தொலைவாகிப் போன நட்பு
தூர தேசத்தில் இருந்தாலும், என்றும் என் இதயத்திற்கு
அருகில் இருக்கும் இனிய நண்பர்களுக்காக...
அலுவலகம் செல்லும் அவதி இருந்தாலும்
அயர்ந்து உறங்கும் காலை நேரக் குட்டித் தூக்கங்கள் இல்லை...
பம்பரம் போல் சுழன்று, பத்தே நிமடங்களில் பதறாமல் கிளம்பினாலும்
பத்து நாழிகை பதறியடித்து பைக் சாவி தேடும் அவசரங்கள் இல்லை...
தலைக் கவசம் அணியும் சட்டம் இருந்தாலும் - சட்டத்தை
தள்ளி வைத்து சகட்டு மேனிக்கு வண்டி ஓட்டும் சுவாரசியங்கள் இல்லை...
அலுவலகத்தின் அனைத்து மனித எந்திரங்களும் அதிகாரமாய் அமர்ந்திருக்க
அலட்டிக் கொள்ளாமல் தாமதமாய் செல்லும் அய்யோ தருணங்கள் இல்லை...
மேகம் தன் நடுவில், பயணம் செய்யும் வெண்மதி கண்டு - நட்புடன்
தேகம் சிலிர்த்த மொட்டை மாடி நீண்ட இரவுகள் இப்போது இல்லை...
நடு இரவு பிறந்தநாள் கொண்டாட்டங்கள், சின்னச் சின்ன சண்டைகள்,
நேரம் தெரியாத சீட்டுக் கட்டு, கேரம்போர்டு ஆட்டங்கள் – இவையேதும் இங்கு இல்லை...
இதயம் சோர்ந்து வார்த்தைகள் ஊனமான தருணங்களில், தோளைத் தொட்டு
இடர் தீர்த்து அழைத்துச் செல்லும் மாந்தர்'தம்' விரல்கள் இல்லை...
வேண்டுமென்றே, 'வேண்டாம்' என்று நான் சொன்னாலும் - நான்
வேண்டும் என்றே அழைத்துச் செல்லும் குடிமகன்கள் இல்லை...
இதனை கிறுக்கிக் கொண்டிருக்கும் போதே, 'என்ன மச்சி, கவிதையா?' என்று
இதமாய் நையாண்டி செய்யும் இனிய நண்பர்கள் இங்கே இல்லை...
இருப்பினும் -
விரைவில் தாயகம் திரும்பும் நாளை எண்ணியே
ஃபேஸ்புக்கிலும், ஸ்கைப்பிலும் நட்பு பாராட்டிக்
கொண்டிருக்கிறேன் - நான்...!!!