[87] தமது முயற்சி வென்றிடுவீர்!
ஓடும் நதியும் சிரிப்பானால்
உள்ளத் துள்ளே ஒடுங்கிடுமோ?
தேடும் எதுவும் கைவந்தால்
தேக்கம் நெஞ்சில் வந்திடுமோ?
கூடும் நட்பை விரும்பிடுவோர்
கொடுத்து வாழ மறுப்பாரோ?
நாடும் உனதாய் நினைப்பாயேல்
நலிவு செய்வோர் பொறுப்பாயோ?
உள்ளும் புறமும் சிரித்திடுவீர்!
உறுத்தும் கவலை மறந்திடுவீர்!
எள்ளும் கொள்ளும் முகத்தினிலே
எதற்கு வெடிக்க விட்டிடுவீர்?
தள்ளும் முள்ளும் வாழ்க்கைதான்
தள்ளுக கோப முள்ளினையே!
வெள்ளத் தோடு செல்லாமல்
விலகி நீந்தக் கற்றிடுவீர்!
எள்ளும் வாய்கள் மூடிவிடும் !
எதிர்ப்பும் தானே ஓடிவிடும்!
கள்ளும் கழிவி ரக்கமதும்
கவலை கூட்டும்! அழித்துவிடும்!
வெள்ளை மனத்துக் குழந்தைகளை
விரும்பி உம்முள் நினைத்திடுவீர்!
தள்ளிப் போகும் தடைகளுமே!
தமது முயற்சி வென்றிடுவீர்!
-௦-