[148 ] மாணவா எழுந்து நில்லு!

'தோணுமோ வெற்றி' என்ற
துணுக்கினைத் தூக்கி வீசு!
வேணுமே இவர்போல் என்ற
வேட்கையைப் பிறர்க்குள் வீசு!
மாணவா! எழுந்து நில்லு!
மாண்புகள் பிடித்து வெல்லு!
காண,வா! நல்ல வாழ்க்கை!

ஒய்ந்துநீ இருந்து விட்டால்,
உன்னைவிட் டகலும் வெற்றி!
சாய்ந்துநீ படுத்து விட்டால்
சாய்ந்திடும் உலகின் பெற்றி!
மாய்த்திடு சோர்வை நெஞ்சுள் !
மலர்ந்திடும் துணிவு! நன்மை
ஆய்ந்திடும் செயல்கள் மட்டும்
ஆற்றிடு! அமையும் வாழ்வு!

உழைப்பெனும் ஊறல் தன்னை
ஊற்றியே குடிடா ! மேனிக்
கொழுப்பெனும் அசதி குன்றக்
குறைகளைக் களைடா! வானம்
வெளுப்பது போல வாழ்வும்
விடிவதை உணர்வாய்! ஊரின்
பழிப்பெலாம் மறையும் காலைப்
பனியென! களிடா! வாழ்க!
-௦-

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (9-Mar-12, 4:00 pm)
பார்வை : 219

மேலே