இவனுமொரு இந்தியன்...!

பகுத்தறிவுப் புனல்
இது வற்றாது..!

மயங்கிக் கிடக்கும் மக்களுக்கு
நான் தரும் மருந்து
ஏழைக்கு வாழ்வளிக்கும் இது
எதிர்கால விருந்து..!

ஊழல் பெருச்சாளிகளுக்கு
நான் தரும் விஷம்
என்று போகுமோ நம் நாடு
நல்லோர் வசம்...!

ஆடை அவிழ்த்து ஆடுவோரெல்லாம்
பகுத்தறிவு பேசுவது நம் நாடு
மானம் பெரிதென வாழ்வோரெல்லாம்
மங்கிவிட்ட இது பேய்க் காடு..!

தலைவன் என்ற சொல்லுக்கு
தப்பான அர்த்தம் சொல்லுமகாரதி
எவன் வந்தால் ஒடுங்குமோ
இந்தச் சினிமாவின் அகராதி..!

கோடி சம்பளம் வாங்குபவனுக்கு
கோணி தைப்பவன் பற்றியென்ன தெரியும்
ஏசி காரில் பறப்பவனுக்கு
ஏழை என்றால் என்ன தெரியும்..!

பணம் வாங்கி நடிக்கத் தெரியும்
ஆட்சிக்கு வந்த பின்னும்
யார்யாரிடமோ பணம் வாங்கி
இல்லை என்று நடிக்கத் தெரியும்..!

நாடே சிக்கிக் கிடக்க
சினிமா என்ன சிறையோ
விடுவிக்கத் தேவையென்ன
விடுதலைப் பறையோ..!

இதோ கவிதைப் பறையை
உங்கள் காது நோக்கி அறைகிறேன்
என் கவிதைக் கலப்பையால்
உங்கள் உள்ளங்களை உழுகிறேன்..!

சிரிக்க வைக்கிறார்கள்
சிந்திக்க வைக்கிறார்கள்
அது அவர்கள் தொழில்
அதற்காக அவர்களை
ஆட்சியில் வைப்பதல்ல எழில்..!

ஆட்சிக்கும் அரசியலுக்கும் இப்படித்
தொழில் செய்பவர் வேண்டாம்
குடும்ப அரசியல் பேணும்
கொடுமைக்காரக் கோமாளிகள் வேண்டாம்
ஆடை அவிழ்த்துத் திரியும்
நடிகைகள் வேண்டாம்
அவர்களைக் கொஞ்சித் திரியும்
நடிகர்களும் வேண்டாம்..!

நாட்டுக்காய் நல்லதொரு
தலைவர் நாம் தேடுவோம்
காமராஜர் போல கண்ணியவானாய்
நேதாஜி போல நெஞ்சுரம் நிறைந்த
நல்ல தலைவர் நாம் தேடுவோம்..!

கனத்த நெஞ்சத்தோடு
சிவந்த கண்களோடு
நாட்டின் நலனுக்காய்க் கேட்கிறேன்
நல்லதொரு தலைவர்
நாம் தேடுவோமா
இல்லையேல் நல்லதொரு
தலைவராய் நாமே ஆவோமா!!?

இந்தக் கேள்வியோடு
உங்களைக் கெஞ்சும்
இவனுமொரு இந்தியன்..!

எழுதியவர் : ஆண்டனி (13-Dec-11, 7:10 pm)
பார்வை : 228

மேலே