ஒரு தோழன் வேண்டும் !!!
![](https://eluthu.com/images/loading.gif)
கண்கள் பேசும் காதல்மொழியில்
உறைந்திருப்பவனாய் வேண்டாம் ...
காதுகள் சிவக்க கருத்துபரிமாறி
காலம்முழுவதும் தொடரும் நட்பிற்காக ...
ஒரு தோழன் வேண்டும் !!!
ஒரு தேநீர் கோப்பையில் இரு குழாயிட்டு
அருந்துபவனாய் வேண்டாம் ...
இரு குவளையில் கடைசித்துளிவரை
நட்போடு சேர்ந்து பருகிட ...
ஒரு தோழன் வேண்டும் !!!
ஈருடல் ஓருயிராயும்
ஓருடல் ஈருயிராயும் இருப்பவனாய் வேண்டாம் ...
ஈருடல் ஈருயிராய் மோகம் கடந்து
எதார்த்தம் கொண்டு நட்பின் நேசம்மட்டும் வளர்ப்பவனாய் ...
ஒரு தோழன் வேண்டும் !!!
என் கண்ணீர்த்துளிகளை கைகளில்
ஏந்தும் கணவனாய் வேண்டாம் ...
நான் கவலையில் கரைந்து வடித்திடும் கண்ணீரின்
இருதுளியில் ஒன்று அவனுடயதாய் இருக்க
ஒரு தோழன் வேண்டும் !!!
என் புறஅழகை ஆராதிக்கும்
அர்ச்சகனாய் வேண்டாம் ...
சலனமில்லா நட்பின் விழிகொண்டு
பார்ப்பவனாய் ...
ஒரு தோழன் வேண்டும் !!!
காதல் மயக்கத்தில் என் தவறுகளையும்
சேர்த்து ரசிக்கும் காதலனாய் வேண்டாம் ...
நான் தவறிழைக்கும் தருவாயில் தலையில்குட்டும் நடுநிலைமாறா நண்பனாய் ...
ஒரு தோழன் வேண்டும் !!!
வேண்டாம் !!!
காதல்கவி பேசி ...
என் நாணம் சுகிப்பவனாய் வேண்டாம் !!!
ஊடலில் தொடங்கி
காதலில் முடிப்பவனாய் வேண்டாம் !!!
கதைகள்நூறு பேசி காலம்நூறு கடந்தும்
கைகள்கோர்த்து வருபவனாய் !!!
நட்பில் காதல் கொண்டு கலப்படம் செய்யாதவனாய் !!!
நட்பிற்கும் கற்புண்டு என்னும் நியதியை உணர்ந்த கற்புக்கரசனாய்!!!
"இவன் என் தோழன் " என நான் உலகிற்கு உறக்கச்சொல்லும் ஓர் உன்னத்மானவனாய் !!!
ஒரு தோழன் வேண்டும் !!!
ஒரே ஒரு தோழன் வேண்டும் !!!
-அமலா