முகவரி இல்லாத முகங்கள் 2

அநேகமாக எங்கள் விலாசங்கள் இந்தியாவின்
எல்லா தபால் நிலையங்களின் முத்திரைகள்
குத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது .
ஆனால் இன்று வரை முகவரி இல்லாத
முகங்களாக வாழ்ந்து வருகிறோம்

நாங்கள் எப்போதோ மேஜர் ஆகிவிட்டோம்
ஆனால் இன்று வரை பெற்றோரை
எதிர்பார்த்தே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

எங்களை நீங்கள் வீட்டிலே பார்க்க இயலாது
தெரு வீதியிலே பார்க்கலாம்
நாங்கள் வேலை தேடி அலைந்தே

வெள்ளி விழா கொண்டாடி
வைர விழா நோக்கி வெற்றி நடை
போடுபவர்கள்.

நாங்கள் பிச்சை பாத்திரம் ஏந்தி
யாசகம் கேட்கவில்லை அட்டை பத்திரம்
ஏந்தி அடைக்கலம் தான் கேட்கிறோம்.

எங்களின் தினசரி தகராறு உழைப்புக்கு
ஏற்ற ஊதியம் இல்லை என்பது?
ஆனால் நாங்கள் இன்றும் தினசரி
வாசிக்கும் இந்திய வரலாறு
வேலை காலி இல்லை என்பது.?
இந்த வாசகம் எங்கள் பாடப்புத்தகத்தில்
அன்று எந்த பக்கத்திலும்
அச்சடிக்கப் படவில்லை.

எங்கள் கண்களிலேயே ஒளி இல்லாத போது
நாங்கள் எப்படி இந் நாட்டின் ஒளி மிகு
கண்களாக இருக்க முடியும்.?

ஏமாற்றங்களாலேயே எங்களில்
எத்தனையோ பேர் இன்று
ஏமாற்றுக்காரர்கள் ஆகிப் போனார்கள்


சோக புயல்கள் எங்களின்
முகங்களில்தான் மையம் கொண்டுள்ளது .
வேதனைகள் எங்களின் வெறும்
பார்வையில் தான் தங்களின்
விலாசங்களை குறித்து வைத்துள்ளன.
இப்படி வேதனையின் விலாசங்களும்
சோகங்களின் பரிகாசங்களும்
குடி கொண்டுள்ள எங்களின்
முகங்களை நேர் முகத்தேர்வில்
தெரிவு செய்ய யாருக்குத்தான்
எண்ணம் வரும்?.

பட்டதாரிகளாக அங்கீகரிக்கப்பட்ட
எங்களில் பலபேர் வேற்று தாரிகளாக
மாறிப்போனர்கள்.

எங்களை நம்பியே எமது பெற்றோர்
எத்தனையோ பெத்து விட்டார்கள்.
இன்று இலவசங்களில்
வாழவும் கற்றுவிட்டார்கள்.
இலவசங்களை தருகின்ற அரசு
எங்களுக்கு விலாசங்களை
தந்து எங்களின் அடைமொழியான
வேலையில்லாத என்பதை நீக்கலாமே.


இனி ஒரு சட்டம் கொண்டுவரலாம் !
முதல் குழந்தையின் வேலை தான்
அடுத்த குழந்தையின் இடைவெளி .
இதனால் வேலை இல்லா திண்டாட்டமும்
ஒடுங்கி விடும் மக்கள் தொகை
பெருக்கமும் அடங்கி விடும்

எங்களைப் பிடித்த இந்த பினி
இந்த நாட்டை மட்டுமல்ல!
எந்த நாட்டையும் நடுங்க வைக்கும்
ஏழரை நாட்டு சனி

ஓன்று மட்டும் சொல்லிக்கொள்ளஆசைபடுகிறோம்
எங்கள் பெருமூச்சுகள் இன்று
வேருமூச்சுகளாக இருக்கலாம்.
அவை ஒன்றோடொன்று உரசி
தீ பிடிக்கும் போது சீர் படுத்திக்கொள்ள
இந்நாட்டில் எதுவுமே இருக்காது.

இருந்தாலும் இன்று நாங்கள் யார் என்று தான்
கேட்க்கப்படுகிறோம்
தேடிக்கொண்டு தான்
இருக்கிறோம் மீண்டும் ,மீண்டும்.
இன்றும் முகவரி இல்லாத முகங்களாய்
எங்களின் முகவரிகளை தேடி கொண்டுதான்
இருக்கிறோம்

நாங்கள் வேலை இல்லா பட்டதாரிகள்(படித்த)

எழுதியவர் : கோபி கிருஷ்ணன் (21-Apr-12, 7:48 pm)
பார்வை : 487

மேலே