நாம், இப்புனித மண்ணில் பிறந்த நல்ல மைந்தர்களா?

பல இடங்களில், பல பரிணாமங்களில்
நாம் திரிகிறோம்

இப்புவியில்
எவ்விடத்தில், எந்நேரத்தில்,
எப்பரிமாணம் பொருந்தும் - என அறிந்து
அப்பரிமாணம் நாம் ஏற்கிறோம்.

பல காலகட்டத்தில்,
"தர்மத்திற்கு புறம்பாக தனம் கிட்டும்" - என்ற கூற்றில்
கிட்டும் தனம் உண்மைக்கு புறம்பானது - என
நன்கு அறிந்தும்
நாம் அணிவோம் பச்சோந்தியின் பரிமாணம்.

இவ்வாறு,
கால மாற்றத்தால்
பல பரிணாமங்களை பூட்டிப் பார்த்த தனக்கே -
அறியாதுபோனது எப்பரிமாணம் என் முதல் பரிமாணம்?

சொல்லப்போனால் வெட்கக்கேடு,
இன்று,
உடலில் அன்னை ஊட்டிய பாலும் இல்லாதுபோனது - உயிரில்
தந்தை சொல்லித்தந்த தர்மங்களும் செல்லாதுபோனது.

பூமியின் சுழற்சி
என்றும் சீரானதே;
அன்றும் இருபத்திநான்கு மணிநேரமே,
இன்றும் இருபத்திநான்கு மணிநேரமே.
நாம்தாம் மாறிவிட்டோம்
காலத்திற்கு ஏற்றாற்போல்

நாம் -
பணத்திற்கும்,
கெட்ட குணத்திற்கும்,
உயிர்களின் அழிவிற்கும் - தன்னை
விற்று வாழ்தல் வாழ்வல்ல.
மாறாக,
தன் மனமுடைந்தாலும்,
தான் உடைந்தாலும்,
தர்மத்தின் தலைத் தன்னால்
உடையாதுகாத்தலே
போற்றுதலுக்குரிய வாழ்வாகும்! - இப்புனித
மண்ணில் பிறந்ததற்கும் சான்றாகும்!!

யோசித்துப்பாருங்கள்,
நம் முதல் பரிமாணம் யாதென்று?
தாய்ப்பாலில் தாயூட்டிய நல்லெண்ணங்களும்,
தந்தை சொல்லித்தந்த உண்மை, நியாய-தர்மங்களும்.

காப்போம்
நல்லெண்ணங்களையும், நியாய-தர்மங்களையும்;
இருப்போம்
பெற்றோருக்கு நல்லப் பிள்ளைகளாகவும்,
இப்புனித மண்ணிற்கு நல்ல மைந்தர்களாகவும்....

எழுதியவர் : A பிரேம் குமார் (6-Nov-11, 10:22 am)
பார்வை : 285

மேலே