என் குழந்தையும் நானும்! (பகுதி மூன்று)
ஓரிரு பருக்கைகள் தான்
கீழே விழுகின்றன
நீ எடுத்து வாயில் வைக்கையில்
மிரட்டி -
நீ கீழே போட்டதும்
எடுத்து எங்கோ வீசுவேன்.
நீ நானென்னவோ நீ தின்பதை
பறித்துக் கொண்டதாய்
பார்ப்பாய்.
வேறென்ன, நான் கையில் வைத்திருக்கும்
உனக்கான ஒரு தட்டு சோறு
நான் தின்னாத மிச்சமென
உனக்கு தெரியவா போகிறது!
இங்கே வா
இதை எடுக்காதே
அதை செய்யாதே
அங்கே போகாதே
அடிப்பேன்.. உதைப்பேன் என்றெல்லாம்
மிரட்டுகையில்,
உனக்கு என் மீது
கோபம் வரும்போல்
கண்களை கசக்கி நீ
என்னையே பார்ப்பாய்.
நீ மீண்டும் அங்கே போய்
அதை எடுத்து
எதையேனும் செய்து
எங்கேனும் போய்
எனை ஏமாற்றிவிட்டதாய்
துள்ளி குதிக்கும் அந்த சிரிப்பிற்காய்
நான் மீண்டும் காத்திருப்பேன்!