பிறப்பில் நான் யார்..?!!

அன்றொரு நாள்....!
நிசப்தம் நிறைந்த அறை அது...!
முற்றிலும் இருள் கூடியிருந்தும் , என் இருக்கையில் இன்பமாய் வீற்றிருந்தேன்..!.
இருக்கையில் உணவு,
உணவுடன் உறக்கம்....!
உறங்கும் முன் உணர்ந்த கொஞ்சல் வார்த்தைகள்...!
எனை சுற்றிய நீரோட்ட கவசம்..!
தனிக் காட்டு ராஜா நான்..!
இருளேரிய சொர்க்கத்தில் இயல்பான துயில் கொண்டிருந்தேன்..!!

சற்றேன அதிர்ந்த அறையில்
பூகம்பம்,
தலை சுற்றி இடரி விழுந்தேன்,
இருட்டறையில் அங்குமிங்குமிருந்து
என் நிசப்தம் கலைத்தது
அவ்விகார வெடிச் சத்தங்கள்...

உயிர் வலியின் அலறல்கள்..
ஜீவ வாசிகளின் அழுகைகள்..
தாங்க முடியாத வலி என்னில்..
அலறலிலும் அழுகையிலும் நானும் இணைந்தேன்..

நான் யார்..?!!
ஏன் இந்த வலி..?!!
எங்கே பிறந்த அலறல்கள் இது..?!!
அருகே இருந்த அறைக் கதவை எட்டி மிதித்தேன்..
இருள் மறைந்தது...
காண முடியா ஒளியில்
கண்கள் கூச
மெல்ல விழித்தேன்....
எனை சுற்றி மானிட வாசம்...
என் அறையின் நிறத்தின் சாயத்தில்
அவர்கள் மீது வழிந்தது ரத்த துளிகள்...
எனை கண்டு அவரில் சிலர் சிரிக்க,
பலர் அழுவ,
இன்னும் நான் செவி கொண்ட அலறல்களும்
அழுகைகளும் ஓயவில்லை..
புகை மூட்டத்தில் வெடித்து சிதறும்
உயிர் சிதறல்களுக்கு இடையே
குழப்பத்தில் இருந்த எனை
உயர்த்தி பிடித்த அப்பெண்
"உண்ட்ட அம்மா நான்.."
என்று அயர்ந்து உரைக்க,
அவள் இட்ட கண்ணீர் துளிகள்
என் கன்னங்கள் தொடும் முன்,
வானில் தொடர்ந்த கணைகள்
எனை பிழந்து துளைத்தது.......
"அம்மா................."
வலியில் அலறிய போது தான் அறிந்தேன்
நான் தமிழன் என..!!


ராம் K V

எழுதியவர் : ராம் K V (8-Jan-12, 2:19 pm)
பார்வை : 489

மேலே