என் குழந்தையும் நானும்! (பகுதி ஏழு)
அப்பா அப்பா என்றழைக்கும்
அந்த இனிய குரல்!
பை நிறைய சுமந்த
உன் -
புத்தகமாகத் தான்
முழுதும்
படிக்கமுடியாமலே
கனக்கிறாய்
எனக்குள்ளும் நீ!
படுக்கையில் -
தலையணை, மெத்தை
போர்வைக்குப் பின்னும்
உன் புதிய வருகையால்
ஏற்பட்ட சின்ன இடைவெளியை,
இருவரையும் சேர்த்து நீ
அனைத்துக் கொண்ட
இறுக்கத்தில் -
நீயாகவே; தீர்த்துக் கொண்டாய்!
காலையிலெழுந்ததும்
கடவுளை பார்ப்பது
நல்லதென்பதில்
எத்தனை உண்மை உள்ளதோ;
உன்னை பார்ப்பதில்
எத்தனை எத்தனை
பரவசமுள்ளதடா...
முத்தம் கொடு என்றால்
உதட்டை கன்னத்தை பிடித்துக்
கடிக்கவோ -
எச்சிலொழுக பார்த்து
சிரிக்கவோ மட்டுமே
தெரியுமுனக்கு;
அதைத் தாண்டி
முத்தமென்றால் இப்படியென
சொல்லாமலேயே -
வரிசையில் நிற்கிறோம்
நானும் -
உன் அம்மாவும்
உன் எச்சிலில் நனைந்த
அந்த - முத்தத்தின் அன்பிற்காய்!
நீ -
என்பதன் அர்த்தம்
உலகம்
வானம்
பூமி
கடல்
காற்று
தென்றல்
அருவி
மழை
மலர்வனம்
மெல்லிசை
பாடல்
கவிதை
புத்தகம்
வியப்பு
பலம்
அதிர்ஷ்டம்
நிம்மதி
ஏதுமில்லை -
குழந்தை என்பதொன்று
பெரிது!!