இறைவா! உன்னிடம் ஓர் வேண்டுகோள்!
ஒவ்வொரு பெண்ணின் நெஞ்சினிலும்
ஓர் இனிய கனவென்று ஒன்று உண்டு;
வாழ்நாளில் ஒரு நாள் தாய்மைப் பேறு
அடைந்து மகிழ வேண்டும் என்று;
நெஞ்சில் நினைத்த கனவுகள் சில
பல நேரங்களில் பலிதமாவது உண்டு;
இன்னும் சில நேரங்களில் கனவுகள்
கனவாகவே போவதும் உண்டு;
கடி மணமாகி கடந்தன இரு ஆண்டுகள்,
புரிந்தது எங்களுக்கு சில உண்மைகள்,
மருத்துவரும் சொல்லிவிட்டார்,
நான் தாய்மை அடைய முடியாதாம்;
கடவுளே!
தண்டனை ஏன் எனக்கு?
தவறு என்ன நான் செய்தேன்?
தாய்மையடைய வரமருள உன்னிடம்
நான் இறைஞ்சுகிறேன்!
ஆண்டுகள் சில சென்றன,
ஒன்று மட்டும் நான் இன்று
உறுதியாகப் புரிந்து கொண்டேன்,
என் வலியைத் தீர்க்க யாராலும் இயலாதாம்;
ஆனாலும் இறைவா!
உன்னிடம் ஓர் வேண்டுகோள்!
தாய்மை அடைய இயலாத ஓர் பெண்ணை
இனியாகிலும் பூமியில் படைத்து விடாதே!
தாய்மை அடையாத, தாய்மையை உணராத
ஒவ்வொரு பெண்ணும் முற்றுப் பெறாதவளே!