ஆராரோ பாடிய அன்னை
யாராரோ சொந்தம் என்று வந்தாலும்
ஆராரோ பாடிய அன்னைக்கு ஈடில்லையே
இன்னும் நூறு ஜென்மங்கள்
என் அன்னையாக நீ வேண்டும்
என் பின்னே நீ பிறந்தால்
என் மகளாக நீ வேண்டும்.
என்னை உந்தன் மணி வயிற்றில்
சுமந்தாய் அம்மா
உன்னை எந்தன் நினைவில்
சுமக்கிறேன்
கண்ணை விட்டு ஒளி பிரிதல்
சுகமோ அம்மா?
என்னை விட்டு நீ பிரிந்தாய்
நியாயமா?
ஈ எறும்பு திண்டாமல்
வளர்த்தாய் அம்மா -சுடும்
தீ உன்னை தீண்டுகையில்
தள்ளி நின்றேனே.
வானில் இருந்தே ஒளி தருவாயே.
உன் பிள்ளை எங்களுக்கு வழி காட்டுவாயே
எல்லோர்க்கும் என் அன்னை போல் கிடைக்குமா?
கிடைத்தாலும் என் அன்னை போல் வருமா?
யாராரோ சொந்தம் என்று வந்தாலும்
ஆராரோ பாடிய அன்னைக்கு ஈடில்லையே
இன்னும் நூறு ஜென்மங்கள்
என் அன்னையாக நீ வேண்டும்
என் பின்னே நீ பிறந்தால்
என் மகளாக நீ வேண்டும்.
(என் அன்னை 25.11.2007 அன்று மறைந்த போது எழுதிய கவிதை)