மனம் மகிழ்ச்சியாக வாழ, வாழ்வில் ஒரே வழி

இப்படைப்பை படித்துமுடிக்க சில நிமிடங்கள் எடுக்க வாய்ப்புள்ளது. அதேசமயம்
இழந்த வாழ்வை உயிர்ப்பிக்கவும் வாய்ப்புள்ளது.

முன்னொரு காலத்தில்
குடும்பம் என்பது,
ஒரு குடையின்கீழ்
மதிப்பு-மரியாதை, அன்பு-பாசம், நேர்த்தியான நாகரீகம்
இவைகளனைத்தும் பொருந்தி உறவாடிய
பல உறவுகளின் கோர்வை - வாழ்வில்
பல காலகட்டங்களில்
இறைவன் ஏற்படுத்திக்கொடுத்த
துணைகளின் தேவை.

காலையில் சூரியநமஸ்காரம் செய்து
வீட்டில் விளக்கேற்றும் அத்தை
வாண்டுகளை குளிப்பாட்டி - அவர்களுக்கு
வண்ணத்துணி உடுத்தி அலங்கரிக்கும் சித்தி
அங்கே, ஒரு தித்திக்கும் முத்தம் சித்திக்கு!

பிள்ளைகளை உட்காரவைத்து
அன்பாய் உணவளித்து - அவர்களின்
பசி தீர்க்கும் பெரியம்மா

காலை உணவுமுடித்து
பணிக்கு பறக்கும் வீட்டு ஆண்மகன்கள்
தாழ்பணிந்து அன்னையிடம்,

"பெற்றவையாவும், பெறவிருப்பவையாவும்
அன்பைக் கற்ற உன்னிடம்
சமர்ப்பிப்போம் அம்மா - நீரே
ஒவ்வொன்றின் பொருளறிந்து
இக்குடும்பத்தின் பெயருணர்ந்து
காலத்தின் பொருளுணர்ந்து
யாருக்கெது சரியென்றறிந்து
அனைவரும் உன்பிள்ளைதான்
அனைவர்க்கும் அருள்புரிந்து
ஆசிவாதம் செய்வாய் அம்மா" - என
ஆசிர்வாதம் பெற்று பணிக்கு கிளம்புவர்.

பள்ளிக்கூடம் போகமாட்டேனென
தம்பி அடம்பிடித்தாலும்
அன்பாய் அதட்டி - வழியில்
வம்பாய்க்கேட்கும் சிலபொருட்களை வாங்கிக்கொடுத்து
பள்ளியில் சேர்க்கும் அப்பா

தம்பிக்கு வம்பேதும் வந்தால்
முன்னின்று மொரைக்கும் அண்ணன்
பள்ளியின் மத்தியவேளையில்
உடன்உட்கார்ந்து உணவைப் பகிர்ந்தளிக்கும் அருமை அக்கா

பணிகளைக் கற்றுத்தரும்போது
கடைவியாபாரத்தில்
சித்தப்பாவிடம் கண்டிப்பாக இருக்கும் பெரியப்பா;
கடைசி மச்சானின் தொழிலுக்கு
மாமன் செய்யும் உதவி

வீட்டில்,
ஆயிரம் அலசல்களிருந்தும்
விரிசல் விழாதுகாத்து
வீட்டுவேலைகளையும் பகிர்ந்துக்கொடுத்து
அனைவரோடு அனுசரித்து உறவாடும் மாமியார்
வீட்டின் அவசரத்தேவைக்கான பொருட்களை
வீதியின்கடைசி கடைக்குச்சென்று வாங்கிவரும் மாமனார்

பாத்திரங்களை பார்த்துத் துலக்கும் சித்தி
உடன்கோர்த்து உதவும் மச்சினி
மத்திய உணவுக்காக மீன் வாங்கிவரும் கொழுந்தனார்
காய்கறிகளை வெட்டி,
மீனை லாவகமாக அறுத்து துண்டுபோடும் அண்ணி
சமையலில் வெளுத்துவாங்கும் மருமகள்
மறுபுறம்,
துணிகளை அடித்து துவைக்கும் நாத்தனார்
இவைகளனைத்துக்கும் ஒத்தாசையாய் ஓரகத்தி

தன் தங்கையின் திருமணத்திற்கு
பணம் திரட்டியும், கடன் கேட்டும்
அலையும் பெரியப்பா
அதை அடைப்பதற்கு
அதிகநேரம் உழைக்கும் அப்பா, சித்தப்பா

பள்ளிக்கூடம் முடிந்து
விரைவில் வீடுதிரும்பிய குழந்தைகள் பசிதாங்காதென
அருகில் அமர்த்தி
அன்போடு ஊட்டும் அம்மா
அங்கே, அன்னைக்கு ஓர் எச்சில் முத்தம்!

குழந்தையான தங்கையின்
பிஞ்சுவிரல்களைப் பிடித்து
நடக்கக் கற்றுக்கொடுக்கும் அண்ணன்
இடையிடையே
எதையோ பறித்துக்கொண்டு தம்பி ஓட
பின்னால் துரத்தும் அக்கா

மாலையில்,
சிறுவர்களை கூட்டி
நிமிர்ந்து உட்கார்ந்து
நிலைத்து கவனித்து
படிக்கக் கற்றுக்கொடுக்கும் அண்ணன்
மறுபுறம்,
மாலைப்பொழுதில் வாண்டுகள்மனம் வாடாதுகாக்க
சிறுநடையோ, புதிர்-விடையோ விளையாடி
ஆரோக்கியமாய் பொழுதைக்கழிக்கும் தாத்தா-பாட்டி

இரவு நிலா
இடம் அபகரிக்க - அந்நேரம்
இதயத்தை அவள் பறிக்க
அடம்கொண்டு இடையேற
அன்னம்கொண்டு படியேற
அழகுநிலா துணைசேர
நிலாச்சோறு உனைசேர
அமைதிகொண்டு நீ உண்பாய்
மகளே..........
நாளையஉலகை
அன்புகொண்டு நீ வென்பாய்
-இவ்வாறாக அன்னை, தங்கைக்கு உணவூட்டி கீழ் இறங்க

அவ்வேளையிலே
சிறுசுகளும், இளசுகளும், மூத்தப்பெரியோர்களும்
உணவுமுடித்து இளைப்பாற,
இடையில் வாண்டுகளுக்கு
கொள்ளுத்தாத்தா-கொள்ளுப்பாட்டி
கதைசொல்லி மகிழ்ச்சி பரிமாற,
இனிதாய் நேரத்தைக் கடத்தி இன்பம் கொண்டனர்

வேலை முடித்த கணவன்
வெறும்கையோடு செல்லாது,
மனைவி உண்ணாது காத்திருப்பாள்
மனம் திறந்து பூத்திருப்பாள் - என
வழியில் மலரும்,
நினைவில் இன்சுவையும்,
மறக்காது,
சிறுசுகளுக்கு இனிச்சுவையும் சேர்த்து
வீடு திரும்புவான்

கணவனுக்கு மனைவி
உணவு பரிமாற
உணவை உண்டுமுடித்த கணவன்
மனைவிக்கு எடுத்துரைத்தது,
"இலையில் சூடில்லாசோறும்
கண்களில் சூடு-கூட்டும்
சொல்லாது சொன்னாயடி
சுவையோடு உண்டேனடி
என் உள்ளத்தின் உயிர்ப்பூவே - என்மீது
சினம் கொள்ளாது
என்னக்காக சில நாழிகைகள் தருவாயடி
விரைவில்திரும்பி உன்தடம் பார்த்து வருவேனடி"
- மனைவியும் அன்போடு தலை அசைத்தால்.

வீட்டு ஆண்மகன்கள்
ஒன்றுகூடி
நன்று பேசி
பணி நிலவரங்களைப் பகிர்ந்து,
பின் பிள்ளைகளிடம் சிறுவிளையாடல் செய்து
பண்போடு இரவு நேரத்தில் விடைபெற்று
அன்னையிடம் ஆசிபெற்று
அவரவர் அறைக்கு சென்றனர்.

மனைவியிடம்,
அன்பாய் உரையாடி
அறிவோடு திரைமூடி
ஆனந்தம் பலகூடி
நன்றே வாழ்ந்தனர்.

காலம் எடுத்தாலும் - இரவில்
யாசிப்போருக்காக காத்து,
அன்னம் யாசித்துவந்த
ஆதரவற்ற பெரியோருக்கு
மீதமிருந்த உணவை
மனதாரப் படைப்பாள், பாட்டி
உண்டவர் வாழ்த்த,
பாட்டியின் குடும்பம் வாழ்த்து பெற்றது.

முடிவாக சொல்லவேண்டுமானால்,

அன்று,
குடும்பம் பெரியது
அன்பு நிலைத்தது
வாழ்வில் வழித்துணைக்கு வருவோர் பலரிருக்க
மனம் மகிழ்ந்தது
மொத்தத்தில்,
வாழ்வின் ஆயுள் நீடித்தது

இன்று
குடும்பம் குறைந்தது
பணம் நிறைந்தது
அன்பு அறிமுகமற்றது - இந்நிலையில்
உயிரற்று உடல் திரிந்தும்
ஆயுள் முடிந்தது.


பிறருக்கு என் வேண்டுகோள்:

ஆயிரம் பொய்யான ஆனந்தத்தில் மிதப்பதைவிட,
மெய்யான அன்புநாடி பயணிப்பதே வாழ்வில் சிறந்தது.

எழுதியவர் : A பிரேம் குமார் (28-Feb-12, 12:08 pm)
பார்வை : 1105

மேலே