ஒரு மண்ணின் கண்ணீர்
மண்ணெல்லாம் கொதிக்குதம்மா
மனசெல்லாம் பதறுதம்மா
கொட்டும் மழையில
நனைஞ்ச காலமெல்லாம்
கனவாக மாறிப்போச்சே
நடவுப்பாட்டு போனதெங்கே
ராக்காயி மூக்காயி
ராகத்தை காணலியே
கள்ளிப்பால் கொடுமை
இங்கே
கடைசி வரை தீரலியே
கள்ளிக்காட்டு இதிகாசம்
கடைசி வரை முடியலியே
கூட்டாஞ்சோறு போனதெங்கே
கூடியிருந்த நாளெங்கே
வாழ்க்கை கனவையெல்லாம்
படத்தை காட்டி கெடுத்திட்டாக
ஊருக்கு வடக்காலே
நிரஞ்சிருந்த குளமெங்கே
கண்கள் சிவக்க
குளித்த கால மெங்கே
நிர்வாணக் குளியல்
போனதெங்கே
கோலிக்காய் போனதெங்கே
சில்லாங்குச்சி ஆட்டமெங்கே
ஓடிப்பிடித்த ஒய்யார நாளெங்கே
அத்தனையும் போனதம்மா
ஆளுக்கொரு நாட்டாமை
அதிகாரம் பண்ணுறாக
நம்ம நாட்டு சொத்தையெல்லாம்
கூவிக் கூவி
அந்நியனுக்கு விக்கிறாக
நியாயத்த கேட்க
நாதி இங்கே இல்லையம்மா
இயேசு இங்கே வருவாரு
நியாய தீர்ப்பு தருவாருன்னு
எல்லோரும் சொல்லுறாக
இயேசுவை காணலியே
ஏழை சொல் அம்பலத்துல ஏறலியே
தாலிய வித்து
தண்ணீ வாங்கி குடிக்கிறாக
தாகம்தான் தீரலயே
மழைய மாரியாத்தா
கொடுப்பான்னு நம்புறாக
மரத்தையெல்லாம் வெட்டிப்புட்டா
மாரியாத்தா என்ன செய்வா
ஆட்சியில் இருக்கிறவுக
மக்களை அம்மணமாய் ஆக்கிட்டாக
ஜாதி மதமா
நாம பிரிஞ்சதெல்லாம் போதும்
மனுஷனெல்லாம் ஒண்ணா சேந்தா
மத்தாப்பா சிரிச்சிடலாம்