முடியும்முன் ஒரு முன்னோட்டம்
மூச்சுக்கொரு முறை திரும்பிப்பார்த்து,
முகம் சுழித்துக்கொண்டே போனது பள்ளிக்காலங்கள்...
தன்னந்தனியாக தள்ளிவிடப்பட்டேன்,
தடுக்கி விழுந்தது மனது.. முதலும் கடைசியுமாக..
புத்தகம் பேனா பென்சில் போல
புதியதாய் ஒரு வாசத்தில்
முதலும் கடைசியுமாக முளைத்துகொண்டேன்..
காட்சிகளின் பிம்பகளில் கரைபுரண்டு
கைகோர்த்து நடந்த மழைக்காலத்தில்,
முதலும் கடைசியுமாக நனைகிறேன்...
வெறுமனே வீணடித்த பொழுதுகளில்,
"வெள்ளைத்தாள் கூட
வியர்வையின் விடைத்தாள்" என்று
தட்டிகொடுத்த உனது தோள்களில்
முதலும் கடைசியுமாக சாய்ந்துகொள்கிறேன்..
" நான்" என்ற வார்த்தையை திருடியது நீ,
பிரிவு என்னும் சிறைவாசம் மட்டும் எனக்கெப்படி?
அதிசயமான பறவையடா நீ...
ஆயிரம் நாட்கள் அடைகாத்து,
ஆசையாக எனக்கு,
இப்படி ஒரு தனிமையை
ஈவிரக்கமின்றி அனுபவிக்கச்சொல்லி,
உயிரோடு என்னை ஒவ்வொரு கணமும்
ஊசலாட வைக்கிறாய்..
எதற்காக இந்த "பிரிவு"?
ஏதோ ஒரு சத்தம் மட்டும் எனக்குள்
ஐக்கியம் ஆகிவிட்டது.
ஒரெ ஒரு முறை
ஓடிச்சென்று கட்டி அணைத்து
அக்கணமே திரும்பிவிட்டேன்.
வராமல் உன்னிடமே நிற்கிறது
வீணாய்ப்போன மனது..
தன்னந்தனியாக தள்ளிவிடப்பட்டேன் -திரும்பவும்,
தடுக்கி விழவில்லை மனது,
தாங்கிக்கொள்ள நீ இருக்கும் தைரியத்தில்..
இதயம் கூட சில நேரங்களில்,
இடம் மாறலாம் - காதலில்..
அங்கிருக்க ஆசை இல்லை..
ஏய்,
நீ அழுதுவிடாதே..
உருண்டு விழுந்து விடுவேன்..
உனது கண்களில் எப்பொழுதுமே " நான் "