நாங்களே குற்றவாளி..! பொள்ளாச்சி அபி
அன்புள்ள மாணவனே.!
ஏனடா உன் நெஞ்சில்
இத்தனை ஆத்திரம்.?
கத்தியால் ஆசிரியரை
குத்திக் கொல்வதை-இதுவரை
கேட்டதில்லையடா தம்பி.!
நீ பிறந்ததிலிருந்து
ஐந்து வருடம்
மட்டுமே உனக்கு
பெற்றோரடா கண்ணே.!
பிறகெல்லாம் உனது
பெற்றோரெனப்படுவது
உனது ஆசிரியர்தானடா.!
கத்தியால் அவரைக்
குத்திக் கொல்லும்போது
நீ அவரது கண்களைப்
பார்த்தாயா தம்பி..?
அதிலுன்னை மன்னிக்கும்
அம்மாவின் கருணை
விழிகளைக் கண்டிருப்பாய்.!
அவர் சிந்திய இரத்தம்
தரையில் வழிந்தபோது
உன்மீது வைத்திருந்த
பாசமும்,அக்கறையும்
பரவிப் படர்ந்திருக்குமே..!
தான் அலறினால்கூட
அடுத்தவர் வந்துன்னை
அடித்திடுவாரென
மௌனமாய் வலிதாங்கி
மயங்கி விழுந்திருப்பாரே.
கண்ணே..!
குற்றம் புரிந்தது நீ
குற்றவாளியாக நீ
ஒரு நல்லவனாக
நீ உருவாவதற்கு
என் ஆசிரியப் பணி
உதவவில்லையே
என்று மறுகியிருப்பாரே..
தான் இறக்கும்போதும்
உன்னிடமுள்ள தவறை
இனி திருத்த உயிரில்லையே
என்று மனதில் கதறியிருப்பாரே..
அய்யோ கண்ணா..
என் நெஞ்சு வெடிக்கிறதே.!
சிறுவர் சிறையிலிட்டுன்னை
சித்திரவதை செய்வாரேயென
அவரது சித்தம் கலங்கி
அழுதிருப்பாரே..!
ஏனடா உனக்குப்
புரியவில்லை.?
மானிடனாய் வாழ
உனக்குத்தெரியவில்லை..!
எங்களுக்கு பணமும்
பங்களாவும்,
பகட்டான வாழ்க்கையுமே
லட்சியமாக இருக்கிறது..!
குழந்தைகளை,
குழந்தைகளாய் வளர்க்க
எங்களுக்கு தெரியவில்லை..!
சட்டத்தின் முன் நீ
குற்றவாளி..
சமூகத்தின் முன்
நாங்களே குற்றவாளி..!