பிள்ளைப்பிராயத்திலே

என்னுடைய பிள்ளையென எச்சொல்லும்
எடுத்தெறிந்து பேசாதீர்கள் - அச்சொல்
உள்ளமதில் போய்விழுந்து
கல்லெனத் திரும்பவரும்
பல்லுடைந்த போகாதீர்கள்,
சொல்லிழந்து சொதப்பாதீர்கள்.

தொலைபேசி அலறல் கேட்டு ஓடிப்போய் அழைப்பை ஏற்றாள், செல்வி. இது வழமை. தாயாரிடம் தொலைபேசி அகப்பட்டால், தான் தனித்து விடுவேன் என்னும் அங்கலாய்ப்பாகவும் இருக்கலாம். பேசும் பகுதியைக் கையால் மறைத்தபடி ''அம்மா! பிரான்சிஸ்கா விளையாட வரட்டாம். போகட்டா? ''சரிசரி,'' திரும்பவும் கேட்டாள். ''எத்தனை மணிக்கு?, தாயும் 3 மணிக்கு என்று விடையளித்தாள். பிரான்சிஸ்காவிடம் சம்மதம் தெரிவித்து வந்த மகளிடம். ''போவதற்கு முன்னமே ஆக்கம் எழுதி கவிதையும் எழுதிவிட்டு வயலினும் பயிற்சி செய்துவிட்டுத்தான் போக வேண்டும் கட்டுப்பாடு போடப்பட்டுவிட்டது. முனைப்புடன் ஓடிஓடி வேலை செய்தாள். ஆனால் இடையிடையே தாயாரின் கட்டுப்பாடு மீறி வேறுவிடயங்களும் பார்க்கத் தொடங்கிவிட்டாள். நேரம் வந்துவிட்டது. ஆனால், தாயாரின் உத்தரவு பிழைத்துவிட்டது. ''அம்மா வந்து கவிதை எழுதுகின்றேன்'' ஆனால் தாயாரோ ''சொன்னால் சொன்னதுதான். எழுதிவிட்டுப் போகலாம்'' ''அம்மா! 3 மணிக்கு வருவதாகச் சொன்னேனே'' ''குறிக்கப்பட்ட நேரத்திற்குப் போக வேண்டுமென்ற அவசியம் இல்லை'' ''நீங்கள் மட்டும் போன கிழமை தமிழ் நிகழ்ச்சிக்கு 3 மணிக்கென்றால் 3 மணிக்கு நிற்கின்றீர்கள்தானே. நானும் அப்படித்தான் நேரம் கடைப்பிடிக்க வேண்டும் அம்மா'' திரும்ப வந்து விழுகின்றது அடி. சிரிப்பையும் சிந்தனையையும் தூண்டிவிட்டது, அவ்வார்த்தை. ''நீ சொல்வது சரிதான். ஆனாலும் நான் எனது வேலைகளை போவதற்குள் முடித்து விடுவேன்''அம்மா... வடை செய்துமுடியவில்லையென்று மீதியை வைத்துவிட்டுத்தானே போனீர்கள். அதேபோலவே நானும் வந்து மீதியைச் செய்யலாம்தானே? இடையில் கட்டளை மீறியது சமாளிக்கப்படுகின்றது. உணர்கின்றோம். ஆனாலும், சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருக்க வேண்டியது அவசியமாகின்றது. இறுக்கம் இப்போது தளர்கின்றது. விட்டுப்பிடித்து விடயத்தைக் கையாளலாமா? சிந்திக்கத் தொடங்கினாள், சுதா.

இதுவே சம்பவம். பொருத்தமான இடத்தில் சூத்திரத்தைப் பயன்படுத்தி விடை காண்பது போலவே வார்த்தைகளைத் தேக்கி வைத்துப் பொருத்தமான நேரத்தில் பயன்படுத்த வல்லவர்கள் எமது வளர்பயிர்கள். பேச்சு சுதந்திரம் கிடைக்காத காரணத்தினால் இப்படி எத்தனையோ கேள்விகள் எமக்குள்ளே புதையுண்டு போயின. செய்வது சரியென்று நாம் உணராத பருவத்திலே உணராமலேயே வாய்மூடி மௌனிகளானோம். ஆனால், இன்றைய சமுதாயத்தினர் மனதில் பட்டதைச் சட்டெனப் பேசி தம்மைத் தெளிவுபடுத்தக் கூடிய திறமைமிக்கவர்கள். எனவே அதற்கேற்றதுபோல் காலசூழ்நிலைக்கேற்ப பிள்ளைப்பிராயத்திலே அவர்கள் மனநிலை உணர்ந்தவர்களாய் சந்தர்ப்பத்திற்கேற்ப வார்த்தைகளைப் பிரயோகப்படுத்துவதன் மூலம் நிலமையைச் சமாளிக்கும் வல்லமையை நாம் வளர்த்துக்கொள்ளல் அவசியமாகின்றது.

எழுதியவர் : kowsy (7-Jan-12, 11:08 pm)
சேர்த்தது : KOWSY2010
பார்வை : 213

மேலே