நந்தவன நாகூரின்..சந்தன சாஹிபே..

எழுத தெரியாத என் கவிதைக்குள் எழுத்தாய் இங்கு வருவீரே..
எழுதும் எந்தன் எழுத்துக்குள் புதிய ஏக்கம் தந்தீரே..
எல்லாம் வல்ல ஏகன் தந்த என் குல கோமானே..
உம் பிரிவு எம்மை வாட்டுதைய்யா...உம் பிரிவு எம்மை வாட்டுதைய்யா..

பாசங்கில்லா பாசமே.. பாசத்தின் பக்குவமே...
பக்குவத்தின் பிறை நிலவே..பிறை நிலவின் பாத்திஹாவே..
பாத்திஹாவின் பாதியமே..பாதியமே.. பாதியமே..
எங்கள் குடும்ப பாசத்தின் பாதியமே..

தாய் மாமா உறவுமுறை .. தரணி புகழ் அறிந்த ஒன்று..
தாய் மாமா என்பதைவிட என் தாய்க்கு மா ஆக ( அம்மா )
வாழ்ந்த என் தாத்தாவும் நீர்தானே..
என் அம்மாவுக்கும் ஆத்தாவும் நீர்தானே..

உங்கள் நினைவுகளின் நெரிசலில் சிக்கி தவிக்கும்
வாகனமாய் எங்கள் இதயம் இன்று...
சில நாட்களில் வீதிகள் காலியானாலும்
நகர மறுக்கும் வாகனமாய் இருக்கிறதே.. .

வீசும் காற்று .. வேஷம் போடாது..
உங்கள் பேச்சின் வீச்சுக்கள் பாசாங்கில் படியாது..
கடலின் அலைகளுக்கு அர்த்தம் தந்த ஆதியே..
உன் பொற் பாதங்களில் என்றென்றும் ஆகிறோம் சரணாகதியே ..

சந்தன சாஹிபே...
மனசில் பட்டதை சட்டென்று கூறும் நீங்கள்...
கடைசி நிமிடத்தில் என்னிடம் கூறியதை
எங்கு போய் சொல்வேன்.. சொல்லுங்கள்...

உங்களோடு நான் நடந்த நேரத்தில் குறைந்தது
தூரம் மட்டுமல்ல.. என் துயரமும் தான்...
உங்களோடு நான் பேசிய நேரத்தில் நிறைந்தது...
மார்க்க அறிவு மட்டுமல்ல.. என் மனசும் தான்...

மொடமொடக்கும் கூர் உயர தொப்பி..கம்பீர கருப்பு கண்ணாடி...
கேலி பேச்சினில் நல் கருத்தை உள் விதைக்கும்
விந்தைமிகு வாஞ்சிய தலைவன் உங்களைவிட வேறு யாரும் இல்லை..
வசீகர புன்னகை.. உங்கள் சிரிப்பில் மயங்கா உள்ளங்கள் உண்டோ..

அருள் வழங்கும் அழகிய குரல் வளம் ... கேட்போரெல்லாம் உள்ளம் உருகுவர்..
பார்ப்போரிடமெல்லாம் காட்டிய கனிவு... கடைசி கூட்டத்தில் தெரிந்ததம்மா..
தர்மத்தின் தலைவர்.. தர்காவின் தலைவர்.. தலைமையின் தலைவர்..
எல்லாம் தந்த எல்லாம் வல்ல அல்லாஹ்..உங்கள் ஹயாத்தை நீட்டிருக்க கூடாதா ???

அழுகாத கண்கள் அன்று ஆண்டவனால் ஹராமாக்க பட்டதோ ?
கண்ணீர் சுமந்த கண்கள் இல்லா விழிகளே இல்லை...
கவலை தோய்ந்த முகங்கள்.. எல்லையோ எல்லை...
நாகூர் கண்டிராத கூட்டம் அது..

ஒன்று கூறுவேன்...அதை உறுதியாக கூறுவேன்..
விதைத்தவர் நீங்கள் உறங்கலாம்.
விதைகள் உறங்காது....
நீங்கள் விதைத்த விதைகள் நாங்கள்...

எழுதியவர் : கலிபா சாஹிப் (15-Apr-12, 12:06 pm)
பார்வை : 314

மேலே