கீதை வெண்பா 4 வது அத்தியாயம் ஞானகர்ம ஸந்நியாச யோகம் 8 பா 37 38 39 40 41 42

37 .
எவ்வாறு செஞ்சுடர் விட்டெரியும் தீக்கனல்
வெவ்விற கையெரித்து சாம்பலாக ஆக்கிடுமோ
அவ்வாறு ஞானத்தீ கர்மம் அனைத்தையும்
செவ்வனே சாம்பலாக் கும்

38 .
தூய்மைசெய்வ தில்ஞானம் போலவொன் றில்லையாம்
ஆய்ந்தறியின் இவ்வுலகில் யோகம் தனிலேயே
தோய்ந்தவோர் சித்தன்கா லப்போக்கில் தன்னிலேயே
ஆய்ந்தறி வான்ஞானத் தை

39 .
நல்ஞானத் தில்தோய்ந்த நற்சிரத்தை கொண்டவன்
பல்புலன் தன்னை அடக்கிஞானம் பெற்றிடுவான்
மேலாம்நல் ஞானம் அதிவிரைவில் பெற்றவன்
மேலாம்நற் சாந்திபெறு வான்

40 .
அக்ஞானி நற்சிரத்தை யற்றய்ய மேயுடையான்
எக்காலும் பேரழிவை யேஅடைவான் பூமியில்
இவ்வுலகும் அவ்வுலகும் இல்லாம லேபோமாம்
இவ்ஐயம் கொண்டவனுக் கே

41 .

தனஞ்சயா யோகத்தால் கர்மத்தை விட்டு
உனதுநல் ஞானத்தால் உன்னய்யம் நீக்கியே
ஆத்ம சொரூபத்தில் நீதிளைத்தால் கட்டாதவ்
ஆத்மாவை கர்ம தளை

42 .
இதயத்தில் அக்ஞானத் தால்தோன்றும் ஐயம்
அதனைநீ ஞானவாளி னால்வெட்டி யோகம்
இதயம் தனில்நிறுத்தி நீயுயர்வாய் பார்த்தா
பதறாமல் நீயும் எழு

----4 வது அத்தியாயம் ஞானகர்ம ஸந்நியாச யோகம் முற்றும்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Sep-24, 5:46 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 15

மேலே