திரும்பிப் பார்க்கின்றேன்
திரும்பிப் பார்க்கின்றேன்
நடந்து வந்த பாதை
கடந்து வந்த காலம்
கல்லும் முள்ளும் குத்திட
கண்ணீர் விட்ட நேரங்கள்
துள்ளி விளையாடி
களிப்படைந்த காலங்கள்
தவறான முடிவுகளால்
தடுமாறிய தருணங்கள்
சரியான முடிவுகளால்
சந்தித்த உயர்வுகள்
ஆனாலும்
வெறுமை நெஞ்சினில்
சலனம் மனத்தினில்
----------------------
திரும்பிப் பார்க்கின்றேன்
விரயமாக்கிய வீணான பொழுதை
சோகமாக்கி செயலிழக்க வைத்த
காதலை
மாதுவின் ஏக்கம்
மதுவின் தாக்கம்
மண்ணான மணித் துளிகள்
புண்ணான நெஞ்சம்
புரையோடின கடன் தொல்லை
-------------------------
திரும்பிப் பார்க்கின்றேன்
வாலிபத்தின் விளிம்பில்
மறந்து விட்ட கடமைகள்
பருவக் கிளர்ச்சியில்
வந்து போன காதல்கள்
------------------------
திரும்பிப் பார்கின்றேன்
கடந்து வந்த பாதையில்
வந்து போன நட்புகள்
காசில்லா வெளையிலும்
கள் வாங்கித் தந்தவரை
மாசில்லா நெஞ்சமுடன்
மறு வாழ்வு சொன்னவரை
வாசலது காட்டி என்னை
வளமுடன் வாழ வைத்தவரை
தமிழாலே கவி எழுது
தனிமை போகும் என்ன்றவரை
நல்லவன் நீயடா என்று
நம்பிக்கை தந்தவரை
----------------------
திரும்பிப் பார்க்கின்றேன்
வேதனைகள் வாழ்வினில்
சகஜம்
நாம் தேடியவை
நம்மால் மற்றவர் வாடியவை
ஆம்
நம்மவர் வாடியதை
நலம் குன்றி நின்றதை
தாங்காது குமுறினேன்
தவித்து விட்டேன்
தவிர்த்து விட்டேன்
இன்று
நான் ஒரு மனிதன்
ஆனாலும் மகாத்மா அல்ல
இது இடை வேளை தானே