல.....

ஏன்?
நோபால் பரிசு
பெற்றது கூட பெரிதல்ல...

எங்களை
பெற்றெடுக்காமலேயே !
உன்னை
"அன்னை " என்று
அழைக்க வைத்தாயே !
அதுதான் பெரியது
அதுதான் பெரிது
தாயே...!!

வாழ்க உன் புகழ்
வளர்க உன் பெருமை

இவண்
*கவிதை ரசிகன்*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

எழுதியவர் : கவிதை ரசிகனன (26-Aug-24, 8:34 pm)
பார்வை : 25

மேலே