[170 ] ஒளியின் முகங்கள்!
குழந்தை முகத்தில் சிறுவிதழில்
குலவும் நகையின் ஒளிதானோ
கொழுந்துச் சுடரோன் கீழ்த்திசையில்
குழைத்துத் தீட்டும் நிழலோளிதான் !
மழலைச் சிறுவர் இளமுகத்தில்
மண்டும் குறும்பின் ஒளிதானோ
மழையைச் சிதறும் கருமேகம்
மலரச் செய்யும் மின்னோளிதான்!
ஆரவாரம் கொள் இளைஞர்
அடக்கா நகையின் ஒளியோசொல்
பேரலைகள் புரண்டுவரப்
பெரிதாய் எழும்பும் நுரையோளிதான்!
கருத்தைக் கவர்வான் முன்வேட்கம்
கவிழ்த்த முறுவல் ஒளியோடா
பருத்த மேகத் திரையுள்ளே
பதுங்கும் நிலவின் இளவொளிதான் !
நின்றாள் வெட்கம் நினைத்தவனின்
நீர்த்த இதழின் ஒளியோடா
அன்றப் பொழுதே அலரும்மலர்
அழகேறு இதழின் புத்தொளிதான்!
காதல் இருவர்க்கு அலர்கூட்டிக்
கண்கள் சிமிட்டும் ஒளியோடா
கூதிர்ப் பருவ விண்மீன்கள்
கூடிச் செய்யும் கூரோளிதான்!
உச்சி வெயிலான் ஊனுருக்க
உருக்கும் வெள்ளி ஒளியோடா
நச்சுக் கண்டன் திரிபுரத்தை
நசிக்க நகைத்த பேரொளிதான்!
-௦-