"பெண்"மாலை

அதோ...........
அந்த சூரிய பெண்
காரிருள் கணவனை
தழுவ போவதை எண்ணி
வெட்க பூ பூத்துவிட்டால்;
வான வனாந்திரமும்
சிவப்பை உடுத்தி
உவகை கூட்டியது;

நாள் முழுவதும் உலாவியவள்
நாயகனை குலாவுவதை எண்ணி
வெட்க பூ பூத்த நேரத்தில்
தென்றலது வடை காற்றாய்
அவள் ஆடை தொட‌
அணைக்க முடியா அத்தீ
அவனை அணைக்க‌ வளைந்ததால்
குறுகி அத்தீ "அந்தீ"யானதோ.......?!!

அவளின் அணைப்பில்; ஆனந்தத்தில்
மயக்கத்தில் மதிமயங்கியிருந்த அவன்
வளைந்த அவள்கரத்தின்
மஞ்சள் நிறம் கண்டு
"மாலை"என்றானோ........!!?

காதல் போதையில்
காரிருள் மார்பில் அவள் சாய்ந்தை கண்டு
என் முப்பாட்டன் கிறுக்கன்,
அவள் சாயும் காலம்
ஆதலால் அதை
சாயுங்காலம் என்றழைத்தனோ............!!?

அந்தியில் அந்த வானத்தில்
அவள் விட்டுசென்ற‌
வெட்க பூக்களை
கன்னத்தில் சூடித்தான்
மங்கையரும் காதலரை
கவிழ்த்து விட்டனரோ.......?!!

எது எப்படியிருந்தால் என்ன
என் முன்னவன் ஒருவன்
"பொன்மாலையை எழுதா
எழுதுகோலெல்லாம்
முடமாகி போகட்டும்"
என்றளித்த சாபத்தில்
என் கோல் தப்பியது
எனக்கது போதும்.....

எழுதியவர் : கவிதை கிறுக்கன் (22-Mar-12, 4:02 pm)
பார்வை : 193

மேலே