இஞ்சிக்குடி கோயில் தல வரலாறு:
"துர்வாச" முனிவரின் தவத்தைக் கலைத்ததால், அவரின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளானாள் "மதலோலை" எனும் அரக்கி. அதன் விளைவாக "அம்பரன்,அம்பன்" ஆகிய அசுரக் குழந்தைகளைப் பெற்றெடுத்தவள், ஈன்றதும் இறந்து போனாள். வளர்ந்து பெரியவர்களான அசுரர்கள், கொடுமைகள் பல புரிந்தனர்.அதைப் பொறுக்க முடியாமல் சிவனாரிடம் தஞ்சம் புகுந்தனர் தேவர்கள். ஈசன் புன்னகையுடன் தன் தேவியைப் பார்த்தார். அவரின் குறிப்பறிந்த அம்பிகை, அசுரர்களை அழிக்க, அழகிய கன்னிப் பெண்ணாக உருவெடுத்தவள், அரக்கர்கள் முன் தோன்றினாள். இருவரும் அவள் மீது மையல் கொண்டனர். இந்த நிலையில், வயோதிக அந்தணராக வந்தார் பெருமாள். அசுரர்களிடம் சென்று, ஒரு பெண்ணை நீங்கள் இருவரும் எப்படிச் சொந்தமாக்கிக் கொள்ள முடியும் ? உங்களில் வலிமையான ஒருவருக்கே அவள் சொந்தமாவாள் என்று கூறிச் சென்றார்.
அவ்வளவுதான்... அசுர சகோதரர்களுக்கு இடையே பலப்பரீட்சை துவங்கியது. அம்பன் அழிந்தான்; அம்பரன் ஜெயித்தான். அம்பாளைத் தேடி வந்தான்.அப்போது, மகா காளியாக (அம்பகரத்தூர்) உருவெடுத்து நின்றாள் தேவி. பயந்து போன அசுரன், வடக்கு நோக்கி ஓடினான், அவனைத் துரத்திச் சென்று, தனது சூலாயுதத்துக்கு இரையாக்கினாள் அம்பிகை, அசுர வதம் முடிந்ததும், உக்கிரம் தணிந்து, மீண்டும் ஈசனின் இடப்பாகம் அடையவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் பெருமாள் (இஞ்சிக்குடி). தேவியும் உக்கிரம் தணிந்து, அருகில்இருந்த சந்தனமரக் காட்டுக்கு வந்து,மண்ணில் லிங்கம் பிடித்துவைத்து வழிபட ஆரம்பித்தாள். உரிய காலம் வந்ததும் சிவனார் தோன்றி, தேவியை தன் இடப்பாகத்தில் ஏற்றார் "சந்தனவனம்" என்னும் இஞ்சிக்குடியில்...