கைகளிலே மை எழுதிப் பழகிடாதே

சிக்கலெனும் பணிகளினை ஒதுக்கி வைத்துச்
=சிறப்பான முடிவுகளைத் தவிர்த்தி டாதே!
இக்கூலிக் கிவ்வேலை என்றே சொல்லி
=இயல்பான பணியாற்ற மறுத்தி டாதே!
தக்ககுறிக் கோளில்லா மனிதன் என்பார்!
='தானேதோ பணிசெய்தோம்' என்றி ராதே!
அக்கரையுன் மேலுள்ளோர் விமர்சிப் பார்தான்,
=அதைப்புரிந்து கொள்ளாமல் வேகுண்டி டாதே!

வக்கணைகள் பேசாதே! வகுப்பு வாதம்
=வளர்வதையே விரும்பாதே!வருமை யோன்றே
இக்கொடுமை கட்கெல்லாம் மூலம் என்றே
=எடுப்பாக எண்ணாதே! எது,உன் வாழ்வில்
தக்கதெனப் படுமோ,செய்! தளர்ந்தி டாதே!
=தளர்வோரை ஊக்குவிக்கத் தவிர்த்து அன்னார்
பக்கபலம் என்றவரைப் படைசேர்க் காதே!
=பகுத்தாள நினைக்காதே! பதர்சேர்க் காதே!

செய்கின்ற பணிசிறக்க வேண்டும் என்ற
=சிந்தனையை வளர்க்காமல் கெடுத்தி டாதே!
உய்கின்ற வழியின்றிப் போகும் வாழ்வே!
=உப்பிடும்நற் கைகளினை ஒடித்தி டாதே!
கைசெய்தல் கைங்கரியம்! கடனும் ஆகும்!
='கைகொடுக்கக் கூலி'என எண்ணி டாதே
'மை'செய்தல் இயற்கையென மயங்கி டாதே!
='மாலை'தனை விரைந்தழைக்க முயன்றி டாதே!

கண்ணுக்கு 'மை'எழுது! அழகும் பார்நீ!
=கைகளிலே மைஎழுதிப் பழகி டாதே!
புண்ணுக்கு மருந்தையிடு! புண்ம றைந்து
='புரை'நெஞ்சிற் கூடிவிடத் துணைபோ காதே!
ஒண்ணுக்குள் ஒண்ணாகும் ஒருமைப் பாட்டை
=ஒன்றைக்கொண்டு ஒன்றழிக்க ஊக்கி டாதே!
மண்ணுக்குள் போவதற்கு முயற்சி வேண்டாம்!
=மரணத்தின் தேவதைக்கு தரகன் வேண்டாம்!
= ௦ =

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன்! (10-Feb-12, 7:29 am)
பார்வை : 295

மேலே