மழையாகிய நான்.....

என் நிலாத் தோழியும் காணவில்லை!
சூட நினைத்த நட்சத்திர மலர்களும்
மறைந்து கிடக்கின்றன!
கருந்தோள் முகில்களில் சிறைப்பட்டு கிடக்கின்றேன்.
மரங்களின் குளிர்த் தென்றல்
தூதும் வந்துவிட்டது.
மயில்கள் ஏனோ ஆனந்த நடனமிடுகின்றன!

சிறை உடைக்க இடிகள் இடித்தேன்.
மின்னல் பாய்ச்சி கிழித்தே விட்டேன்.
எனக்கும் இதோ இரவில்
கிடைத்த சுதந்திரம்!

விரைவில் புவியில் உங்களை
அணைக்கப் போகிறேன்,
காற்று நண்பனிடம் பேசி
முடித்துவிட்டு.

ஓய்வின்றி சுழலும் புவி வீரனை
முத்தமிடுகிறேன்.
நேர்கண்ட சாட்சியாய் மண்வாசத்தை
அனுப்பி வைக்கிறேன்.

வறட்சி காலத்தில் என்னை வரமாய்
வேண்டிய மக்களே!
இதோ என்னை அணைத்து கொள்ளுங்கள்!

அழகு மயில் பெண்ணை அணைக்க
நினைக்கையில் கருப்பு குடை விரித்து
தடுக்கும் காதலன்,
அவனினும் எளிதாய் அவள் அங்கம்
தொடக்கூடும் என்பதால்.

நெற்றியில் பட்ட முதல் துளியில்
சிலிர்த்த சிறு பிள்ளை
சட்டென்று தாயால் இழுக்கப்பட்டு
இல்லத்தில் இப்பொழுது.

நானின்றி உயிர் வாழக்கூடுமோ?
பிழைப்பை கெடுத்ததாக புலம்பும்
சாலையோர கடைக்காரன்.

அணைக்கத்தான் வருகிறேன்
ஏனோ எங்கும் கருப்புக்கொடி
எதிர்ப்புக் குடைகள் விரிக்கப்படுகின்றன.

மாரிதான் காக்கும் மாதவன் என்ற
உழவன், சற்று மிகுந்து வந்ததால்
அழிக்கும் சிவனானதாகச் சொல்கிறான்.

இறங்கி வந்தால் மிதிக்கப்படுவீர்!
உணமையான கூற்று.
இரங்கி இறங்கி வந்தேன்.
சகிக்க முடியாமல் மிதிக்கும் மக்கள்.

அணைக்க வந்தேன் அனைவரையும்,
சாக்கடையில் தள்ளப்படுகிறேன்
அணைக்கப்படாமலும் சேகரிக்கப்படாமலும்.

சிறு புற்களுக்கு தெரியும்
என்னைக்கொண்டு தன்னைப் பசுமையாக்க,
பயிர்களுக்கு தெரியும்
என்னைக்கொண்டு தன்னை உயிர்ப்பிக்க,
விலங்கினமும் அறியும்
என்னை தேவைக்கதிகமாய் வீண்படுத்தாமலிருக்க.
கோடையில் தேடிச் சுரண்டும் மனிதனுக்கு
ஏனோ தெரியவில்லை என்னை
முறையாய் பயன்படுத்த!

பாருங்களேன்! பூதங்களில் கருணை
மிகுந்த பூதம் நான்.
வந்த காலத்தில் ஏசப்பட்டாலும்,
வீணாக கடலில் வீசப்பட்டாலும்,
வரும் காலத்திலேனும் முறைப்படுத்தப்படக்கூடும்
எனும் திடமில்லா நம்பிக்கையோடு,
மீண்டும் நிலாத்தோழி நோக்கி
நட்சத்திர பூக்கள் சூட விரும்பி
மனிதன் கொன்றதால் நீர் ஆவியாகி
விண்சென்று மீண்டும்
உயிர்த்து வருவேன்......





எழுதியவர் : செந்தில் குமார் (5-Nov-11, 2:56 pm)
பார்வை : 257

மேலே