என் குழந்தையும் நானும்! (பகுதி ஆறு )
நீயோ... ஒரு -
சின்ன அதட்டலில்
மிரண்டு போகிறாய்,
அடித்து விடுவேனோ
என பயந்து ஒடுங்குகிறாய்,
உனக்கான என் கோபம்
உனக்காகத் தான் என்றாலும்
அதத்தனைக்காகவும் எனை
மன்னிப்பாயா?
மழை வருகிறது
நீ ஓடிச் சென்று
மழையில் நனைகிறாய்,
நான் -
ஐயோ மழையில்
நனைந்து விட்டாயேயென
பிடித்து உன்னை வீட்டிற்குள்
அழைத்து வருகிறேன்
தலை துவட்டிவிடுகிறேன்
உன் ஈர விழியிலிருந்து
சுடும் நீர் சொட்டொன்று -
எனை எரிப்பது போல் தரைதொடுகிறது!
குச்சி மிட்டாய்
காட்டுகளக்கா
கைவிரல் அப்பளமென்றால்
உனக்கு கொள்ளை இஷ்டம்,
கடைக்கு போகும்போதெல்லாம்
கேட்பாய்,
வாங்கிக் கொண்ட கணம்
துள்ளி ஒரு குதிகுதிப்பாய்
குதூகலத்தில் கைதட்டி சிரிப்பாய்
அந்த சிரிப்பை காண்பதற்காகவே
சிலநேரம் -
அவசியமின்றி கடைக்குப் போவேன் நான்!
உனக்காக நான்
தேடித் தேடி வாங்கிய
விளையாட்டுப் பொருட்களை
உனக்கு அதிகம் பிடிப்பதில்லை,
உனக்குப் பிடித்ததெல்லாம்
உடைந்த காரும்
வீட்டு உபயோகப் பொருட்களும்
கைகால் இல்லாத பொம்மைகளும் தான்.
சரி வேறென்ன செய்வதென
உடைந்த பொம்மைகளையெல்லாம்
பாதிவிலைக்கு வாங்கிவந்தேன்,
நீ தூக்கி என்மீதெறிந்து விட்டு
புதியது வாங்கித் தா என்றாய்,
நான் புதிய பொம்மைகளைத் தேடி
கடைக்கு ஓடுகிறேன்,
நீ வாங்கிவந்த உடன்
உடைத்துப் போட -
வாசலிலேயே காத்திருக்கிறாய்!