கிருஷ்ணக் கிறுக்கு
கிருஷ்ணக் கிறுக்கு
--------------------------------------
(ஒரு கதை சொல்லலாம்)
ஸ்ரீ க்ருஷ்ணனை நேசித்த அத்தனைப் பெண்களும்
கிறுக்குக்காரிகள் தான்.
ருக்மணி அழுதுக் கொண்டே கேட்கிறாள். மனைவியாக இருப்பதைவிட காதலியாகவே இருந்திருக்கலாம்போல்.
ஆம், எங்கும் எதிலும்
என்னை உன்னிடம் சேர்த்து யாரும் பேசிடவில்லையே மாதவா.
பொய்யிற்கோ நிஜத்திற்கோ
புரளி பொதுவானதுதானே.
உன்னுடன் ஒரு புரளியிலாவது
நான் அனர்த்தப் பட்டிருப்பேனே ஆனால்
எத்தனை இன்பித்திருப்பேன்.
"சர்வமும் ராதே கிருஷ்ணா, ராதே கிருஷ்ணா "
அவன் வாழ்ந்து சென்ற இடங்களில் எல்லாம் ஒவ்வொரு பிருந்தாவனம் இருக்கும். அத்தனை பிருந்தாவனங்களிலும்
ஆயிரம் ஆயிரம் காதல்கள் இருக்கும்.
திரும்புகின்ற திசைகளிலெல்லாம்
அவனை நேசித்தவள்களின்
சிரிப்பொலிகள் அசரீரித்துக் கொண்டே இருக்கும், ஓயாத முரளி ஓசையுடன்.
கதை என்று சொல்லணுமா ?
காதல் என்று சொல்லணுமா. ?
யார் யாருக்கோ இயல்வது கதையாக
இருக்கலாம்.
காதல் மட்டுமே கதையாகக் கொண்டவனுக்கு கதை இறந்து
காதலே சரித்திரமானதை என்னதான் சொல்வது ம் .
அவள்கள் காத்திருப்புகளையெல்லாம்
அவன் ஒளிந்து நின்று
இரசித்த ஒவ்வொரு பூமரங்களுக்குப் பின்னாலும்
நீலம்படர்ந்திருக்கிறது.
எத்தனைச் சரங்களால் ஆபரணங்கள்
பின்னி அணிந்தானோ ?
எத்தனை எத்தனை மலர்ச்சரங்கள்
அவன் திருமேனித் தழுவியிருக்கக்கூடுமோ ?
அத்தனையும் உயிரற்றவைகள் என்பதால்
அதிகம் நேசித்திருந்தானோ?
எல்லாம்
நினைக்கையில்
பித்துக் கொள்கிறாள்கள் இல்லையா ?
ராதையின் நிலை ஒருப்பக்கம் இப்படி இருக்க.
பார்ப்போரையெல்லாம்
வசீகரித்து கள்ளத் தனம் ஏனடா
என்பதுபோல்
ஒரு சத்தியம் செய்து
நொடியில் காதலித்து
நொடியில் ஏமாற்றி
நொடியுள் எங்கோ மறைந்துவிடுகிறான்
ஆயர் பெண்களுக்குள்.
கிருஷ்ணன் தன்னை காதலிக்கிறான் என்றதும்
அனைவரும் சிரிப்பார்கள்.
அவன் சத்தியம் செய்தானா
அதை நம்பாதே என்பார்கள்.
ஏதும் புரியாமல்
விழி மிரள
முழிக்கிறாள் ராதை
எல்லோரையும் யமுனையின் களிப்பில்
ஆற்றிவிட்டு
ராதையைமட்டும்
பிருந்தாவனத்தில் சந்திக்கிறான்
என்றால் அதுதான்
அவன் அவள் மேல் வைத்திருக்கும்
காதலின் உண்மை நிலை.
இதை அவள் உணர்வாளா என்பதில்
சற்றுத் தயக்கம் தான்.
ஏனென்றால்
இவனைக் காதலித்துவிட்டால்
கிறுக்கு நிலையை அல்லவா
அடைவார்கள்.
அதிலும் இவளிற்கு அவன்மேல்
அதிகிறுக்கு.
அவன் பிறவி காரண ப்ராராப்தங்கள் நிறைவேறவே
கோகுலம் விட்டு மதுரா
போகிறான்.
கதையோ காற்றில் கலந்துவந்த புரளியோ காதலோ எதுவோ
அவள் புலன்களுக்குத் தொடர்பின்றி தன் உள்ளத்தில் உள்ள எண்ணங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது
காலம்.
இப்பிரிவினையைச் சொல்ல
கிருஷ்ணன் அவளை
விரைவில் அருகிவிடக் கூடாதென
பிரபஞ்சத்தை இறைஞ்சினாள்.
எல்லோரிடமும்
விடைப் பெற்றுக் கொண்டே வருகிறான்.
ஆநிரைகள் அழுதுப் புரண்டன.
வானமழைத்துளிகள்
அவன் வழிமறைக்கமுற்பட்டன.
அழகிய குவளை மலர்ப்போன்ற
அவன் பாதம் பட்டு கிளர்ந்தெழுந்து
இளமைக் கண்ட புல்வெளிகள்
வெளிச்சம் இழந்து உடைகின்றன.
கோகுலத்தின் தாமரைகள் கூட
ஆதவனை மறந்திருந்தன
இவன் நீல தேஜஸ்களால்
ஒருகோடி பரிதிகளை துளைந்திருந்தானே அவைகளின்மேல்.
ஆயர்ப் பெண்களோ
இனி அவனில்லாமல் போகும்
அவஸ்த்தைப் பொழுதுகளை
விழுங்கிட முடியாது
மூச்சுமுட்டி நின்றார்கள்.
விழிச்சொல் விதைத்தார்களே அன்றி
அவனே வேண்டுமென விரதம் பூண்டவர்கள் இல்லையா ம்
அவன் உணர்ந்திருந்தான்
ஒரு ராதையை இழக்கப்போகும்
வலிக்கு சமமானதுதான்
கோகுலத்தை இழந்து அவன் போவதும்.
கோகுலத்தை சந்தித்து
விடைப்பெறும் போதே
பாதி இறந்திருந்தான்.
ராதையை சந்திக்க
ஒரு பின்னிரவு வேண்டும்
என்றைக்கும் மாறாக
அவன் பிருந்தாவனத்தில்
இவனுக்கு முன்பாகவே காத்திருக்கிறாள்
அவன் ஒட்டிநின்ற
ஒளிந்து நின்ற பூமரங்களிடமெல்லாம்
அவன் போகிறதைப் பற்றி
சொல்லி அழுகிறாள்.
அவன் வருமுன்னால்
அழுது தீர்த்துவிடுவோம்
என்று நினைத்தாளோ என்னவோ ?
அவன் முன்னால்
கண்களில் திளக்கமின்றி
பேசிடவேண்டும் என்பதாலோ
என்னவோ ?
அழுதுத் தீர்க்கிறாள் .
நினைத்தது மாதிரியே
இரவும் உறங்கியப் பின்னர்
ஒரு திருடன்போல்
(ஆம் திருடன் தானே
ஆண்பெண் எனாமல்
அத்தனை இதயங்களைத் திருடிக்
கொண்டு
அடர்ந்த ஓர்க் காரிருளில்
அனைவரையும்
விட்டுப்போகும் திருடன் தானே)
பின் வாசல்வழியே வருகிறான்
பாதம் பட்டப் புல்வெளிகளும்
பிருந்தாவன மலர்ச்சரங்களும்
மயக்கம் விழுத்து
ஒருநொடி சிலிர்த்தெழுந்தன
அவளும் சிலிர்ப்புற்றாள்
கண்களின் கடைசித்துளி
கண்ணீரையும்
துடைத் தெறிந்தாள் .
விசும்பல்களை விக்கல்களை
விழுங்கும் நொடி
அவன் நீலம் பாரித்து
மீண்டும் கலங்கி நின்றாள்.
முகம் பார்க்கவில்லை
ஏன் இவ்வளவு நேரம் என்ற வாய்மொழி இல்லை.
எங்கு திரும்பினால் அவனைக் கட்டியணைத்து
பிரியமறுப்பாளோ என்ற
துடிப்பு மட்டும்
அதிகரித்துக் கொண்டே இருந்தது.
என் பெயரை முனங்காத
சமயமே அவனிடம் இருந்ததில்லை.
எவ்வாறு அணுகியிருப்பான்
எத்தனை பேசியிருப்பான்
கெஞ்சியிருப்பான்
கொஞ்சியிருப்பான்
முத்தமழைகள் தெளித்திருப்பான்
சத்தியம் செய்தானே
இப்போது இந்த நீள் மெளனத்தை உடைக்க இத்தனை நேரமா
என் பேரை உரைக்க இத்தனைத் தாமதமா
என்றே நினைக்கிறாள்.
ராதா
துடிப்பு நின்ற அதிர்வு அவன் குரலில்.
திரும்பிப்பார்த்துவிடக் கூடாதென்பதில்
இப்போதும் உறுதியோடு இருந்தாள்.
ராதா நான் போகிறேன்.
மிருதி மட்டும் வைத்துவிட்டு
ஆகிருதியை கொண்டுபோகிறாயா
கிருஷ்ணா .
எல்லோரும் சொன்னார்கள்
அவன் வருவான்
சிரிக்க சிரிக்கப் பேசுவான்
சிரிக்கச் சொல்லித் தருவான்
முத்தங்களால்
முயங்கக் கிடத்துவான்
உன்னை மட்டும் தான் காதலிக்கிறேன்
என்பான்
உனக்காகவே உயிர்வாழுகிறேன்
என்பான்
அளவற்ற சத்தியங்கள் செய்வான்
பிரிய ஆயிரம் காரணங்கள் சொல்வான்
அத்தனையையும் அர்த்தமாக்குவான்
ஆமோதிக்கச் செய்வான்
வெண்ணெய் களவாடிடும் போது
யசோதையை ஏமாற்றியதுபோல்
பின்பு ஒருநாள்
ஏமாற்றிவிடுவான் என்றார்கள்.
ஆனால்
என்மீதான உன் பிரியம்
அப்படியானதில்லை என்பதை உணர்வேன்.
பின்பு ஏன் இந்த விதிகொடுக்கிறாய் ?
என்றாள்
ராதா ஒன்றிர்க்கும் என்னிடம் பதில் இல்லை ஒன்றுமட்டும் உறுதி அளிக்கிறேன்.
மானுட உடலெடுத்துவிட்டதால்
மனதோடு வாழ்கிறேன்
மனதில் உனதோடு போகிறேன்
எத்தனைப்பேர்
அருகி நின்றாலும்
உன்னை நினைத்துக் கொண்டே இருப்பேன்.
உன் நினைவுகளின்
ஆளுமையால்
அழுதுக் கொண்டே இருப்பேன்.
நான் அனைத்திலும்
அனைவரிலும் நிறைந்திருப்பதால்
என் மனது பிரதிபலுக்கும்
நம் காதலும்
நம் பிரிவின் சோகமும்
உலகோர் அனைவராலும்
போற்றப் பட்டுக் கொண்டே இருக்கும்.
நீ என்னுடன் ப்ரார்த்திக்கப்படுவாய்
ராதே ராதே ஷ்யாம் என்று அகிலம் புகழ.
இவையெல்லாத்திற்கு மேல்
என்றும் இல்லாமல்
ஒன்றை நினைக்கிறானா என்றுத் தெரியவில்லை.
ராதை இவன் ஸ்பரிசம் உணர்ந்திருக்கிறாள்
இவனும்தான் .
ஆனால் பெரிய இரகசியம் ஒன்று இருக்கிறது
இராதையின் காதலைவிட
இவன்மேல் ஏதும் சொல்லிவிடாமல்
பித்துப்பிடித்தவள் போல்
நேசித்திருந்தவள் .
அவனை அனு தினமும் கொஞ்சித் தீர்த்தவள்.
அவன் முரளி கானத்தை இப்பிரஞ்ச அழகினோடு இணைத்துக் கொடுத்தவள்
சிறு குழந்தையாக
கொண்டு வரும்போது
அவன் பிஞ்சு பாதங்களைத் தடவிக் கொடுத்தவள்
இவன் சந்தோஷங்களில்
ஆர்ப்பர்த்தவள்
இவன் சோகங்களில் அழுகின்றவள்
இதோ இன்றைய
இவன் பிரிவினால்
செய்வதறியாமல் விசிற்பிடித்து
ஓய்ந்து ஓசையின்றிக் கிடக்கிறாள்
பேசும் மொழி அறிந்திருப்பாளானால்
ஆற்றித் தேற்றி ஆறுதல்
அளித்திருப்பாளோ என்னவோ
விடுகதையானது
அவள் நேசம்
ராதையின் நேசம் சொல்லிவிட்ட நேசம்
அவளின் பிரிவும் கூட
அப்படித்தான்.
இவள் அப்படி இல்லையே
அவனை இரசித்தது தவிர
அவன் எப்போது வருவான்
வருவானா மாட்டானா என்று
காத்திருந்ததைத் தவிர
அவன் கால்பட எழும்பிய சிற்றலைகளால்
வெட்கித்திருந்ததைத் தவிர
வேறு என்ன சுகம்
கண்டிருந்தாள் "யமுனை"
இனி இவன் பெருவிரல் தொடாமல்
வற்றிப் போவாளோ என்னவோ
கிருஷ்ணா
நீ யமுனையின் காதலை
உணர்ந்திருப்பாயோ என்னவோ.
பைராகி