கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி - விவசாயி ...
காலையிலே கருக்கலிலே
கண்தூக்கம் தான் தொலைத்து ,
பழயகஞ்சி பானையிலே
பக்குவமாய் மனைவி தர,
பதறாமல் குடித்துவிட்டு
பாங்காக கிளம்பிவிட்டான் ....
ஏர் எடுத்து தோளில் மாட்டி
ஏற்றமாய்த் தன் மாரைத்தூக்கி ,
மடித்தவேட்டி பிடித்து நிற்க
மம்பட்டி கையில் கொண்டு,
மாட்டையும் தான் ஓட்டிகிட்டு
மவராசன் கிளம்பிவிட்டான்......
மாடு கட்டி ஏறு பூட்டி
மாடாக தான் உழுது ,
உழுத வயக்காட்டினிலே
விதைநெல்ல விதைச்சுபுட்டு
வகையான உரமும் போட்டு
வளரும் நாளைப் பார்த்திருந்தான்.....
பருவமழை பொய்த்துவிட்டால்
பட்டதெல்லாம் வீணாகிடுமே !
வருணனே உன் வருகையினை
வஞ்சித்து சென்றிடாதே .
வாழ்விழந்து நின்றிடுவோம் ,
வழி செய் என வேண்டி நின்றான்......
கலைஎழிலாய் கதிர்மணிகள்
கண்முன்னே வளரக்கண்டு !
காக்கா கடுவன் எல்லாம்
கண்டபடி மேய்ந்திடாமல்
கவனமுடன் காவல் செய்து
கண்தூக்கம் தொலைத்துவிட்டான்.....
அறுவடைநாள் அருகில் வர
அளவில்லா மகிழ்ச்சியோடு !
அறுவடையும் முடித்துவிட்டு
போர் அடித்த நெல் எடுத்து ,
விற்றுவர சந்தைக்கும் தான்
விவசாயி கிளம்பிவிட்டான் ..............
லாபமேதும் இல்லாம ,
நட்டத்தையும் சொல்லாம ,
விற்ற பணம் வாங்கிகிட்டு ,
விரசாக வீடு சேர்ந்து
கட்டியவள் கையில் தந்து ,
செலவு பக்குவமா செய் என்றான்.......
கொண்டுவந்த பணம் என்றும்
குடும்பம் நடத்த தேறாது ,
விதைத்தவனின் வீட்டிற்கோ
சோற்றுப்பானை மிச்சம் ஆச்சு.
பசியினிலே பரிதவிச்சு
பசங்களையும் வளர்த்துவந்தான் ......
குடும்பம் நடத்த வழி இல்லை - இந்த
வலிமிகுந்த வாழ்க்கையிலே
ஊருக்கெல்லாம் சோறு தந்து
தன் வாழ்வை தவறவிட்டான்.
தப்பிவாழ வழியும் இன்றி
தற்கொலையும் செய்துவிட்டான்.......
விவசாயி வாழ்க்கையிலே
வெளிச்சம் இல்லை எந்நாளும் ,
நாட்டை வாழவைக்கும் நல்லவனோ
நாண்டு நிற்கும் நிலைமை இங்கே ,
உடலுழைப்பால் உயர்ந்தவனின்
உடலும் இங்கே உரமாச்சே ........
விதிவசத்தால் விளைநிலமும் - இன்று
வீட்டுமனைகள் ஆகிவிட
அடுக்குமாடி கட்டிவிட்டால்
அணைந்திடுமோ வயிற்று பசி ,
உறைவிடத்தை நிரப்பிவிட்டால்
உணவுக்கும் தான் என்ன செய்வாய் ?
கணினி முன்னே அமர்ந்துகொண்டு
கணக்குபோடும் சந்ததியே ?
விவசாயம் இல்லையென்றால்
என்னவாகும் உன் கதியே ?
விவசாயம் வாழ்ந்தாலே
விருட்சமாகும் நம் வாழ்க்கை .........
விவசாயம் வளர்ந்து நிற்க
விவசாயி வளரவேண்டும் !
கடவுள் தந்த தொழிலாளிதனை
காப்பது நம் கடமையன்றோ
வறுமையினை ஒழிதெடுத்து
வளர்த்தெடுப்போம் விவசாயம்........