நானும் நக்ஸலைட் ஆகிறேன்.....
என்ன செய்யச் சொல்கிறாய்
என்னை?
சொல்லடி
என்ன செய்யச் சொல்கிறாய்
என்னை?
வேறு வழியில்லை!
ஆம்,
ரத்தத்தை
வேர்வையாய்ச் சிந்தி
வாங்கிய சுதந்திரம்
வீணர்களின் உள்ளங்கையில்
ரேகையாய் அடங்கிய பிறகும்...
காந்தியின்
அஹிம்சை கூட
ஆண்மையற்றவனின்
அடையாளமாய்
ஆகிவிட்ட பிறகும்...
எம் தேசியக் கொடியின்
மூவர்ணம் கூட
பிரிவினை வாதத்தின்
பேருரையாய்ப்
பிறழ்ந்துவிட்ட பிறகும்....
என்னடி செய்யச் சொல்கிறாய்
என்னை?
வேர்வை வற்ற வற்ற
உழைத்தும் கூட
வறுமை வற்றவில்லையே என்று
வயிறு எரிவோரை
கண்ட பிறகும்...
போலிச் சாமியார்களோடு
போட்டிபோட முடியாமல்
கோவில் சாமிகளெல்லாம்
காவி கட்டி
கண்மறைவாய்ப் போன பிறகும்....
பாட்டாளியின் உரிமைகளெல்லாம்
பாஞ்சாலியின் புடவையாய்
உருவப்படுமொரு சமூகத்தில்....
கிருஷ்ண பரமாத்மாக்கள் எல்லாம்
கோபியர்களைக்
கொஞ்சி கொஞ்சியே
களைத்துக் கிடப்பதைக்
கண்ட பிறகும்....
என்னடி செய்யச் சொல்கிறாய்
என்னை?
ரத்தத்தை விற்று
தண்ணீர் வாங்குவதென்பது
தவிர்க்க முடியாத
தலையெழுத்தாய் ஆகவிருக்கும்
தேசத்தில்...
ஓட்டுரிமை
ஒன்றைத் தவிர
ஒட்டுமொத்த உரிமைகளும்
பறிக்கப் பட்டுவிட்டதொரு
அடிமைச் சமூகத்தில்...
மதங்கள் வீசிகின்ற
கத்தியில்
தெய்வத்தின் தலை
துண்டாகுமொரு
துயரப் பொழுதில்...
என்னடி செய்யச் சொல்கிறாய்
என்னை?
தேசமே
பற்றி எரிந்துகொண்டிருந்தாலும்
காதலுக்குத் தீக்குளிப்பதைக்
கொள்கையாக்கி வைத்திருக்கும்
குருட்டு இளைஞர்களுக்கு
இடையில்....
கட்சிக் கொடிகள்
படபடக்கும் காற்றில்
தேசியக் கொடியே
கிழிந்துவிடுமொரு
அபாயச் சூழலில்.....
என்னடி செய்யச் சொல்கிறாய்
என்னை?
போர்வாளாய் அவதரித்தும்
புல்லை அறுத்துக்கொண்டிருப்பதோ?
வேறு வழியில்லை!
இதோ
இவன் கையில் இருப்பது
எழுதுகோலன்று
துப்பாக்கி...
மெய்யை நிலைநாட்ட
மையாய் வழியும்
துளிகள் ஒவ்வொன்றுமே
தோட்டாக்கள்...
ஆம்,
வேறு வழியில்லை
நானும்
நக்ஸலைட் ஆகிறேன்...
---------ரௌத்திரன்