பெண் கவிஞர்கள்
கவிஞர் பிரியாராம் பெண் கவிஞர்கள் குறைவு என்றும், ஆண் கவிஞர்கள் காதலைப் பற்றியே எழுதுகிறார்கள் என்றும் வருத்தப்பட்டு, சமுதாய நோக்கு உள்ள பிற கவிதைகளையும் எழுத வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.
நான் கவனித்த அளவில் இத்தளத்தில் 18 வயது முதல் உள்ள இளம் கவிஞர்கள், ஆண் பெண் இருபாலாரும், காதல் கவிதைகள்,காதல் தோல்வி கவிதைகளை எழுதுவதாக உணர்ந்தேன். காதல், காதல் தோல்வி, மரணம், கல்லறை என்று பலவிதமாக எழுதக் கண்டு மனம் வருந்தினேன். 'கசல்' என்பது ஒரு வகையான காதல் தோல்விக் கவிதைகளாம்.
காரைக்கால் அம்மையார், ஆண்டாள் - பெண் கவிஞர்கள் வரிசையில் முக்கியமானவர்கள். முதல் தமிழ்ச் சங்கம் 549 புலவர்கள், இரண்டாம் தமிழ்ச் சங்கம் 449 புலவர்கள், மூன்றாம் தமிழ்ச் சங்கம் 468 புலவர்கள், மொத்தம் 1446 புலவர்களில் 32 பேர் மட்டுமே பெண் புலவர்களாவர்.
முன்பெல்லாம் சங்க காலங்களில் கவிதை எழுதுவது இலக்கணத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும். இயற்றிய கவிதைகளை கற்றவர்கள் சபையில் அரங்கேற்ற வேண்டும்.
எல்லா பெண் கவிஞர்களுமே மிகக் குறைந்த அளவே எழுதி இருக்கிறார்கள். குடும்பச் சூழ்நிலை காரணமாக பெண்களுக்கு கல்வி கற்கவும், பொது அரங்கில் அரங்கேற்றவும் வாய்ப்பு குறைவாக இருந்திருக்கலாம்.
இன்று வலைத்தளத்தில் எழுதி வரும் நாமே கவிதைகள் நூற்றுக்கு மேல் பதிவு செய்யும்போது, அவ்வையார் அகநானூறு 5, புறநானூறு 33, குறுந்தொகை 15, நற்றிணை 7 என்று மொத்தம் 60 கவிதைகள்தான் எழுதியிருக்கிறார்; ஒக்கூர் மாசாத்தியார் பாடிய பாடல்கள் அகநானூற்றில் இரண்டும் (பாடல்:314, 384), குறுந்தொகையில் ஐந்தும் (பாடல்: 126, 139, 186, 220 மற்றும் 275) புறநானூற்றில் ஒன்றுமாக (பாடல்: 279) என்று மொத்தம் 8 கவிதைகள்தான் இடம் பெற்றுள்ளது என்னும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
19 ஆம் நூற்றாண்டு அமெரிக்க பெண் கவிஞர் எமிலி டிக்கின்சன். இவர் தன் வாழ் நாளில் 'Safe in their Alabaster Chambers' உட்பட 7 கவிதைகளை மட்டுமே 'Springfield Daily Republican' என்ற பத்திரிக்கையில் 1862 ல் வெளியிட்டுள்ளார்.
இவர் மரணத்துக்குப் பின் (1886) இவர் சகோதரி, Lavinia சிறு சிறு கோப்புகளாக நூலில் கட்டப்பட்ட சுமார் 1000 கவிதைகளை தேடி எடுத்தார். இவைகளை சரியான முறையில் தொகுத்து, Mabel Loomis Todd மற்றும் Thomas Wentworth Higginson என்ற இலக்கிய விமர்சகர்கள் மூன்று தொகுப்புகளாக 1890, 1891 மற்றும் 1896 ல் வெளியிட்டனர்.
சங்க காலத்தில் கவிதைகள் புலவர்கள் சபையில் அரங்கேறினால்தான் அங்கீகரிக்கப்படும். தான் எழுதாத பாட்டைக் கொண்டுவந்து தருமி சபையில் பட்ட பாட்டை நாம் அறிவோம். இன்றைய காலகட்டத்தில் கணினி பயன்பாட்டினாலும், இணையதள அறிமுக வசதி இருப்பதாலும், நாம் எழுதுவதெல்லாம் பரிசீலனை இன்றி வெளியாகின்றன.