சதக் சதக் சதக் சதக் சதக் சதக்
பூப்பூவாய் பொழிந்தது மழை
அழகழகாய் புன்னகைத்தது மலர்
இதில் பூப்பூவாய் மற்றும் அழகழகாய்
என்பது அடுக்குத் தொடர் - ஏன் ?
பிரித்தால் பொருள் தரும்...!
சலசலவென விழுந்தன மழை
கலகலவென் நடந்தன நதி
இதில் சலசல மற்றும் கலகல
என்பது இரட்டை கிளவி - ஏன் ?
பிரித்தால் பொருள் தராது...!
அருமையாக நடந்து கொண்டிருந்தது
அந்தத் தமிழ் வகுப்பு....!
ஆர்வமிக்க மாணவர் கூட்டம்
அதிசயித்துக் கேட்டுக் கொண்டிருந்தது
டீச்சர் இரட்டைக் கிழவிக்கு
இன்னுமொரு உதாரணம் வேண்டும்
என்றவுடன் ஆசிரியை சொன்னார்...
சதக் சதக் என சகதியில் எருமைகள்
சதக் சதக் என்று ஒரே கோரசாக
சொல்லியபடி தலை குனிந்து
எழுதிக் கொண்டிருந்தனர் எல்லா மாணவர்களும்
சதக் சதக் சதக் சதக்
எல்லோரும் நிமிர்ந்து அதிர அங்கே
ஒரு அதி பயங்கர கொடூரக் காட்சி...!
ஐயோ நெஞ்சு பதை பதைக்கிறதே...!
கண்கள் சொருகி அந்த ஆசிரியை கிடக்க
கையில் ரத்தக் கத்தியோடு அவரை
குத்திக் கொலை செய்த மாணவன் நிற்க !
என்னதான் நடந்தது ?
ஏனடா வீட்டுப் பாடம் எழுதவில்லை
என்று எல்லோர் முன்னிலையிலும் அவர்
ஏசக் கூட செய்யாமல் எச்சரித்திருக்கிறார்
படுபாவி கொன்று போட்டு விட்டான்...!
அறம் செய்ய விரும்பு
ஆறுவது சினம்
குழந்தைகளே அவ்வையாரை
கொன்று விட்டீர்களா நீங்கள்...?
அது சரி......
ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறி
என்று கொலவெறி என்ற வார்த்தை
எழிலாக உங்கள் மலர் போன்ற வாய்களில்
எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் போது
என் பாட்டன் எழுதிய அகர முதல்
எப்படி உங்கள் மண்டையில் நுழையும்
எல்லா நர்சரியையும் மூடுங்கள்
இங்கே சீர்திருத்தப் பள்ளிகளே தேவைப் படுகிறது
இங்கிலீஸ் தேவையைக் காட்டிலும்....!
குழந்தை தொழிலாளர்களே வேண்டாம் என்கிறோம்.......
குழந்தை கொலைகாரர்களா.....?
ஐயோ......இதுதான் நரகமா........!
குத்துயிரில் கொலையுண்ட அவள் ஆன்மா
கண்ணீர் வடித்துக் கலங்குகிறது - என்
கண் மணி குழந்தைகளே
ஏன் இப்படி சீரழிந்து போனீர்கள்...?