நல்ல வரன்
நீல நிற சேலை கட்டு
கல் பதித்த நகை போடு
வகிடு எடுத்து பின்னல் போடு
மல்லிகை பூ நிறைய சூடு
நான் கருப்பாக இருப்பதனால் பார்த்து பார்த்து ஒப்பனை செய்தாள் அம்மா.
சீக்கிரம் ரெடி பண்ணு, இன்னும் பத்து நிமிடம் தான் வந்துடுவாங்க என்று பதட்டத்தில் வீட்டை அளந்து கொண்டிருந்தார் அப்பா.
ஆரவாரத்துடன் வந்தார்கள்
அறிமுகம் செய்து கொண்டார்கள்
பெண்ணை பற்றி கேட்டார்கள்.
அவனே பேசினான்.
வரதட்சணை வேண்டாம் என்றான், கல்யாணத்துக்கு பின் வேலைக்கு போக வேண்டாம் என்றான்.
எத்தனை நல்ல வரன் இவன், என கற்பனையில் எனை மறந்தேன்.
எல்லாரும் காத்துட்டு இருக்காங்க சீக்கிரம் வந்து சேறு என்று குரல் கொடுத்தாள் அம்மா.
பலகார தட்டுடன் பணிவோடு வந்தேன்,
வணங்கி அமர்ந்தேன்.
என்னை பற்றி கேட்டார்கள், உள்ளதை சொன்னேன்.
பெண்ணை பிடிச்சிருக்கு, நாள் பார்த்து எங்க வீட்டுக்கு வாங்க என்றார்கள்.
இடை மறித்து சொன்னான் அவன்
எனக்கு இளையவளை பிடிச்சிருக்கு என்று.
முதல் முறை வருந்தினேன்.
அழகின்றி பிறந்ததற்காக அல்ல.
அவனை சில நிமிடம் மாப்பிள்ளையாய் நினைத்ததற்காக.