என் கனவைத் தொடங்கிக் கொள்கிறேன் !
அதி காலையில் இருந்து
அந்தி மாலை வரை
காத்திருந்து
அதற்குப் பின்னும்
கருக்கல் கடந்து வரும்
இரவின் நிலவைப் போல்
நீண்ட நாட்களுக்கு முன்
நான் சொன்ன காதலுக்கு
இன்று பதில் சொல்ல வரும்
பொன் மகளே !
நிலவை மறைக்கும்
முகிலைப் போல்
உன் மனதை
மறைத்த மௌனத்தை
கிழித்தெறிந்து
வார்த்தைகளாய் வெளிக் கிளம்பிவரும்
உன் வருகையை வரவேற்கிறேன் !
அங்கே பார் !
கண்களைச் சிமிட்டி சிமிட்டிப்
பார்க்கும் விண்மீன்களைப் போல்
நம்மை உற்று நோக்கி
அலர் பரப்பக் காத்துக் கொண்டிருக்கும் ஊர் !
புன்னகைத்து விடாதே !
பொறாமைத் தீயுடன்
வெந்து விழும்
எரி கற்களாய்
இங்கே சில மனிதர்கள் !
கொஞ்சம் பொறு !
படுக்கையை விரித்துக் கொண்டு
என் கனவைத் தொடங்கிக் கொள்கிறேன் !
அப்போது உன் காதலைச்
சொல்லிச் செல் !
என் கனவைத் தொடர்ந்து கொள்கிறேன்!