ஒரு அப்பனின் மௌன புலம்பல்
ஒரு அப்பனின் மௌன புலம்பல்....
தள்ளாத வயசாச்சு
தளர்ந்து போன உடலாச்சு..,
சொல்லித்தான் தெரியனுமா
நான் சோறு போட்ட மக்களுக்கு..,
மடிமீது போட்டதுக்கு
என்னை மண்ணுலத்தான் போடணுமா..,
கிழிஞ்ச துணி போட்டா கூட
இந்த கிழ உடம்ப சாய்ச்சிருப்பேன்..,
கண்ணா பார்த்ததுக்கு
உன் கருப்பு மனச காட்டிபுட்ட..,
மண்ணு குத்துதப்பா
இந்த அப்பன் வலி புரியலையா..,
நெஞ்சு எரியுதய்யா
என் முதுகெல்லாம் புண்ணா போச்சு..,
என் பொண்டாட்டி இருந்திருந்தா
என்னை பொத்தி பொத்தி பார்த்திருப்பா..,
அந்த பொசக்கெட்ட கிறுக்கச்சிக்கு
இந்த புள்ளங்க மனசு தெரிஞ்சிருக்கு..,
அன்பா நடந்துக்குவா
என் ஆசையுள்ள கருத்தழகி..,
இன்று அவனே முழிக்கட்டும்னு
அவ முந்திகிட்டு போயிருக்கா..,
ஆம்பள புள்ள பெத்தேன்னு
நான் ஆடு வெட்டி சோறு போட்டேன்..,
ரெண்டு சிங்கம் பொறந்ததுன்னு
நான் தெம்பா கொஞ்சம் நடந்துகிட்டன்..,
கண்ண மறைச்ச பாசம்
என் கழுத்தறுத்து போயிடுச்சே..,
பசி கிடந்து பார்த்த பாசம்
என்னை பரதேசி ஆக்கிடுச்சே..,
மூட்டை சுமந்ததுக்கு
நான் முட்டாளா ஆனேனே..,
தோலு மேல தூக்கிகிட்டு
நான் தொலைதூரம் நடந்தேனே..,
பாடையில போறதுக்கு
இன்னும் பாதி நாளு வாழணுமோ..,
மானங் கெட்ட உசிர் இதுக்கு
இன்னும் நாளு வந்து சேரலையே....!!!